ஞாயிறு, 28 செப்டம்பர், 2014




மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு ரூ.1 லட்சம் அபராதம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி
Friday, May 24, 2013,
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக எம்.டி.க்கு (மேலாண்மை இயக்குனர்) உச்ச நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்தவர் நடராஜன். மதுரை அரசு போக்குவரத்துக் கழகத்தில் 25 ஆண்டுகள் தொழில்நுட்ப பணியாளராக பணிபுரிந்து, 2000ம் ஆண்டில் விருப்ப ஓய்வில் சென்றார். அவருக்கு பல ஆண்டுகளாக ஓய்வூதிய பலன்கள் வழங்கவில்லை.
இதையடுத்து நடராஜன் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்தார். விருப்ப ஓய்வு பெற்று 7 ஆண்டுகளுக்கு பிறகு அவருக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்க மறுத்து அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடராஜன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஓய்வூதிய பலன்கள் வழங்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சிங்வி, ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
குறைந்த சம்பளம் வாங்கும் ஒரு தொழிலாளியை வழக்கு மேல் வழக்கு போட்டு அவரது கோரிக்கையை நிறைவேற்றாமல் தள்ளிப் போட்டுள்ளனர். ஒரு தொழிலாளி தனது கடும் உழைப்பால் சம்பாதித்த பணத்தை வழக்கிற்கு செலவு செய்ய நேர்ந்துள்ளது. இது சட்ட விரோதமானது. மனிதாபிமான செயலும் அல்ல.
விருப்ப ஓய்வுக்கு அனுமதித்துவிட்டு ஓய்வூதிய பலன்களை வழங்க மறுப்பது நியாயமல்ல. 10 ஆண்டாக அலைக்கழித்துள்ளதற்காக அரசு போக்குவரத்துக்கழக மதுரை கோட்ட எம்.டி.க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதை ஓய்வூதிய பலன்களுடன் சேர்த்து 2 மாதத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

news by one india tamil

ஓசூர், செப்.29-

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை வழங்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டங்களில் ஈடுபட்டார்கள்.

தமிழக-கர்நாடக மாநில எல்லையில் உள்ள ஓசூருக்கு தினமும் 300-க்கும் மேற்பட்ட கர்நாடகா அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வெளியான தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகா அரசு பஸ்கள் ஓசூருக்கு இயக்குவது நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்கு உள்ளானார்கள். ஓசூரில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படாததால் பெங்களூர் செல்லும் பயணிகள் பஸ் நிலையத்திலேயே தவித்தனர்.

இந்த நிலையில் நேற்றும் தமிழக-கர்நாடக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. தமிழக எல்லைப்பகுதியில் உள்ள ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணம்மாள் தலைமையில், நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கர்நாடக எல்லையில் அம்மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, 2-வது நாளாக ஓசூருக்கு கர்நாடக அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் காலை வரை தமிழக அரசு பஸ்களும் பெங்களூருக்கு இயக்கப்படவில்லை. காலை 8 மணிக்கு பிறகு, குறைந்த அளவில் பஸ்கள் ஓசூர் பஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டன. அதே போல ஒருசில தமிழக அரசு பஸ்கள் பெங்களூர் நகருக்கு இயக்கப்பட்டன.

நேற்று முன்தினம் ஓசூர் நகரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. நேற்று காலை பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில் பிற்பகலுக்கு மேல் ஒரு கும்பல் கடைகளை அடைக்குமாறு ரகளையில் ஈடுபட்டது. இதையடுத்து ஓசூர் நகர் முழுவதும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக