கோவை பைபாஸ் ரோட்டில் லாரி டிரைவரை கொன்று பணம்-செல்போன் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டூழியம்
பதிவு செய்த நாள் :
ஞாயிற்றுக்கிழமை,
ஜூலை 17,
6:06 PM IST
இருகூர், ஜூலை. 17-
கேரள
மாநிலம் கொச்சியில் இருந்து முந்திரி பருப்பு ஏற்றிக்கொண்டு கொல்கத்தா
செல்வதற்காக லாரி ஒன்று கோவை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை ஈரோட்டை
சேர்ந்த டிரைவர் கருப்புசாமி (42) என்பவர் ஓட்டி வந்தார்.
உதவி
டிரைவராக குணசேகரன் என்பவர் இருந்தார். லாரி இன்று அதிகாலை 4.30 மணி
அளவில் கோவை பைபாஸ் ரோடு பட்டணம் பைபாஸ் என்ற இடத்தில் வரும்போது சிறுநீர்
கழிப்பதற்காக டிரைவர் கருப்புசாமி லாரியை நிறுத்தினார். சிறுநீர்
கழித்துவிட்டு லாரியின் டயர்களை கருப்புசாமி சோதனை செய்து கொண்டிருந்தார்.
அப்போது காட்டு பகுதியில் இருந்து முகமூடி அணிந்தபடி வந்த 5 பேர் கும்பல்
உதவி டிரைவர் குணசேகரனின் கை, கால்களை கட்டி அருகில் உள்ள பள்ளத்தில் தள்ளி
விட்டனர்.
பின்னர் கருப்புசாமியிடம் சென்று
லாரியில் இருக்கும் பணத்தை தரும்படி கூறினர். ஆனால் அவர் மறுத்ததாக
தெரிகிறது. உடனே அந்த கும்பல் கருப்புசாமியை சரமாரியாக கத்தியால்
குத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் டிரைவர் கருப்புசாமி மயங்கினார்.
பின்னர் லாரியில் மறைத்து வைத்திருந்த ரூ. 45 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும்
கருப்புசாமியிடம் இருந்த 2 செல்போன்களை கொள்ளையடித்தனர்.
பின்னர்
பள்ளத்தில் கிடந்த டிரைவர் குணசேகரனை அவிழ்த்து விட்டு கருப்புசாமியை
குத்திவிட்டதாகவும் அவரை காப்பாற்றிக்கொள் என்று கூறி விட்டு 5 பேர்
கும்பல் தப்பி ஓடிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த குணசேகரன் ஓடிவந்து
கருப்பசாமியை பார்த்தார். அங்கு கருப்புசாமி ரத்த வெள்ளத்தில் பரிதாபமான
முறையில் இறந்து கிடந்தார்,
இது குறித்து குணசேகரன்
சூலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் போலீஸ் சூப்பிரண்டு
உமா, டி.எஸ்.பி. பாலாஜி, இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு
விரைந்து சென்று ஆய்வு செய்தனர். மேலும் பிணத்தை மீட்டு பரிசோதனைக்காக
கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது
குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரை கொன்று பணத்தை
கொள்ளையடித்து சென்ற கும்பலை தேடிவருகின்றனர். கோவையில் லாரி டிரைவரை
கொன்று கொள்ளையடித்து சென்ற சம்பவம் லாரி டிரைவர்களிடையே அச்சத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக