மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
சாரதிகளின் மறுபக்கம்.
இந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தாலும் நம்மோடு பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக அவ்வப்போது காற்றைக் கிழித்துக் கொண்டு சர் சர் என்று பாயும் பல கார்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.
சென்னையில் மட்டும் ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யு, லான்சர், ஸ்கோடா, ரெனால்ட் நிசான், மகிந்த்ரா எனப் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில், பணி புரியும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து முன்னூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மாருதியின் மானேசர் ஆலையிலோ அதைவிட அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் உள்ளன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள். அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.
சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையைச் சுற்றி தமிழக லாரிகளோடு இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, அரியாணா, உ.பி, ம.பி, குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், நாகாலாந்து என்று நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான லாரிகள் கார்களை ஏற்றிச் செல்வதற்காக நின்று கொண்டிருக்கின்றன. பல லாரிகள் பதினைந்து நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.
இங்கிருந்து டெல்லிக்கு ஹூண்டாய் கார்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு அங்கிருந்து மாருதி லோடு கிடைக்கும். அதை ஏற்றிக்கொண்டு மாருதி கார்கள் எங்கே சொல்கிறதோ அங்கே போக வேண்டும். ஹூண்டாயிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அனுப்பினால் ம.பி.யில் இறக்கிவிட்டு, அடுத்த லோடுக்காக காலி லாரியை ஓட்டிக்கொண்டு மானேசருக்கு தான் செல்ல வேண்டும். அதே போல மாருதி ஏற்றிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வரும் லாரிகள் கேரளாவிற்கு சென்றால் அங்கிருந்து லோடுக்காக சென்னைக்கு தான் வர வேண்டும்.
கார்களை ஏற்றிச் செல்லும் இந்த கண்டெய்னர் லாரிகளை நிறுத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி பல ஏக்கர்கள் பரப்பில் காலி மைதானங்கள் இருக்கின்றன. முதலில் அத்தகைய மைதானம் ஒன்றிற்குள் நுழைந்தோம். சுற்றிலும் நூற்றுக்கணக்கில் லாரிகள். அந்த மைதானத்தின் மொத்தப் பரப்பளவு பதினாறு ஏக்கர்கள். இரண்டு லாரிகளுக்கிடையிலான இடைவெளியில் சில ஓட்டுநர்களும் கிளீனர்களும் அமர்ந்து ஓய்வெடுப்பதைக் கண்டு அருகில் சென்றோம்.
தனது லாரி மீது சாய்ந்து கொண்டிருந்த தர்மேந்திர சிங் பீகார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளாக லாரி ஓட்டுகிறார். வண்டியின் முதலாளி பீகாரில் இருக்கிறார். “பீகாரிலிருந்து கிளம்பும் போது சரக்கு எதுவும் கிடைக்காது. ஏன்னா அங்க தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அதனால ஒன்னு ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர், இல்லைன்னா மேற்கு வங்கத்துக்கு போய் டாடா வண்டிகளை ஏத்திக்கிட்டு அங்கிருந்து எங்க போகச் சொல்றாங்களோ அங்கே போவோம்.”
“தில்லி கிடைச்சா அங்கே இறக்கிட்டு, மானேசரிலிருந்து மாருதி ஏத்திக்குவோம். தென்னிந்தியாவுக்கு கிடைச்சா எங்க இறக்கணுமோ அங்க இறக்கிட்டு சென்னைக்கு வந்துருவோம். இங்கிருந்து லோடை ஏத்திக்கிட்டு அடுத்த ஊருக்குப் போவோம். அங்கிருந்து அடுத்த லோடு, அடுத்த ஊர். இப்படியே ஆறு மாசம், ஒரு வருசம்னு போய்கிட்டே இருப்போம். தினம் தினம் எல்லாம் வீட்டுக்குப் போக முடியாது. வாழ்க்கையே ரோட்ல தான். வண்டில பார்த்தீங்கன்னா இங்கிருந்து கிளம்பும் போது ஹூண்டாய் போர்டு தொங்கும்; மானேசரிலிருந்து திரும்பும் போது மாருதி போர்டு.”
“வருசத்துக்கு ரெண்டு தடவை தான் அம்மா, அப்பாவையும், மனைவி குழந்தைகளையும் பார்க்க முடியும். ஏன்னா ஆறு மாசத்துக்கு ஒரு முறை, வருசத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கே போக முடியும். அதனால ஒரு ஃபோனை வாங்கிக் கொடுத்திட்டேன். இப்ப தினமும் வீட்டுக்குப் பேசுறேன். விடுமுறை நாட்கள்னு எதுவும் இல்லை. எப்ப ஊருக்கு போறோமோ அப்ப தான் விடுமுறை. வேலைக்கு வந்துட்டா லீவே கிடையாது. எல்லா நாளும் வேலை நாள் தான். ஞாயிற்றுக் கிழமைகளிலும் தீபாவளி மாதிரி பண்டிகை நாட்களிலும் கூட நாங்க வேலை செஞ்சுக்கிட்டே தான் இருக்கோம்.”
“பயணமும் சாதாரணமானது அல்ல. உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு தான் போறோம். இப்போதெல்லாம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமா நடக்குது. டிரைவரைக் கொன்னுட்டு இருக்கிறதை எடுத்துட்டு ஓடிடுறாங்க. இப்படி குடும்பத்தை விட்டுட்டு, உயிரைப் பணயம் வச்சு, இரவு பகலா கண் முழிச்சு சரக்குகளைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்க்க முதலாளி எவ்வளவு சம்பளம் தருகிறார் தெரியுமா ? கிலோ மீட்டருக்கு பதினாறு ரூபாய். அதில் தான் டீசல் செலவு, கிளீனர் சம்பளம், உணவுச் செலவு, கட்டணச் சாலைகளுக்கான கட்டணம், வண்டி பராமரிப்பு அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”
“சென்னையிலிருந்து-கொல்கத்தா போனால் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி இரண்டு பயணங்கள் போய் வந்தால் பதினாறாயிரம் சம்பாதிக்கலாம். ஆனால் மாதத்தில் இரண்டு பயணங்கள் கிடைப்பது கடினம். இங்கே பார்த்தீங்கன்னா பல லாரிகள் பத்து நாட்களுக்கு மேல நின்னுக்கிட்ருக்கு. இப்படிக் காத்திருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் உணவுக்காக நூற்று ஐம்பது ரூபாய் தனியாக கிடைக்கும்.”
தர்மேந்திர சிங் அடிப்படையில் ஒரு விவசாயி. குடும்பமே விவசாயக் குடும்பம். நிலம் குறைவாக இருப்பதாலும், விவசாயத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நட்டத்தாலும் வேறு வழியின்றி இந்த வேலைக்கு வந்திருக்கிறார். எனினும் தனது குழந்தைகள் எந்த நிலையிலும் இந்தத் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்று கருதுகிறார். “ஏன் நீங்கள் செய்கின்ற வேலை அவ்வளவு மோசமனதா?” என்றால் “இல்லை! எந்த ஊருக்குப் போனாலும் யார் வேண்டுமானாலும் திட்டவும், அடிக்கவும் முடிகின்ற பிரிவினர் நாங்கள் தான். எங்களுடைய உழைப்புக்கு யாரும் எந்த மரியாதையும் தருவதில்லை” என்றார் வருத்தத்துடன்.
லாரி டிரைவர்களை இளக்காரமாக பார்க்கும் சமூகம் அவர்கள் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை ஒத்துக்கொள்ளாது. அவரிடம் “அப்படின்னா உங்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை?” எனக் கேட்டதற்கு, “ஆமாம். இதைவிடக் குறைவான சம்பளத்திற்கு ஊரில் வேறு எந்த வேலை கிடைத்தாலும் போய்டுவேன்.” என்றார்.
“சரி! நிதீஷ்குமார் வந்த பிறகு தான் உங்க ஊர் ஓரளவு முன்னேறி இருக்குன்னு சொல்றாங்களே! உண்மையா?” என்றதும் “மற்றவங்க நூறு ரூபாய் கொள்ளையடித்தால் இவர் ஐம்பது ரூபாய் கொள்ளையடிக்கிறார். அதைத்தான் பத்திரிகைககள் முன்னேற்றம்னு எழுதுறாங்க போலிருக்கு!” என்றார் கிண்டலாக.
“டிரைவர், கிளீனர்ன்னு இங்க நூற்றுக்கணக்கில் இருக்கீங்களே! இதில் பலரும் பல சாதிகளை சேர்ந்தவர்களா இருப்பாங்க. யாரும் சாதி வேறுபாட்டோடு நடந்துக்குவாங்களா?” எனக் கேட்டோம். “இல்லை! இங்க யாரும் அப்படி நடந்துக்கிறது இல்லை. நாங்க எல்லோரும் ஒன்னா தான் இருக்கோம். ஒரு வண்டில சமைக்கிறதை இன்னொரு வண்டிக்காரங்களுக்கு கொடுத்து அவங்க சமைத்ததை வாங்கிக்குவோம். ஒன்னா தான் சாப்பிடுறோம்; ஒன்னா தான் பயணிக்கிறோம். யாரும் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் கிராமத்துக்கு போனா அது இருக்கும்” என்றார். சாதி ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் பீகாரிலிந்து வந்தவர் கூறிய வார்த்தைகள் இவை. வர்க்கம் சாதியின் ஏற்றத்தாழ்வை தொழில் ரீதியாகவே மட்டுப்படுத்தும் இன்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.
அடுத்ததாகத் தில்லியைச் சேர்ந்த சஞ்சய் குமார் சர்மா, உத்தராஞ்சலை சேர்ந்த மேத்தா இருவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.
“லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பினால் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் ஓட்டுவீங்க?” எனக் கேட்டோம். “ரெண்டு டிரைவர் இருக்கோம். ஒரு கிளீனர் பையன் இருக்கான். டிரைவருங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டுவோம். ஒரு நாளைக்கு நானூறிலிருந்து அறுநூறு கி.மீ. வரை ஓட்டுவோம். ஒவ்வொரு உணவு வேளையிலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருப்போம். சாப்பாட்டு நேரம் நெருங்கும் போது எங்க இருக்கோமோ அங்கேயே நிறுத்தி சமைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் கிளம்புவோம். கொள்ளைக்காரர்கள் பயத்தால் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஓட்றது இல்லை. ஓரமா நிறுத்திட்டு தூங்கிருவோம். துணிஞ்சு போறவங்களும் தனியா போறது இல்ல, பத்து, இருபது வண்டிகள் ஒன்னா சேர்ந்து கொண்டு வரிசையா போவாங்க.”
“சம்பளம்னு பார்த்தா, முதலாளி கிலோ மீட்டருக்கு இருபத்தி நாலு ரூபாய் கொடுத்திருவாரு. டீசல், கிரீஸ் முதல் கிளீனர் சம்பளம், சாப்பாடு வரை எல்லாத்தையும் இதிலிருந்து தான் கொடுக்கணும். லோடுக்காக நிக்கிற நாட்களில் மட்டும் சாப்பாட்டுக்கு தனியா நூறு ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக ஒரு டிரைவருக்கு மாசம் பத்தாயிரம் கிடைக்கும். இருக்கிற விலைவாசி உயர்வில் இதை வச்சிக்கிட்டு எப்படி சார் தாக்குப்பிடிக்க முடியும்?”
“விவசாயம் செய்து வாழ முடியாததால் தான் இந்த வேலைக்கு வந்திருக்கோம். ஊரில் வெறும் ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் கூட சந்தோஷமா போயிருவோம்; ஆனால் கிடைக்காது. இப்போ டீசல் விலை ஏறியிருக்கு. வண்டி முதலாளிகளுக்கு லோடிங் கட்டணத்தை ஹூண்டாய் கூட்டிக் கொடுக்கும். ஆனால் முதலாளி எங்களுக்கு அதிகரித்துத் தர மாட்டார். கேட்டால் இஷ்டம் இருந்தா ஓட்டு, இல்லைனா ஓட்றதுக்கு வேற ஆள் இருக்கான்னு பதில் வரும். பணம் இருப்பவன் தான் மேலும் அதிகமா சம்பாதிக்கிறான்.” என்றார். டீசல் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்கம் போராடுவதைப் போல ஓட்டுநர்களின் ஊதிய உயர்வுக்கு இவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முடியாதபடி அவர்களின் வேலையே அலைக்கழித்து விடுகிறது.
“சரி, சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்கிறீர்கள் ?” எனக் கேட்டோம். ”ஏத்தினதிலிருந்து இறக்குற வரைக்கும் ஒரே பிரச்சினை தான். போலீசு பிரச்சினை, செக்போஸ்ட்ல பிரச்சினை, கொள்ளைக்காரங்க பிரச்சினை, பெரிய வண்டிங்கிறதால சின்ன வண்டிக்காரங்களோட பிரச்சினைன்னு சின்ன பிரச்சியிலிருந்து பெரிய பிரச்சினைகள் வரை எல்லாத்தையும் சமாளிச்சு தான் சரக்கை எடுத்துட்டுப் போறோம். முக்கியமான பிரச்சினை போலீசும், கொள்ளைக்காரங்களும் தான். இப்பல்லாம் இரவுல மட்டுமில்ல, பகல்ல கூட ஓட்ட பயமாக இருக்கு. இதுவரை இல்லாத அளவுக்கு கொள்ளையர்கள் பிரச்சினை இப்போ அதிகமாகிருக்கு. கொள்ளையர்களால் இதுவரை பல டிரைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். உயிருக்கு அஞ்சி அஞ்சி தான் ஓட்டுறோம்.” என்றார்.
மறுகாலனியாக்கத்தின் பொருளாதார சீர்கேடுகளால் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கொள்ளையடிப்பது அதிகரித்திருப்பதை ஓட்டுநர்கள் பலர் தெரிவித்திருப்பதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. நாடாளும் தலைவர்களுக்கு கருப்பு பூனை, கமாண்டோ என்று பாதுகாப்பு செலவிற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு இந்த ஓட்டுநர்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் கொள்ளையர்கள் மட்டுமா பிரச்சினை?
“ஊரைத் தாண்டினால் கொள்ளையர்கள் பிரச்சினைன்னா, ஊருக்குள்ள போலீசும் குண்டர்களும் தான் பிரச்சினை. இருக்கிறதுலேயே மகாராஷ்டிரா தான் ரொம்ப மோசம். டோல் கேட்டில் குண்டர்களோடு சேர்ந்து கொண்டு நூறு ரூபாய்க்கு பதிலா முன்னூறு ரூபாய் கேட்பாங்க. குடுக்கணும்; இல்லைனா அடி தான். குண்டா டேக்ஸ்ன்னு போலீஸ்காரனைக் கூட்டிட்டு வந்தே வாங்குவார்கள். மகாராஷ்டிராவில் போலீஸ்காரர்கள் தான் பெரிய கொள்ளையர்கள். வண்டியில் ஏறி அடிக்கிறது, சட்டைப் பையில் கையை விட்டுப் பறிப்பது எல்லாம் அங்கே தான் நடக்கும். தென்னிந்தியா ஓரளவு பரவாயில்லை. பெரியளவு பிரச்சினைகள் இல்லை.”
“அடுத்து ரோட்லயும் திட்டு வாங்க வேண்டியிருக்கு. பெரிய வண்டிங்கிறதால ரொம்ப பிரச்சினை. போறவன் வர்றவன் எல்லாம் திட்டிட்டு போவான். சிலர் மோசமான கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவாங்க. சிலர் திட்டுறதோட நிக்காம வேகமா லாரியை ஓவர்டேக் பண்ணி ஹீரோ மாதிரி பைக்கை குறுக்க மறிச்சு நிறுத்திட்டு மேலே ஏறி வந்து அடிப்பாங்க. பைக் காரங்க மட்டுமில்ல கார்ல வர்றவங்க கூட மோசமா நடந்துக்குவாங்க. அவங்க காரையே நாங்க தான் அந்த ஊருக்கு கொண்டு வந்து இறக்கியிருப்போம். ஆனா அதே காரில் உட்கார்ந்து கொண்டு எங்களுடைய வண்டிகளை மறித்து அடிக்க வருவார்கள்.”
“நீங்க இவ்வளவு கஷ்ட்டப்படுறீங்க. ஆனா லாரி டிரைவர்களை பற்றி மக்களிடம் நல்லவிதமான கருத்து இல்லையே ஏன் ?” எனக் கேட்டதற்கு ”இந்த வேலைக்கு வர்றவங்க எல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க இல்ல சார். படிப்பறிவு குறைவானவங்க தான் வர்றாங்க. அதுல சில பேர் ரோட்ல போற வர்ற பெண்களை கிண்டல் பன்னிருப்பாங்க. அதை வச்சும், அதோட லாரி டிரைவர் வாழ்க்கை முறை காரணமா தான் அவங்க பேசுறதும் நடந்துக்கிறதும் மோசமாக இருக்கிறதா நினைக்கிறாங்க. அந்த மாதிரி ஒரு சிலரை வைத்து எல்லோரையும் தப்பா நினைக்கிறாங்க.” என்றார்.
“இந்தியா முழுவதும் கார்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற உங்களுக்கு இந்த மாதிரி ஒரு கார் வாங்கணும்னு ஆசை இல்லையா ?” ”இல்லை. கார்களை ஏத்தி இறக்குறதே நிறைவை தந்துடுது. வாங்குற ஆசை எல்லாம் இல்லை. வாங்கினாலும் நம்மால பராமரிக்க முடியாது. அது யானைக்குத் தீனி போடுற வேலை.”
“உங்களுடைய பயணத்தில் மாவோயிஸ்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா ? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?” என்று கேட்டதற்கு “அவர்கள் நல்லவர்கள். ஏழைகளுக்காக, வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காகப் போராடுகிறார்கள். அவர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. சில நேரங்களில் திடீரென்று சாலையின் குறுக்கே வந்து நிற்பார்கள். நாங்கள் பயந்து போய் விடுவோம். ஆனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். டீசல் கேட்பார்கள். அதற்கும் கூட காசு கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தான் பிரச்சனை. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு!” என்றனர். கொள்ளையர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் விமரிசனம் செய்யும் ஓட்டுநர்கள் மாவோயிஸ்டுகளை மட்டும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஓட்டுநர்களை அங்கீகரித்து மனிதத் தன்மையோடு நடத்துவது அவர்கள் மட்டும்தான் போலும்.
“மானேசரில் மாருதி தொழிலாளர்கள் போராடினாங்களே. அதை ஆதரிக்கிறீங்களா ?” “அவங்க போராட்டத்தால எங்களுக்கு வேலை இல்லாமப் போய்டுச்சு சார். மாசக்கணக்கில் லோடு இல்லைன்னா நாங்க என்ன பண்றது ? வீட்டுக்கு எப்படி பணம் அனுப்புறது ? அவங்களுக்கு எங்களை விட நல்ல சம்பளம் தான்; வசதிகள் எல்லாம் இருக்கு. இப்ப அந்தக் கிராம மக்களும், தலைவர்களும் கம்பெனிக்கு அவங்க ஊர் இளைஞர்களை அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காங்க.” என்றனர். தொழிலாளிகளே அரசியல் உணர்வும், வர்க்க உணர்வும் குன்றியிருக்கும் போது இந்த அலைந்து திரியும் தொழிலாளிகள் தமது பாதிப்பிலிருந்து மாருதி போராட்டத்தை பார்ப்பதை புரிந்து கொள்ள முடியும்.
அத்துடன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த பஞ்சாப் லாரியை நெருங்கினோம். அது மாலை நேரம். எனினும் அப்போதே இரவு உணவுக்கான தயாரிப்புகள் அங்கு நடந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கியதுமே ஓட்டுனர் சுக்ஜித் சிங் ”நமஸ்தே ஜி! ஆயி ஆயி!” என்று வரவேற்று தார்ப்பாயில் அமர வைத்தார்.
“எப்போது சென்னைக்கு வந்தீங்க ?” “பத்து நாட்களாகி விட்டது. இன்னும் லோடு கிடைக்கவில்லை.” என்றார். “பஞ்சாபில் எந்த ஊர் ?” “அமிர்தசரசுக்கு பக்கத்துல ஒரு கிராமம். இருபத்து நாலு வருசமா இந்தியா முழுக்க சுத்தி சுத்தி வர்றேன். சம்பளம் கி.மீ.க்கு ஒரு ரூபா. அதோட தினசரி நூற்று ஐம்பது ரூபாய்; லோடு இல்லாம நிற்கும் போது உணவுக்கு தனியா நூறு ரூபாய் என்று கிடைக்கும். மொத்தமா பார்த்தா மாசத்துக்கு ஒன்பது இல்லைனா பத்தாயிரம் ரூபாய் தான் கிடைக்குது. சம்பளம் சின்னது; ஆனால் ஓனர் பெரிய ஆள். அவருக்கு மொத்தம் மூவாயிரம் லாரி இருக்கு. ஒரு ஐந்து நட்சத்திர விடுதி, டாடா வாகனங்களுக்கான ஷோரூம், அதோடு அகில இந்திய மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.”
1984-ல் இந்திரா காந்தி பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை பற்றி கேட்டோம். “பியந்த் சிங், சத்வந் சிங் ரெண்டு பேரும் அதுக்கு என்ன தண்டனை கொடுக்கனுமோ அதை இந்திர காந்திக்கு கொடுத்தாங்க. சத்வந்த் சிங் எங்க கிராமத்துக்கு பக்கத்து கிராமம் தான். அவங்க நிலமும் எங்க நிலமும் பக்கத்து பக்கத்ததுல தான் இருக்கு. அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கமும் இருந்தது.”
“பகத் சிங் பிறந்த பஞ்சாபிலிருந்து மன்மோகன் சிங் மாதிரி ஒரு ஆள் வந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீங்க?” எனக் கேட்டதற்கு “அவர் சிலருடைய அதிகார தேவைகளுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். என்ன சொல்றது? எதுவும் செய்ய முடியாது. இப்போதைய அகாலிதள அரசும் ஊழல்வாத மக்கள் விரோத அரசுதான். எல்லாத்தையும் அடியோடு மாத்தியமைக்கணும். அதுக்கு எங்களுக்கு தனி நாடு வேணும்.” என்றார். முன்னேறிய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரது வாழ்க்கை உயர்ந்து விடவில்லை. எனினும் அந்த முன்னேற்றம் தனிநாடு கோரிக்கையில் அடங்கியிருப்பதாக அப்பாவித்தனமாய் நம்புகிறார். வெற்று உணர்ச்சி அரசியல் இந்த ஓட்டுநர்களையும் விடவில்லை என்று தெரிகிறது.
சுக்ஜித் சிங்கிடமிருந்து விடைபெறும் போது இருட்டி விட்டது. அந்த பார்க்கிங் மைதானத்தில் வெளிச்சமே இல்லை. அவர்கள் தமது ஒளித் தேவைகளுக்கு மெழுகுவர்திகளையும், வண்டியின் ஹெட்லைட்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெளியே வந்து ஆலையின் முன்பாக நின்றோம். சாலையின் இரு பக்கமும் லாரிகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக கடந்து சென்ற போது ஒரு வண்டியின் கண்டெய்னர் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே ஹூண்டாயின் புதிய மாடலான எலன்ட்ரா வரிசையாக நிற்கவைக்கப் பட்டிருந்தது. அந்த பளபளப்புக்கு அருகிலேயே ஒரு கொடி கட்டப்பட்டு, அதில் ஓட்டுநருடையதா கிளீனருடையதா என்று தெரியவில்லை, ஒரு பனியனும், ஜட்டியும் துவைத்து காயப்போடப் பட்டிருந்தன. அது அந்த புதிய காரில் ஒட்டி ஒட்டி உரசிக் கொண்டிருந்தது.
அதே போல இன்னொரு லாரியில் பதினைந்து லட்சம் மதிப்புடைய இந்த பளபளப்புக்கு அடியில், அழுக்கு ஸ்டவ்வை வைத்து கிளீனர் ஒருவர் இரவு உணவுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். சாலைக்கு வந்து ஹூண்டாய் வாயிலை நோக்கினோம். பல லாரிகள் உற்பத்தியான கார்களை ஏற்றிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தன. அடுத்த ஷிப்டில் கார்களைத் தயாரிக்க தொழிலாளிகள் ஆலைப் பேருந்துகளில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.
கார்களைச் சுமந்தவாறு இந்தியா முழுவதும் சுற்றி வரும் இந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடக்கிறது. குடும்பத்தையும், சொந்த ஊரையும் மாதக்கணக்கில் பிரிந்து இருக்கும் இந்த தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது. அந்த வேலையும் நிம்மதியாக செய்யும்படி இல்லை. ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தபடியே நகர்கிறது. மாருதி, ஹூண்டாய்களை நாடெங்கும் விநியோகிக்கும் இந்த தொழிலாளிகள் இல்லையென்றால் அந்த கார் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் இவர்களுக்காக கவலைப்படுபவர்கள் யாருமில்லை!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக