சனி, 19 ஏப்ரல், 2014

பஸ் ஓட்டுநர்கள்–பயணிகள் அவதி

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.   

                மணப்பாறை பஸ் நிலையத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட தரைக்கடைகளால் பஸ் ஓட்டுநர்கள்–பயணிகள் அவதி விபத்து நிகழும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?


மணப்பாறை,
              மணப்பாறையில் உள்ள பஸ் நிலையத்தின் மையப்பகுதி வரையிலும் தரைக்கடைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அடுத்து பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகும் நிலையை அதிகாரிகள் உணர்ந்து நடவடிக்கை எடுப்பார்களா? என பயணிகள்,பஸ் ஓட்டுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நூற்றுக்கணக்கான பஸ்கள்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நகரின் மையப்பகுதியில் பஸ் நிலையம் உள்ளது. இந்த பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் வந்து செல்கின்றது.குறைந்த அளவே பஸ்கள் வந்து சென்று கொண்டிருந்த இந்த பஸ் நிலையத்தில் தற்போது அதிகமக்கள் தொகை, நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களால் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றது. மேலும் வட மாவட்டங்களில் இருந்தும் திண்டுக்கல், தேனி, கம்பம், போடி, பெரியகுளம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, பழனி, கேரளா, பாலக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றால் மணப்பாறை பஸ் நிலையம் தான் வந்து செல்ல வேண்டும்.
தரைக்கடைகள்
முதன் முதலாக பல ஆண்டுகளுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பஸ் நிலையம் எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி ஏதோ பெயரளவில் மட்டும் பஸ் நிலையம் என்று இருந்தாலும் கூட மக்கள் நிற்பதற்கு கூட இடமில்லாமல் வெயிலிலும், மழையிலும் நின்று தான் ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க தனக்கு வருமானம் வந்தால் போதும் என்ற நோக்கில் பஸ் நிலையத்தை நகராட்சியின் மூலம் ஏலம் எடுத்திருக்கும் குத்தகைதாரர்கள் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை.பஸ் நிலையத்தின் உள்பகுதி முழுவதும் யார்? எங்கு தரைக்கடை அமைத்தாலும் பரவாயில்லை என்று கூறி அதற்கு அனுமதி வழங்கி வருகின்றனர். பஸ் நிலையத்திற்குள் தரைக்கடைகள் அமைக்ககூடாது என்பது தான் மணப்பாறை நகராட்சி விதி. ஆனால் அதற்கு நேர்மாறாக செயல்பட்டுக் கொண்டிருப்பது தான் மணப்பாறை பஸ் நிலையம்.
நடுரோட்டில்
மணப்பாறை பஸ் நிலையம் என்பது ஏதோ பஸ் வந்து செல்ல முடியுமே தவிர 5 முதல் 10 பஸ்கள் நின்றாலே பஸ் நிலையம் போதாது என்ற நிலையில் சாலையின் மையப்பகுதியில் பஸ்கள் வந்து திரும்புகின்ற இடத்தில் தரைக்கடைகாரர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு கடையை நடுரோட்டில் அமைத்துக்கொள்வது தான் வேதனையான விஷயம். அவசர கோலத்தில் வருகின்ற பஸ்களின் ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கடைக்காரர்களிடம் மனவேதனையை தெரிவித்து விட்டு தான் செல்கின்றனர் என்றாலும் கூட அதைப்பற்றி யாரும் கண்டு கொள்வதில்லை.
விபத்துக்கள் தடுக்கப்படுமா?
பஸ் நிலையத்தில் பணியில் போலீசார் இருந்தாலும் நகராட்சி ஆணையர் பார்வையிட்டாலும் கூட அதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் தான் செல்கின்றனர். இப்படி அதிகாரிகளின் அலட்சியத்தால் ஒரு பெரிய அளவில் விபத்துகள், அசம்பாவிதங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது. ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் பஸ் நிலையத்தில் உள்ள தரைக்கடைகளை அகற்றி மக்கள் அதிக அளவில் நின்று செல்ல வழிவகை செய்வதுடன் தரைக்கடைகளை அகற்றியும், தொடர்ந்து தரைக்கடைகள் அமைக்காமல் இருந்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும், அசம்பாவிதங்கள் நிகழாமல் பாதுகாத்திட வேண்டும் என்று பொதுமக்களும், பயணிகளும்,ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக