வியாழன், 10 ஜூலை, 2014

ஹெல்மெட்? பைக் ஓட்டிகளே!

மரியாதைக்குரியவர்களே,
            வணக்கம்.இது சதீஷ் சென்னை அவர்களது பதிவுங்க.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.
நேற்று சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.  நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு. எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது வண்டி.

தண்டலம் தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.  அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில் என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட் எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால் கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார் ஆயிருச்சு.  முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.

தப்பு என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??  ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.

அது பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க் அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங் வருமே... தலைவலி!!  மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட் என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.

இன்னொரு அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு.  பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும் அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.  சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.  எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற நம்ம ஜனங்களும் தெரியாது.  ரெம்ம்ம்மம்ப  கஷ்ட்டம்ம்ம்ம்..

மழை காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.

இது தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற வலிகள் இனாம்.  என்ஜாய்!

சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்?  ஆமாம் கட்டாயம் தான்.

சாலை விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது.  அதை தடுக்கணும்னா என்ன செய்யணும்??

என்ன சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது.. வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம் செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???

இல்லீங்க...நீங்க எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்.. அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான் போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும் ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ  இதை எல்லாம் எதுவும் செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்!  இது தான் சட்டம்.

ஆக்சுவல்லா.. இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு.  அதாவது விபத்துக்களை குறைக்கறது பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால் ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு போட்டுச்சு நீதிமன்றம்.  இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை.  தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?

சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!

16-09-2005 அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல் ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள் ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும்.  டூ வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால் தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது.  ஹெல்மெட் என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.

ஆனா எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை.  அப்படி எந்த நிறுவனமும் கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை பத்தி கவலையே படலை.  பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும் கிடைக்கலை.  அதுக்காக வாதாட யாருமே இல்லை.

இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை  போட்டுது. கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு.  அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.

இப்படியான சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு.  அவரை மக்கள் நல விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை!  அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும் பெரிசா எடுத்துக்கலை!

இன்னைக்கு எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க?? சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்?  (எல்லா சட்டத்தையும் அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)

சரி... இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள் குறைஞ்சுதா??  இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா குறைஞ்சிருக்கு!

அரசோட கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால் ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை.  ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.   சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.  சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள் இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.

அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!



Sunday, December 27, 2009

சாலை பாதுகாப்பு வார விழா!

சாலை பாதுகாப்பு வாரவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது! வரும் ஜனவரி மாதத்துக்கான விழா ஏற்பாடுகள் இப்போதே களை கட்ட துவங்கி விட்டது.

அந்த ஒரு வாரம் மட்டும் (!) சாலை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, வர்ணங்கள் பூசுவது, அறிவிப்பு பலகைகள் வைப்பது, பிரச்சார இயக்கம் நடத்துவது, துண்டு அறிக்கைகள் கொடுப்பது, பேரணி நடத்துவது, விழிப்புணர்வு செய்திகள் கொடுப்பது என்று காவல் துறை பரபரப்பாக இருக்கும்.  அந்த வாரம் முடிந்தவுடன் அவ்வளவு தான்.  நாடு சுபிட்சமாக ஆகிவிடும் என்கிற நம்பிக்கையில் தங்கள் இயல்பான வேலையை செய்ய சென்று விடுகிறார்கள்.

அதிகரித்து வரும் விபத்துக்களுக்கான காரணிகள் என்ன??  நான்குவழிப்பாதையும் நடுவில் காங்கரீட் தடுப்பு சுவரும் அமைத்தும் கூட அதிகமான விபத்துக்கள் ஏன் ஏற்படுகிறது??

நான்கு வழி தேசிய நெடுஞ்சாலைகளை பொறுத்தவரை எதிர் எதிர் மோதல்களோ, திருப்பங்களிலான மோதல்களோ கிடையாது.

பெரும்பாலான வாகனங்கள், வண்டியின் முன்பும் பின்பும் அவசியமான விளக்குகளை இயங்க செய்வதில்லை.  திரும்பும்போதும், நிறுத்தும்போதும் சைகையாக காட்டப்படவேண்டிய பல விளக்குகள் இயக்கப்படுவதில்லை.  இதனால் தான் பின்னே வருகிற வண்டிகள் மோதுவது ஏற்படுகிறது. 

அப்படியானால் அந்த வண்டிகளுக்கான தர சான்றிதழ்களை தருகின்ற போக்குவரத்து துறை அதிகாரிகளோ, அந்த வாகனம் இயங்கும்போது சாலையில் அவற்றை கண்காணிக்கிற கடமையும் அதிகாரமும் உள்ள போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளோ எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்??

நகரங்களை பொறுத்தவரை முன் முகப்பு விளக்குகளின் பங்கு விபத்துக்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று!  கண்கூசும் முகப்பு விளக்குகள் தடை செய்யப்பட்டு இருக்கின்றன, எனினும் எல்லா வாகனங்களும் ஒளிர் விளக்குகளுடனேயே விரைகின்றன.  இந்த விளக்குகளால் சென்னை போன்ற நெரிசலான நகரங்களில் குறுக்கே வரும் இரு சக்கர வாகனங்களோ, சாவகாசமாக சாலையை கடக்கும் பாதசாரிகளோ கண்ணுக்கு தெரிவதே இல்லை.

போதா குறைக்கு சாலைகளின் தரம் வேறு சந்தி சிரிக்கிறது!  ஒரே ஒரு கிலோமீட்டருக்கேனும் ஒட்டோ, குழியோ, மேடோ, சதுப்போ இல்லாத ஒரு சாலையும் சென்னையில் இல்லை.  இரு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு நன்கு தெரியும், கைப்பிடி அதிராத ஒரு பயணமும் சென்னையில் சாத்தியம் இல்லை என்று. அந்த லட்சணத்தில் இருக்கிறது சென்னையின் சாலைகளின் தரம். புதிதாக கட்டப்பட்ட பாலங்களில் கூட சமமான பரப்பில் சமதள சாலைகள் இல்லை என்பதன் வருத்தம் இரு சக்கர வாகன ஓட்டிகளால் மட்டுமே உணரப்படுகிறது!

எல்லா சாலைகளிலும் போதுமான வெளிச்சமும், சாலைகளின் ஓரத்தில் சாலை விதி சங்கேத குறிகளும் கட்டாயமாக வைக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது விதி.  இப்படியான வசதிகளை ஏற்படுத்தி தருவதற்காக தமிழக அரசு தனியான ஒரு சட்டத்தையே போட்டு இருக்கிறது.  இதற்காக தனி நிதியத்தை ஏற்படுத்தி அந்த நிதியை கொண்டு 27 வகையான சாலை மேம்பாட்டு வசதிகளை செய்து கொடுக்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது சட்டம்.  எத்தனையோ சட்டங்களை போலவே இந்த சட்டமும் ஏட்டளவில் மட்டும் தான் இருக்கிறது.  சாலை குறிப்புக்களோ, தடுப்புக்களோ, முறையான போக்குவரத்துக்கான வசதிகளோ இது வரையும் செய்து கொடுக்கப்படவே இல்லை.  எனினும் செலவுகள் செய்யப்பட்டு கொண்டு தான் இருக்கிறது, எதற்காக என்றே தெரியாமல்.  பல
 பல சிக்னல்கள் சென்னை நகரில் வேலை செய்வதே இல்லை என்பது நகரா வாசிகள் அனைவரும் அறிந்த ரகசியம்.  அதை பராமரிப்பு செய்வதற்கான ஒப்பந்தமும் செலவும் செய்தும் இது வரை பயனில்லை.

சாலைகளில் வாகனங்களை ஓட்டுவோர் முறையான வழிமுறைகளை பின்பற்றி வாகனங்களை ஒட்டாமல் இருப்பதும் பெரும்பாலான விபத்துக்களுக்கு காரணம்.  சட்டென்று திரும்புவது, திடீரென்று நிறுத்துவது, போதிய எச்சரிக்கை விளக்குகளை உமிழ விடாதது போன்ற காரணிகளால் பிற வாகனங்கள் மோதலுக்கு உள்ளாகிறது.

நகரங்களில் வாகன சோதனை நடத்தும் காவலர்கள் ஆவணங்களை சரிபார்ப்பதோடு நின்று விடாமல், வாகனங்களின் / வாகன ஓட்டிகளின் இத்தகைய முறையற்ற தன்மைகளையும் தணிக்கை செய்வதும், அதற்கான கடுமையான நடவடிக்கைகளுமே ஒழுங்கான வாகன போக்குவரத்துக்கு வழி செய்யும்.

இரு சக்கர வாகன விபத்துக்களுக்கான காரணிகளை தவிர்க்க முனையாமல், குறைக்காமல், விபத்து ஏற்பட்டால் மரணம் சம்பவிக்காமல் இருப்பதற்கான ஹெல்மெட்டை கட்டாயம் செய்திருக்கிறது நீதிமன்றம்.  விபத்தை தவிர்ப்பது தான் முக்கியமே தவிர விபத்தில் மரணத்தை தவிர்ப்பது அல்ல!  இது எந்த செவியிலும் நுழையவேயில்லை. (ஹெல்மெட் பற்றி தனியே ஒரு கட்டுரையே எழுத  அவசியம் ஏற்பட்டு இருக்கிறது... எனவே, விரைவில்!)

எத்தனையோ சட்டங்களை கண்டுகொள்ளாமல் விட்ட காவல் துறை நண்பர்கள் போக்குவரத்து சட்டங்களையும் அலட்சியம் செய்வதால் தான் இத்தனை மரணங்கள் வாகன விபத்துக்களில் ஏற்ப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  எனவே சற்றேனும் மனிதாபிமானம் கொண்டு இந்த ஒரு சட்டத்தையாவது கடுமையாக அமல்படுத்த முனையவேண்டும்.

முன்னறிவிப்பு இல்லாமல் அவ்வப்போது வாகன தணிக்கையும், அதில் சிக்கும் தவறு செய்வோருக்கு தக்க நடவடிக்கையும் எடுப்பது தான், வாகன போக்குவரத்தில் ஒழுக்கத்தையும் சுமுகமான சூழலையும் கொண்டு வரும்.

மனிதம் காப்பார்களா மரியாதைக்குரிய காவலர்கள்??



Saturday, December 5, 2009

அரசு விரைவு பேருந்து!


ரசு விரைவு பேருந்து இப்போ கொஞ்சம் நல்லா இருக்கு.
முதலில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம்னு தனியா வெளியூர் நீண்ட தூர பேருந்துகளுக்குன்னு ஒரு தனி போக்குவரத்து கழகமே தொடங்கப்பட்டது.. எம்.ஜி.ஆர் பீரியடில்
சென்னையில் ஒன்னு, நாகர்கோவிலில் ஒண்ணுன்னு ரெண்டு ஊரில் பேருந்து கட்டுமான பிரிவு தொடங்கி நல்லா தான் போயிட்டு இருந்தது...
இடையில் அந்த போக்குவரத்து கழகத்தை ரெண்டா பிரிக்கிறது, பழைய பேருந்துகளை இந்த பக்கம் தள்ளி விடுறதுன்னு அதகளம் எல்லாம் நடந்து, "ஐயையோ அரசு பேருந்தான்னு தெறிச்சு ஓடுற நிலைமைக்கு வந்து நின்னது!
நல்ல வேளையா, இப்போ அந்த போக்குவரத்து கழகத்துக்கு நல்ல காலம் பிறந்து.. விரைவு போக்குவரத்து கழகம்னு பேரை மாத்தி (அட..இதுக்கு நியூமராலாஜி எல்லாம் காரணம் இல்லை) புதுசு புதுசா, கலர் கலரா, சொகுசு சொகுசா பேருந்துகள் ஓடுது.
மேட்டர் என்னன்னா!
போனவாரம் சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி பஸ்ஸில் போக நேர்ந்தது....
எட்டே எட்டு மணி நேர பயணம்.... விழுப்புரம் சேலம் வழியா போகாம வேலூர் கிருஷ்ணகிரி மேட்டூர் வழியா போகுது....
நாலு வழி பாதைங்கரதால.....ஸ்பீடு கிளப்புது வண்டி!
உள்ளாரையும் நல்லா தான் இருக்கு! குளுகுளுன்னு ஏசி, தக தகன்னு கலர் டிவி, வீடியோ, புஷ் பேக்கு சீட்டு, களைப்பே தெரியாம இருக்க ஏர் சஸ்பென்ஷன் வசதி.... இத்தனைக்கும் குறைஞ்ச காசு!
கிட்டத்தட்ட எல்லா ஊருக்கும் சென்னையில் இருந்து குளிர் சாதனவசதி பேருந்து போகுதாம்!
ஒரே ஒரு குறை...
ஆன்லைன் ரிசர்வேஷன் வசதி மட்டும் இன்னும் வரலை... (இத்தனைக்கும் தமிழ்நாடு தகவல் தொழில் நுட்ப துறையில் முன்னிலையில் இருக்காம்)
ஒவ்வொரு தடவையும் அங்கே போயி தான் ரிசர்வேஷன் செய்யணுமாம்!
அதை மட்டும் நிவர்த்தி பண்ணிட்டாங்கன்னா.... நெருக்கி அடிக்கிற ரயிலையும், கொள்ளை அடிக்கிற "பட்ஜெட்" (?) விமானங்களையும் ஒதுக்கி தள்ளிட்டு, ஓவர் நைட்டில் சொகுசா தமிழ் நாட்டில் எங்கே இருந்தும் எங்கேயும் போயிட்டு வர ரொம்ப வசதியான போக்குவரத்து கழகமா மாறிரும்....
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 

Sunday, December 6, 2009

சென்னையின் வோல்வோ ஏசி!




வெளியூர் பஸ்ஸை பத்தி எழுதிட்டு நம்ம எம்.டி.சியை பத்தி எழுதலைன்னா எப்படி??


ஒரே ரத்த கலரில் செக்க செவேர்ன்னு நகரத்தில் வலம் வந்திட்டு இருந்தது.. பல்லவன்! அந்த கலரை பார்த்தாலே எல்லோருக்கும் அலர்ஜி ஆகி, கலரு மாறிப்போச்சு... பச்சை கலரு ஜிங்கு சான்!


நகர பேருந்துகளில் ஒரே ஒரு கோடாவது சிகப்பில் இருககவெனுமனு ஒரு (முட்டாள்த்தனமான) சட்டம் இருந்தும் அதை மீறி முதல் முதலில் சிகப்பு வண்ணமே இல்லாம ஒரு நகர பேருந்து சென்னையில் வலம் வர தொடங்கிச்சு.
திரும்பவும் வந்தது சிகப்பு கலரு...... "ஜி" சீரிஸ் வண்டிகளில் (1993)... அப்புறம் என்ன என்னமோ மாற்றங்கள் எல்லாம் செஞ்சு, வண்டியை கொஞ்சம் கலர் புல்லா மாத்தணும்னு நெனைச்சு... பறவை, மரம், பட்டாம்பூச்சின்னு ஆர்ட் பிலிம் எல்லாம் போட்டு நிறைய வண்டிக ஓடிச்சு...
நல்லவேளை... சென்னையில் தனியார் பேருந்துகளை டவுன் பஸ்ஸா ஓட்ட தடை இருக்கறதால், எல்லாமே அரசு பஸ்சு தான்... குழப்பமே வரலை!
அப்புறம்... மாடல் பத்தி யோசிச்சாங்க! எத்தனை நாளைக்கு தான் நம்ம குரோம் பெட்டையில் இருக்கிற டையை வெச்சே வண்டி டிசைன் பண்றது?? பொள்ளாச்சியில் சேரன், திருச்சியில் தீரன், ஈரோடு ஜீவா ன்னு மூணு கழகங்களுக்கு ஆர்டர் கொடுத்து அங்கத்தை டிசைனில் கொஞ்சம் காலம் வண்டிகள் வர ஆரம்பிச்சுது....
பொதுவா லைலாண்டு வண்டிக தான்.... ஆனா ஒரே ஒரு தடவை "பரீத்சார்த்த முறையில் (?)" டாட்டா வண்டிகளை வாங்கி பாத்துட்டு விட்டுட்டாங்க!
இப்போ என்னடானா.... யந்திரன் சிவாஜி மாதிரி ஓவர் நைட்டில் அல்ட்ரா மாடர்ன் ஆயிருச்சு எம்.டி.சி.
ஒரு பக்கம் பிரகாஷ், டி.வி.எஸ், சக்தி, டி.வி.ஆர் ன்னு தனியார் கிட்டே கொடுத்து மாடல் மாடலா, அழகழகா வண்டிகளை வாங்கி ஓட்டுறாங்க... அதிலேயும் தானியங்கி கதவுகள், குஷன் சீட்டு, தொங்கும் கைப்பிடின்னு ஓரளவுக்கு மாடர்னா ஓடுது.....
திடீர்ன்னு பாத்தா பெங்களூர்லே மட்டும் தான் வோல்வோ விடுவாங்களா? நாங்க விடமாட்டோமான்னு இங்கேயும் கொண்டு வந்துட்டாங்கல்லே???
பஸ்சு என்னவோ ஷோக்கா தான் இருக்கு! பெங்களூர் மாதிரி செகப்பு கலரு அடிக்காம இருக்கறதுக்கே கோவில் கட்டி கும்பிடலாம்!
ஏசி, கொஞ்சம் சுமாரான ஸ்பீடு, எப்.எம்.ரேடியோ (கோயம்பத்தூரில் டவுன் பஸ்சில் ரெண்டு கலர் டிவி வெச்சு டிவிடியில் பிலிமே காட்டுறாங்க தெரியுமா?) எல்லாம் இருந்தும்.... சீட்டிங் சிஸ்டம் தான் என்னவோ சரியாவே இல்லை.... கொஞ்சம் தான் சீட்டுக்கள்... அதுவும் ஒழுங்கான வரிசையில் இல்லை...
வண்டியில் வசதிகள் எல்லாம் டிரைவருக்கு தான்.... பின்னாடி எஞ்சின் (காலுக்கு சூடு வராது) தானியங்கி கதவுகள்... வண்டிக்கு பின்னாலையும், சைடிலேயும் வர்ற வண்டிகளை கண்காணிக்க எல்லா பக்கமும் வெப் கேம் வெச்சு டிரைவர் முன்னாடி மானிட்டர் வெச்சிருக்காங்க! (ஹலோ.... 'அந்த' மானிட்டர் இல்லை.... அதை அடிச்சுட்டு வண்டி ஓட்ட கூடாதுன்னு சட்டமே இருக்கு)...
ஜி.பி.எஸ் சிஸ்டம் வெச்சிருக்காங்க... ரோடு மேப்பு காட்டுது.... இந்த வண்டி வரும் நேரத்தை வழியில் இருக்கிற பஸ் ஸ்டாப்பில் ஆட்டோமேட்டிக்கா டிஸ்பிளே கொடுக்குது.... மிதந்துகிட்டே போகுது.... அப்படி இப்படின்னு நல்லா தான் இருக்கு!
ஆனா பெங்களூரை கம்பேர் பண்ணினா ஸ்பீடு ரொம்ப குறைவு... (மெட்ராசில் ரோடு இல்லை... இதிலே வண்டி ஓட்டறதே ஒரு கலை... அதை பத்தி பிறவு தனியா புலம்பலாம்!)
சென்னையில் அதிகமா யாரு இதை யூஸ் பண்றாங்கன்னா... ஆட்டோக்கும், டாக்சிக்கும் கொடுக்குற காசுக்கு இது பரவாயில்லைன்னு நினைக்கிறவங்க, ஐ.டி. கம்பெனிக்காரங்க, ஏர்போர்ட், சென்டிரல் போறவங்க, இந்த மாதிரி குறிப்பிட்ட சில செக்ஷன் தான்....
ஆனா, என்னை கேட்டா சென்னைக்கு வோல்வோ வாங்க வேண்டிய அவசியமே இல்லை... அவ்வளவு காசு கொடுக்கறதுக்கு அதில் ஒண்ணுமே இல்லை.... லைலான்டிலேயே ஏசி பஸ்சு வருது.. குறைஞ்ச காசுக்கு நிறைஞ்ச திருப்தி!
ஏது எப்படியோ... வட சென்னை நாறி கிடந்தாலும், அடிப்படை ரோடு வசதி தேட கிடந்தாலும், நத்தை ரேஞ்சுக்கு போக்குவரத்து இருந்தாலும், வெளிநாடு மாதிரி எங்க ஊரிலே வண்டி ஓடுதுன்னு பெருமை பேசிக்கலாம்!
பின்னே... பெருமை பேசுறது தானே நம்ம பொழப்பே??

பஸ் டிரைவர்??????????




Thursday, December 17, 2009

SETC - அவசரப்பட்டுட்டேனோ??


போன வாரம் தான் நம்ம அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை பத்தி ஆஹா ஓஹோன்னு எழுதி வெச்சேன்!

கொஞ்சம் அவசரப்பட்டுடேனொன்னு தோணுது இப்போ!

தொடர்ந்து ரெண்டு நாளா ரெண்டு விபத்து..

முந்தாநாளு ராத்திரி சென்னையில் இருந்து பெங்களூர் போன வண்டி வாணியம்பாடி கிட்டே ஒரு லாரி பின்னாடி இடிச்சு.. ஸ்டீரிங் பெண்டு ஆயி மேற்கொண்டு போக முடியாம நின்னு போச்சு... ஆளுங்களை எல்லாம் இறக்கி விட்டுட்டு வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருந்திருக்காங்க டிரைவரும் கண்டக்டரும்... அந்த நேரம் பாத்து பஸ்சுக்கு பினாடி ஒரு வேன் வந்து டமார்னு இடிச்சதிலே அந்த பஸ்சு நகர்ந்து பஸ்சு முன்னாடி நிட்டுட்டிருந்த பயணிகள் மேலே மோதி அஞ்சு பேறு காலி, அதே இடத்திலேயே!

இது இப்படின்னா...

நேத்து ராத்திரி சேலத்தில் இருந்து ராமேசுவரம் போன பஸ்சு அரவாக்குறிச்சி கிட்டே பிரேக் டவுன் ஆகி நின்னுபோச்சு... அதே மாதிரி ஆளுங்களை இறக்கி வேற பஸ்ஸில் ஏத்தி விட்டுட்டு இருக்கிற நேரம் பாத்து ஒரு லாரி அந்த கூட்டத்துக்குள்ளே திடீர்ந்து புகுந்து இடிச்சு தள்ளினதுலே அஞ்சு பேறு மரணம்!

ரெண்டு நாளில் பத்து பேரு...

முதல் சம்பவத்தில், டிரைவரோட அஜாக்கிரதையால லாரி மேல மோதி இருக்காரு..
ரெண்டாவது சம்பவத்தில் வண்டியே பிராப்ளம்...

இப்போ, விரைவு போக்குவரத்து கழகத்திலே மெயிண்டனன்ஸ்  மேல சந்தேகமா இருக்கு!

பஸ்சு வாங்கி கொடுக்கறது அரசாங்கத்தோட வேலை! அதை சரியா செஞ்சிட்டாங்க!

ஆனா அதை பராமரிக்கிறது அந்த அந்த கொட்ட பணிமனை அதிகாரிங்களோட கடமை இல்லையா?? என்ன தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க அவங்க??

டிரைவருங்களுக்கு போதுமான பயிற்சியோ, ஓய்வோ, இல்லாததும் ஒரு சின்ன குறை... தொடர்ச்சியா வேலை பாக்கவேண்டி இருக்கிறதால ஏற்படுற வெறுப்பு, சலிப்பு, இதோட சேர்ந்து ஒய்வின்மையால் இருக்கிற அசதி... இதெல்லாம் விபத்துக்கு சின்ன சின்ன காரணியாய் அமைஞ்சிடுது...

இனி மேலாவது, பேருந்துகளை ஒழுங்கா பராமரிக்கிறது, நீண்ட பயணத்துக்காக பணிமனையில் இருந்து வண்டியை எடுக்கும்போதே, முழுமையா பரிசோதிச்சு அதுக்கான கிளியரன்ஸ் கிடைச்சபின்னாடி எடுக்கறது, டிரைவருக்கு போதுமான ஒய்வு கொடுக்கறது, யோகா மாதரியான கவனம் கூட்டும் பயிற்சி

பஸ் பயணிகள் கவனத்திற்கு..4

மரியாதைக்குரியவர்களே,
        வணக்கம்.பயணிகள் கவனத்திற்கு என்ற தொடரை பதிவிட்ட திரு.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க..

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 4

ற்கனவே தமிழக போக்குவரத்து கழகங்கள் குறித்த இந்த தொடரில் மூணு பாகம் முடிஞ்சு இது நாலாவது பாகம். இது வரை வந்த பாகங்கள் இங்கே ( Part-1 ; Part-2 ; Part-3 ) காணலாம்.


இவ்வளவு தூரம் தமிழக பஸ்களை பத்தி பேசிட்டு, மினி பஸ்களை பத்தி சொல்லலைன்னா எப்படி?

இந்த மினி பஸ் கான்சப்ட் ரொம்ப புதுமையானது. மக்கள் நலன் சார்ந்தது. ஆனா அந்த திட்டத்துக்கான உரிய முக்கியத்துவம் இதுவரைக்கும் கிடைக்கவேயில்லை. அரசு பஸ்கள் ஒரு குறிப்பிட்ட பகுதி / சாலை களில் தான் பயணிக்குது. அது எல்லா குக்கிராமங்களையும் இணைக்கறதில்லை. அதனால பல குக்கிராம மக்கள் சில கிலோமீட்டர் தூரம் வரைக்கும் நடந்து தான் பஸ்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்க முடிஞ்சுது. பெரிய பஸ்களை இயக்கமுடியாத சாலைகளும், சில கிராமங்களுக்கு முறையான சாலை வசதியே இல்லாத நிலைமையும் தான் போக்குவரத்து வசதி கிடைக்காம பல கிராமங்கள் தவிக்க காரணம்.

அப்படிபட்ட கிராமங்கள், புறநகர் பகுதிகளில் வசிக்கிற மக்களை அம்போன்னு விட முடியுமா என்ன? அதே சமயம், அந்த மாதிரி பகுதிக்கு ஒரு அரசு பஸ் இயக்குறதும் சாத்தியமற்றதா இருக்கு! என்ன செய்யலாம்னு யோசிச்சு, 1996-2001 திமுக ஆட்சி காலத்தில் அப்போதைய முதல்வர் கலைஞரால் கொண்டுவரப்பட்டது தான் கிராமப்புற மினிபஸ் திட்டம்.

பஸ் வசதி இல்லாத பகுதிகளை, பஸ் வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கிறது தான் இந்த திட்டத்தின் நோக்கம். அதனால் இந்த திட்டத்தில் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தது. மொத்தமா 16 கி.மீ தூரத்துக்கு மட்டும் தான் இயக்கப்படணும். அதில் 4 கி.மீ தான் அரசு பஸ் செல்லும் வழித்தடத்தில் இயங்கணும்னு சில முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தது.இந்த கட்டுப்பாடுகள் எதுக்குன்னா, மினி பஸ்களால் அரசு பஸ்களின் வருமானம் பாதிக்கப்படக்கூடாது. அதே சமயம், பஸ்வசதி இல்லாத பகுதிகளை பஸ்வசதியுள்ள பகுதிகளுடன் இணைக்கணும். இது தான் நோக்கம்!

உதாரணமா. திருநெல்வேலி பக்கத்தில் இருக்கிற அம்பாசமுத்திரத்தை எடுத்துக்கலாம். அம்பாசமுத்திரம் ஊருக்கு நிறைய பஸ்கள் இருக்கு.ஆனா அம்பாசமுத்திரத்துக்கு தெற்கே இருக்கிற சிவந்திப்பட்டின்ற கிராமத்துக்கு முறையான பஸ் வசதி இல்லை. அதனால் அந்த பகுதியை அம்பாசமுத்திரத்துடன் இணைக்கிறதுக்காக மினிபஸ் திட்டம் உதவிச்சு. இதே மாதிரி தான் தமிழகத்தில் பல பல கிராமங்களுக்கு இந்த் மினி பஸ் திட்டம் மூலமா நிறைய நன்மைகள் நடந்தது.

நடந்து பள்ளிக்கூடம் போனவங்களுக்கு வசதி. நடந்துபோகணுமேன்னு சோம்பல் பட்டுட்டு படிக்காம இருந்தவங்க கூட படிக்க போக ஆரம்பிச்சாங்க. வயசானவங்க, நோயாளிகள், கர்ப்பிணிகள்னு பல ஆயிரக்கணக்கானவங்க இந்த மினி பஸ் திட்டத்தால பயன் அடைஞ்சாங்க.

இந்த திட்டத்தில் அரசு ஈடுபடலை. அந்தந்தந்த பகுதி ஆட்களே மினிபஸ்களை இயக்கினாங்க. பல பகுதிகளில் ஊர் மக்களே எல்லாருமா கைக்காசு போட்டு தங்கள் கிராமத்துக்குன்னு பஸ் வசதி ஏற்படுத்திக்கிட்டாங்க. இன்னும் சில இடங்களில் மகளிர் / ஆடவர் சுய உதவி குழுக்கள் மூலமா பஸ்கள் இயக்கப்படுது. இது கிட்டத்தட்ட, கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை மாத்தினதோட மட்டுமில்லாம பல வகையான முன்னேற்றங்களுக்கு மறைமுக காரணியாக இருந்தது.

இந்த திட்டத்தை, 2001-2006 காலத்தில் வந்த அதிமுக அரசு ரத்து பண்ணிச்சு. கிட்டத்தட்ட 3 வருஷ காலம், பஸ் வசதி இல்லாம மீண்டும் அத்தனை கிராம மக்களும் தண்டிக்கப்பட்டாங்க. எத்தனை எத்தனையோ போராட்டங்கள், சில வழக்குகள் னு மக்கள் களம் இறங்க ஆரம்பிச்சப்புறம், ரொம்ப லேட்டா, அரசு இறங்கி வந்துச்சு. மீண்டும் மினி பஸ்களை இயக்க அப்போதைய அதிமுக அரசு ஒத்துக்கிடுச்சு. ஆனா, அதுவரைக்கும் மினி பஸ்களுக்கு இருந்த நிறமான மஞ்சள் மற்றும் சிகப்பை நீக்கிட்டு முழுமையா பச்சைக்கலர் (அப்போ அந்த ஆட்சியில் ஜெ.வின் ராசியான நிறம் என சொல்லப்பட்ட நிறம்) தான் அடிக்கணும்னு ஒரு உத்தரவு வந்தது. எந்த கலரா இருந்தா என்ன, மக்களுக்கு நல்லது நடந்தா சரின்னு மீண்டும், மினி பஸ் இயங்க ஆரம்பிச்சுது.


அப்போ பல விதிகளில் தளர்வு கொண்டுவந்தாங்க. அந்த விதி மீறல்களால், நகரங்களிலும், அரசு பஸ்கள் இயங்கும் வழித்தடங்களிலும் முழுமையா மினிபஸ் இயங்க ஆரம்பிச்சது. இப்பவும் ஈரோடு, திருச்சி பகுதிகளில் பார்த்தீங்கன்னா, மினிபஸ் முழுமையா அரசு பஸ் வழித்தடத்திலேயே, அதுவும் நகர்ப்புறத்திலேயே இயங்கறதை பார்க்கலாம்.

இதில் என்ன விளைவுகள் வந்ததுன்னா, நகர்ப்புறத்தில் நிறைய காசு பார்க்க ஆரம்பிச்ச மினி பஸ்கள், கிராமப்புற சேவைகளை குறைச்சிகிட்டாங்க. மீண்டும் கிராம மக்கள் கற்காலத்துக்கு போக ஆரம்பிச்சாங்க. இன்னொரு பக்கம், நகர சாலைகளில் மினி பஸ்கள் இயங்கறதால் அரசு பஸ்கள் நஷ்டமடைய ஆரம்பிச்சது. சூப்பரான வண்டிகள், டிஜிட்டல் ஸ்டீரியோ, எங்கே வேணும்னாலும் நிறுத்தி ஏறி இறங்கற வசதின்னு நகர மக்கள் மினி பஸ்சை விரும்ப ஆரம்பிச்சாங்க.

ஆனா, எந்த காரணத்துக்காக, எந்த மக்களுக்காக இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டதோ, அவங்க மீண்டும், பல பகுதிகளில் நடந்து தான் மெயின்ரோட்டுக்கு வந்து பஸ் பிடிக்கணும்னு ஆகிப்போச்சு.

விடுங்க. அது அவங்க தலையெழுத்து. நாம நம்ம பயணங்களை பார்ப்போம்.

நான் முதல் முதலில் பயணிச்ச நெடுந்தூர பஸ் பயணம், திருவனந்தபுரம்-சென்னை. ம்த்தியானம் 12 மணிக்கு திருவனந்தபுரத்தில் எடுத்து நாகர்கோவிலுக்கு சாயங்காலம் 3 மணிக்கு வந்தது. அங்கெ இருந்து 4 மணிக்கு எடுத்து திருநெல்வேலிக்கு 6.30க்கு வந்தது. மதுரை வரும்போது மணி 12. மறுநாள் காலையில் 9 மணிக்கு தான் சென்னைக்கு வந்தது. நொந்து நூடுல்சாகி, அந்து அவலாகி, வெந்து வெறுப்பாகி பஸ்ல இருந்து வெளியே வந்தேன். இத்தனைக்கும் அது தமிழக அரசு ‘விரைவு’ போக்குவரத்துக்கழகம்.

அரசு பஸ்களிலேயே எனக்கு பிடிச்ச பஸ் சேரன் தான். சுத்தமா வெச்சிருப்பாங்க, அழகான பஸ்கள். ஆனா இப்போ படு கேவலமா இருக்கு! தந்தை பெரியார் போக்குவரத்து கழக பஸ்கள் கொஞ்சம் வித்தியாசமானது. எல்லாரும் ஹைடிராலிக் சஸ்பென்ஷன், ஏர் சஸ்பென்ஷன்னு வெச்சிருக்காங்க. ஆனா பெரியாரில் மட்டும் விவில்லர் சஸ்பென்ஷன். பஸ் நல்ல நீளம். ஆனாலும் உறுதியான சஸ்பென்ஷன். வட தமிழகத்தில் பெரியாரை அடிச்சிக்க இன்னொரு பஸ் இல்லை.

பார்த்தாலே கொஞ்சம் கேவலமான டிசைனா எனக்கு பட்டது அன்னை சத்தியாவும், கட்டபொம்மனும் தான். நேசமணி உறுதியான பஸ். தமிழகத்திலேயே மிக அதி விரைவான பஸ் நேசமணின்னு சொல்லுவாங்க. நாகர்கோவில் – திருவனந்தபுரம் ரூட்டில் கேரளா பஸ்சுக்கு நிகரா ஸ்பீடா போவாங்களாம். கேள்விப்பட்டிருக்கேன்.

தீரன் சின்னமலை பஸ்சின் சென்னை-கரூர் பஸ் ரொம்ப அழகு. அது ஒரு டீலக்ஸ் பஸ். சென்னையில் இருந்து கரூர் போகும்போது, திருச்சி சத்திரம் பஸ்ஸ்டாண்டு கிட்ட ஒரு யூ டர்ன் ஸ்பீடா அடிச்சு உறையூர் ரோட்டில் நிக்கும் பாருங்க. செம்மெ. அந்த திரில்லுக்காகவே அதில் பயணிக்கலாம். தீரன் சின்னமலை பஸ் அழகான டிசைன், பெயிண்டிங் எல்லாம் சூப்பரா இருக்கும்.

எல்லா போக்குவரத்து கழக பஸ்களுக்கும் இங்கிலீஷில் பெயர் சுருக்கம் TC ன்னு தான் முடியும் (PTC, TTC, DCTC, KTC ன்னு) ஆனா சேரன், சோழன் னு ரெண்டு C, பல்லவன் பாண்டியன்னு ரெண்டு P இருந்ததால், அந்த ரெண்டு பஸ்களுக்கு மட்டும் CTC (Cheran), CRC (Cholan) & PTC (Pallavan), PRC (Pandiyan) ன்னு வெச்சிருந்தாங்க. எனக்கு ரொம்ப நாளா இந்த CRC, PRC க்கு அர்த்தம் தெரியாம முழிச்சிட்டு இருந்தேன். அது ஒரு அசட்டு காலம்!

நான் இது வரைக்கும் பயணிச்ச பஸ்களில் விபத்தில் சிக்கினதில்லை. ஆனா விபத்துக்களை நேரடியா பார்த்திருக்கேன். எனக்கு முன்னால் போன பஸ் விபத்துக்குள்ளாகி பயணிகள் அலறியடிச்ச சத்தம் இப்பவும் ஞாபகத்தில் இருக்கு.

வாழ்க்கையில நாம யாரை நம்புறோமோ இல்லையோ, நல்லா தெரிஞ்ச நண்பன், கூடவே இருக்கிற அப்பா அம்மா இவங்க மேலே கூட இல்லாத நம்பிக்கையை நாம பஸ் டிரைவர் மேலே வெச்சிருக்கோம். நாளைக்கு காலையில் நம்மளை உருப்படியா நல்லபடியா இறக்கிவிட்டுடுவாருன்ற நம்பிக்கையில் தான் பல பயணிகள் நிம்மதியா தூங்கிட்டு வர்றாங்க. அப்படி ஒரு நம்பிக்கையான மக்கள் இருக்காங்கன்ற அந்த பொறுப்புணர்வும், கடமையும் தான் நம்ம டிரைவர்களை மரியாதைக்குரியவங்களா வெச்சிருக்கு. அவங்க ஒரே ஒரு செகண்டு அசந்தாலும் கூட 40 பேருக்கு உத்திரவாதம் இல்லை. மத்த மாநிலங்களை விட தமிழகத்தில் தான் பஸ் விபத்து குறைவுன்றது எவ்வளவு சந்தோஷமான விஷயம்?
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இது மூன்றாம் பாகம்

Wednesday, July 4, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 3

மிழக போக்குவரத்து கழகங்களை பத்தின இந்த தொடரின் Part-1 & Part-2 ஆகியவற்றை தொடர்ந்து இது .மூன்றாம் பதிவு


தமிழகத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் தான் நீண்ட தூர பஸ்களை இயக்கிட்டு இருக்காங்க. அதில் இருந்து வெளிமாநில பஸ்களை மட்டும் தனியா பிரிச்சு எடுத்து 1991-96 அதிமுக ஆட்சிகாலத்தில் ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க. அதுக்கு பிறகு வந்த திமுக ஆட்சி ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் என்கிற பெயரை மாற்றி ராஜீவ் காந்தி போக்குவரத்து கழகம்னு ஆக்கினாங்க. போக்குவரத்து கழங்களுக்கு இருந்த சிறப்பு பெயர்கள் எல்லாம் நீக்கப்பட்டபோது, திருவள்ளுவர், ராஜீவ்காந்திங்கற பெயரை தூக்கிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு வெச்சாங்க. (SETC – State Express Transport Corporation).அதோட, தனித்தனியா இயங்கிட்டு இருந்த இந்த இரண்டு நிர்வாகத்தையும் இணைச்சு, ஒரே நிர்வாகமா ஆக்கிட்டாங்க.


இந்த பஸ்களுக்கு ரூட் நம்பர் வெக்கிறதில் உள்ள லாஜிக் அலாதியானது. பஸ்கள் இயங்கும் பகுதியை தமிழகத்தில் 5 மண்டலமா பிரிச்சிருக்காங்க. வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு & மத்திய தமிழகம். பஸ் ரூட்டுகளுக்கு 3 டிஜிட் நம்பர் கொடுத்திருக்காங்க. அதில் முதல் இலக்கம், எந்த வழித்தடத்தில் இயங்குதுன்னு சொல்லும். மத்த 2 டிஜிட் தான் ரூட் நம்பர். உதாரணங்கள் சொன்னா ஈசியா புரியும்.

வடக்கு-மத்திய தமிழகத்துக்கு இயக்கப்படும் பஸ்கள் 1 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-திருச்சி)

வடக்கு-தெற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 2 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-மார்த்தாண்டம்)

வடக்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 3 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-வேளாங்கண்ணி)

வடக்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 4 எனும் எண்ணில் துவங்கும் (உம்: சென்னை-கோவை)

தெற்கு-கிழக்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 5 எனும் எண்ணில் துவங்கும் (உம். கன்னியாகுமரி-நாகப்பட்டினம்)

தெற்கு-மேற்குக்கு இயக்கப்படும் பஸ்கள் 6 எனும் எண்ணில் துவங்கும் (உம்: நெல்லை-கோவை)

இது தவிர வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள்:

7 என துவங்குபவை கேரள மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

8 என துவங்குபவை கர்நாடக மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன

9 என துவங்குபவை ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படுகின்றன.

1980களில், திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் ஒரு அருமையான டைம் டேபிளை வெளியிட்டிருந்தது. அதில் தமிழகத்தின் எல்லா ஊரிலிருந்தும் பஸ் டைமிங், கனெக்ஷன் பஸ்கள், வழித்தடம், எங்கெல்லாம் நிக்கும்னு எல்லா விவரங்களும் ஒரு புத்தகமா வெளியிட்டாங்க. அடிக்கடி பயணம் செய்யுறவங்களுக்கு (சேல்ஸ் / மார்கெட்டிங் / சைட் எஞ்சினியர்கள்) ரொம்ப உதவிகரமா இருந்தது. இப்போ அப்படி எந்த டைம்டேபிளும் இல்லை. போக்குவரத்து கழக வெப்சைட்டிலும் முழுமையான விவரங்கள் இல்லை. பஸ் ஸ்டாண்டுகளிலும் விவரங்கள் கிடையாது.

முன்னெல்லாம் ஒவ்வொரு ஊரிலும், மத்திய பேருந்து நிலையம்னு ஒண்ணு இருந்தாலும், திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்துக்குன்னு ஒரு தனி பஸ் ஸ்டாண்டும் இருந்தது. இப்போ எல்லாமே ஒருங்கிணைந்த பேருந்து நிலையங்களா ஆயிருச்சு.

விரைவு போக்குவரத்து கழகத்தில் மினி பஸ்கள் கிடையாது. ஊட்டிக்கு கூட அஷோக் லேலண்டு வைகிங் பஸ் தான் ஓட்டுறாங்க. அவ்வளவு நீளமான பஸ்ஸை எப்படி மலை ஏத்துவாங்கன்னு எனக்கு ரொம்ப நாள் ஆச்சரியமா இருந்தது.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் தான் எல்லா தாலுக்காவுக்கும் பஸ்கள் இயக்குது என்பதால் அதில் தான் நான் தமிழகம் முழுவதும் சுத்தினேன். ஆனாலும் வட்டார போக்குவரத்து கழக பஸ்களில் அவசர காலங்களில் பயணிப்பேன். விரைவு போக்குவரத்து கழகம், எல்லா முக்கிய பஸ் ஸ்டாண்டிலும் நின்னு நின்னு போகும். காரணம் எல்லா டைம் ஆபீசிலும் வண்டி எண்டிரி செஞ்சு ஆகணும். அதுவுமில்லாம வேகக்கட்டுப்பாடு கருவி இருக்கிறதால மெல்லமா தான் போகும். வட்டார போக்குவரத்து கழகத்துக்கு அந்த பிரச்சனை இல்லை. பாய்ண்ட் டு பாயிண்ட் எப்படி வேணும்னாலும் போயிக்கிடலாம். வேகம் அவங்க இஷ்டப்படி.

சென்னையில் இருந்து கோவைக்கு திருவள்ளுவரில் 460ன்னு ஒரு ரூட் பஸ் முன்னெல்லாம், தாம்பரம், செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், சேலம், ஈரோடு பஸ் ஸ்டாண்டுகளில் நின்னு டைம் எண்ட்ரி பண்ணிட்டு போகும், ஆனா சேரன் போக்குவரத்து கழக பஸ் எங்கேயும் நிக்காது. ஏன்னா, அவங்களுக்கு இங்கெல்லாம் டைம் ஆபீஸ் இல்லை. சென்னை-பெங்களூர் 4 வழிப்பாதை அமைச்சப்புறம் அந்த 460 பஸ் ரூட்டு மாறி, வேலூர், தருமபுரி வழியா போக ஆரம்பிச்சுது.

சென்னை – கோவை 510 கி.மீ. சேரன் பஸ்ஸில் 2 டிரைவர்கள் இருப்பாங்க. ஆளுக்கு 170 கி.மீ (3.30 மணி நேரம்) பிரிச்சுக்குவாங்க. சென்னை-விழுப்புரம் 170 கி.மீ; விழுப்புரம்-சேலம் 170 கி.மீ; சேலம்-கோவை 170 கி.மீன்னு 11 மணிநேரத்தில் பயணிக்கணும். ஆனால் சென்னை-விழுப்புரம் 4 மணிநேரம் ஆயிரும். டிராஃபிக்! விழுப்புரம் சேலம் 3 மணிநேரம்; சேலம்-கோவை 2.30 மணிநேரம்னு சீக்கிரமாவே கோவைக்கு போயிரும் சேரன். இப்போ தனியார் வோல்வோ பஸ்கள் 7 மணிநேரத்தில் கோவைக்கு போவுது!

இந்த மாதிரி நீண்ட தூர பயணங்களில் பெரிய பிரச்சனையே உணவு தான். கண்ட கண்ட இடங்களில் இருக்கும் தரமற்ற ஹோட்டல்களில் வண்டியை நிறுத்தி சாப்பிட சொல்லுவாங்க. டிரைவருக்கும் கண்டக்டருக்கும் ஃபிரீ. ஆனா நம்மகிட்டே மொத்தமா கறந்துருவாங்க. பொதுவா, சென்னையில் இருந்து சாயந்தரம் கிளம்புற பஸ்கள் எல்லாத்துக்குமே விக்கிரவாண்டி தான் டின்னர் பாய்ண்ட். பசிக்கிற நேரத்தில் எந்த ஊரு வருதுன்னு பார்த்து அங்கே நிறுத்துவாங்க. தரமில்லாத உணவுக்கு எக்கச்சக்கமா காசு அழுது அரை மனசா பயணிச்ச காலங்கள் நிறைய.

பயணிகளின் கஷ்டத்தை அறிஞ்ச தமிழக அரசு, போக்குவரத்து கழகம் மூலமாவே ஒரு நல்ல தரமான மோட்டல் (வழியோர உணவகம்) கட்ட தீர்மானிச்சு, செங்கல்பட்டு கடந்ததும் மாமண்டூரில பிரமாண்டமான உணவகத்தை அமைச்சாங்க. எல்லா அரசு பேருந்துகளும் அங்கே தான் நிறுத்தி சாப்பிடணும்னு உத்தரவே போட்டுச்சு அரசு. ஆனா அந்த திட்டம் வெற்றி பெறலை. இப்போ அந்த மோட்டல் வீணா தான் கிடக்குது. அது தோற்றதுக்கு காரணம் இடம். இந்த மோட்டலை விழுப்புரத்தில் கட்டி இருந்தா உபயோகமா இருந்திருக்கும். செங்கல்பட்டில் கட்டினதால், பஸ் புறப்பட்ட 1.30 மணிநேரத்திலேயே உணவு பிரேக் என்பது நடைமுறையில் சரியா வரலை. அதனால் பல பஸ்கள் அங்கே நிறுத்தலை.

இப்பவும், விழுப்புரம், திருச்சி, கோவில்பட்டி, ஈரோடு, வாணியம்பாடி பகுதிகளில் அரசே தரமான மோட்டல்களை அமைச்சிதுன்னா ரொம்ப உதவியாக தான் இருக்கும்.

வெளிமாநிலத்துக்கு நம்ம பஸ்கள் இயங்குதுங்கறது உங்களுக்கு தெரியும். ஆனா இதில் என்னென்ன முரண்பாடுகள், உரிமைபோராட்டங்கள் எல்லாம் நடக்குது தெரியுமா?


கர்நாடக அரசு பஸ்கள், தமிழகத்தில் எல்லா பகுதிகளுக்கும் வந்து போயிட்டு இருக்கு. கொடைக்கானலுக்கு கூட வருது. தமிழகத்தை ஊடுருவி. தென் தமிழகம் வரைக்கும் சர்வீஸ் விடிருக்காங்க. ஆனா, நம்ம தமிழக பஸ்கள் தெற்கு கர்நாடகம் வரைக்கும் தான் செல்ல அனுமதி. ஷிமோகா, ஹூப்ளி, தவணகிரி, பெல்லலரி மாதிரி மத்திய / வடக்கு கர்நாடகத்துக்கு தமிழக பேருந்துகளுக்கு அனுமதி இல்லை.


அதே மாதிரி தான் ஆந்திராவும். ஆந்திரா பஸ்கள் தமிழ் நாட்டில் கோவை வரைக்கும் கூட வருது. ஆனா நமக்கு தெற்கு ஆந்திரா தவிர மேலே செல்ல அனுமதி இல்லை. எல்லைபுற நகரங்களான திருப்பதி, நெல்லூர் பகுதிகளுக்கு தான் தமிழக பஸ்கள் செல்ல அனுமதி. சென்னை – ஹைதிராபாத் ரூட்டுக்கு செம டிமாண்ட் இருக்கு. ஆனால் அந்த ரூட்டில் ஆந்திரா பஸ்களூம் தனியார் பஸ்களும் தான் இயங்குது, தமிழக பஸ்களுக்கு இன்னமும் அனுமதி இல்லை.

நாம மட்டும் என்ன லேசுப்பட்டவங்களா என்ன? கேரளாவின் எல்லா பகுதிகளுக்கும் தமிழக பஸ் சேவை இருக்கு. ஆனா, கேரள அரசு பஸ்களுக்கு வடக்கு தமிழகத்தில் பஸ் இயக்க அனுமதி இல்லை. சேலத்துக்கு வடகிழக்கே கேரள பஸ்கள் வருவதற்கு நாம் இன்னமும் அனுமதிக்கலை.

சென்னை-திருவனந்தபுரம் ரூட்டில் ஓடும் எல்லாமே தமிழக அரசு பஸ்களும் தனியார் பஸ்களும் தான். ஒரு சர்வீஸ் கூட கேரளாவுக்கு கொடுக்கலை. அதுக்கு பதிலா, பாலக்காடு-கோவை, திருவனந்தபுரம்-நாகர்கோவில் ரூட்டுகளில் நாம கம்மியா இயக்கி அவங்களுக்கு அதிக உரிமம் கொடுத்திருக்கோம்.


இதை விட இன்னொரு ஆச்சரியமான விஷயம் இருக்கு. கேரள மாநில பகுதியில் புதுவை மாநிலத்துக்கு சொந்தமான மாஹி என்கிற ஊர் இருக்கு. அங்கே இருந்து புதுவைக்கு கேரளா அரசு பஸ் இயக்கணும்னு அவங்க கோரிக்கை கொடுத்தும் நாம் அனுமதிக்கலை. கேரளா பஸ் மட்டும் அல்ல, அந்த ரூட்டில் புதுவை பஸ்சுக்கும் அனுமதி இல்லை. அதை தமிழக பஸ் மட்டுமே மொத்தமா எடுத்து புதுவை-கோழிக்கோடு ரூட்டில் நாமளே ஒரு திராபையான பஸ் இயக்கிட்டு இருக்கோம்! கேரளா அரசும், புதுவை அரசும் வோல்வோ சொகுசு பஸ் இயக்குறாங்கன்றது தெரிஞ்ச விஷயம்.

எதனால இந்த ஈகோன்னு எனக்கு தெரியலை. சென்னைக்கு கேரளா பஸ்கள் வர அனுமதி இல்லை. ஹைதிராபாதுக்கும் ஹூப்ளிக்கும் தமிழக பஸ்கள் வர அனுமதி இல்லை. சுருக்கமா பார்த்தா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் எல்லையோர பகுதிகளுக்கு மட்டும் தான் தமிழக பஸ்களுக்கு அனுமதி. கேரளாவில் முழு மாநிலத்திலும் அனுமதி. அதே நேரம் கேரள பஸ்களுக்கு தமிழகத்தில் எல்லைபகுதிகளில் மட்டும் தான் அனுமதி. ஆனால் கர்நாடக, ஆந்திர பஸ்களுக்கு தமிழகம் முழுவதும் அனுமதி. என்னமோ இதில் லாஜிக் இடிக்குதுல்ல?

அதை யோசிச்சிட்டு இருங்க.. அடுத்த பாகத்தில் விரிவா பேசுவோம்!
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.

Saturday, June 30, 2012

பயணிகள் கவனத்திற்கு – பாகம் 2



ந்த தொடரின் முதல் பாகத்தில ( Part-1 ) நான் தமிழக அரசு போக்குவரத்து கழகங்களை பத்தி சொன்னேன். அதில் இன்னமும் சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. ஆனா அதுக்கு முன்னாடி தமிழகத்தில் இருக்கிற தனியார் போக்குவரத்து கழகங்களை(!) பத்தி இப்போ கொஞ்சம் பேசலாம்.

தமிழ்நாட்டில், பேருந்து தேசியமயமாக்கப்படுறதுக்கு முன்னாடியே தனியார்கள் தான் பஸ் இயக்கிட்டு இருந்தாங்க. அதெல்லாம் குறிப்பிட்ட ரூட்டுகளில் மட்டும் தான். எல்லாருமே லாபம் பண்ண தான் பிசினஸ் பண்றாங்க. இதில் தனியார் பஸ் முதலாளிகளும் விதி விலக்கு அல்ல. அதனால் அவங்க முடிவை தப்பு சொல்ல முடியாது. ஆனா அதனால் பல கிராமங்களுக்கு நன்மை கிடைக்கலை.

அரசு பேருந்துகள் வந்தப்பறமும் தனியார்களுக்கு ரூட் பெர்மிட்டுகள் கொடுக்கப்பட்டு வருது. இதில் மூணு வகை இருக்கு.

நகர பேருந்துகள் :

சென்னை & மதுரை தவிர்த்த பிற நகரங்களில் நகர சேவைகளில் தனியாருக்கு அனுமதி கொடுத்திருக்காங்க. சில காரணங்களால், சென்னை பெரு நகரத்திலும் மதுரை மாநகரத்திலும் தனியாருக்கு நகர பேருந்து அனுமதி இல்லை. (ஆனாலும் சென்னையில் மிக மிக செல்வாக்கான நபர்களால் 2,3 டவுன் பஸ் தாம்பரம் ஏரியாவில் இயக்கப்பட்டுட்டு இருக்கு). இப்படியான நகரபேருந்துகளை ஒரு தனியார் இயக்க அனுமதி கேக்கும்போது, அந்த வட்டார அரசு போக்குவரத்து கழகம் தடையில்லா சான்றிதழ் தரணும். அதாவது அந்த ரூட்டில், அரசு போக்குவரத்து கழகம் சர்வீஸ் விட திட்டம் எதுவும் இல்லை (அ)) கூடுதல் சேவை செய்வதாக இல்லை. அதனால் தனியாருக்கு கொடுக்கலாம்னு அரசு போக்குவரத்து கழகம் சொல்லணும். ஆனா பல ஊர்களில் வெறும் தனியார் மட்டுமே இயக்கிட்டு இருக்கும் ரூட்டுகள் நிறைய இருக்கு. அந்த வழித்தடங்களில் அரசு பேருந்தே இல்லை. தனியார் லாபம் குவிக்கிற அந்த மாதிரி ரூட்டுகளில் ஏன் அரசு போக்குவரத்து கழகம் சேவை செய்யலைன்ற கேள்விக்கு பதில் எதுவும் இல்லை. இது கிட்டத்தட்ட, ஏர் இந்தியா கதை தான்.

ரெண்டாவது வகை: புறநகர் பேருந்துகள்:

இந்த கேட்டகரியில் மஃப்சல் பஸ்சுகள் இயக்கப்படுது. அதிகபட்சமா 150 கி.மீ வரைக்கும் அனுமதி. உதாரணமா கோவை-திருப்பூர்; கோவை-பொள்ளாச்சி; திருச்சி-தஞ்சை மாதிரி ரூட்டுகளை எடுத்துக்கலாம். அந்த வழித்தடத்தில் மிக மிக அதிகமான பயணிகள் எண்ணிக்கை இருக்கு. ஆனால் அந்த அளவுக்கு அரசு போக்குவரத்து கழகத்தால் சேவைகள் கொடுக்க முடியலை. அதனால் அதிக அளவிலான பெர்மிட்டுகளை தனியாருக்கும் கொடுத்து பயணிகளுக்கு வசதி செஞ்சு கொடுத்திருக்காங்க. இன்னும் சில ரூட்டுகளில் பயணிகள் எண்ணிக்கை குறைவு. அரசு நினைச்சால் பேருந்துகளை விட முடியும், ஆனாலும் தனியாருக்கு பெர்மிட் கொடுக்கிறாங்க. அது ஏன்னு கேட்க ஆளில்லை. அதெல்லாம் தனி சப்ஜெக்ட்டு. விடுங்க!

மூணாவது வகை தான் ரொம்ப குழப்பமான வகை. ஆம்னி பஸ்கள்.


மோட்டார் வாகன சட்டப்படி, ஆம்னி பஸ்கள் ரெகுலர் சர்வீஸ் செய்யக்கூடாது. அது ஒரு காண்டிராக்ட் வெஹிக்கல் தான். 5 வருஷம் முன்னே தனியார் பஸ்சில் சென்னை-கோவை; சென்னை-மதுரை; சென்னை-பெங்களூர் போனவங்களுக்கு தெரியும். ஒரு பரீட்சை அட்டையில் ஒரு பேப்பரில் 36 சீட் நம்பர் கொடுத்து அதில் நம்ம பேரையும் கையெழுத்தையும் வாங்கிக்குவாங்க. அதாவது. இந்த 36 பேரும் சேர்ந்து சென்னையில் இருந்து கோவை / மதுரை / பெங்களூர் மாதிரி இடங்களுக்கு இந்த பஸ்சை வாடகைக்கு எடுத்திருக்காங்கன்னு அர்த்தம். செக்போஸ்ட்டிலும் அப்படி தான் சொல்லிக்குவாங்க. ரெகுலர் சர்வீஸ், போர்டு எதுவும் போட கூடாது. டிக்கெட்டே கொடுக்க கூடாது (அது டூரிஸ்டு வண்டி தான்). சும்மானாச்சிக்கும் ஒரு ரெசிப்ட் நம்ம கிட்டெ கொடுத்திருப்பாங்க. பஸ்சில் ஏறினதும் அதை திரும்ப வாங்கிக்குவாங்க. அதுக்கு பதிலா போர்டிங் பாஸ்னு ஒரு சின்ன துண்டு ஸ்லிப் கொடுப்பாங்க.இது தான் வழக்கம்.

இது எதுக்காகன்னா, தொலைதூர பஸ்களை பொறுத்தவரைக்கும், அரசு போக்குவரத்து கழகம் மட்டும் தான் இயக்கணும். அவங்களுக்கு எந்த நஷ்டமும் வந்திரக்கூடாந்துன்றதுக்காக இந்த ஏற்பாடு.

ஆனா, இப்போ நிலமையே தலைகீழ். தனியார் பஸ்கள் ரெகுலர் சர்வீஸ் நடத்துறாங்க, டிக்கெட் கொடுக்குறாங்க, எந்த ரூட்டுன்னு எழுதியும் வெக்கிறாங்க, கிட்டத்தட்ட ஒரு சட்டவிரோத போக்குவரத்து கழகமே நடத்திட்டு இருக்காங்க. இதில் உச்ச பட்ச கொடுமை, கடந்த அதிமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களுக்குன்னு தனியா ஒரு பஸ்-ஸ்டாண்டே கட்டி கொடுத்தது தான். நியாயமா பார்த்தா, அரசு ரெகுலர் சர்வீஸ் ஓட்டுற பஸ்களை பறிமுதல் செஞ்சிருக்கணும். அது தான் சட்டம். ஆனா அதை அங்கீகரிச்சு, பஸ் ஸ்டாண்டையும் கட்டிகொடுத்து இருக்காங்க.


இதன் விளைவுகள் என்ன? தமிழகம் முழுக்க எந்த ஊரில் இருந்தும் எந்த ஊருக்கும் தனியார் சொகுசு பேருந்து இயக்கப்படுது. அதனால், அரசு விரைவு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குது. தமிழக போக்குவரத்து கழகங்கங்களிலேயே அதிக நஷ்டம் விரைவு போக்குவரத்து கழகத்துக்கு தானாம். அதத ஈடு கட்ட அரசு மானிய உதவி கொடுக்குது. அது மக்களின் வரிப்பணம். அந்த வரிப்பணத்தை அதிகரிக்க வரி உயர்வு, செலவுகளை ஈடுகட்ட பஸ்கட்டண உயர்வு எல்லாம் கொண்டு வரப்படுது.
சிம்பிளா சொன்னா, தனியார் பேருந்துகள் லாபம் கொழிக்கிறதுக்காக மக்களின் வரிப்பணம் விரையம் ஆயிட்டு இருக்கு.

விடுங்க.. ரொம்ப சீரியசா பேசிகிட்டு ஒரு டைவர்சன் எடுப்போம்.
எங்கப்பா கொஞ்சம் கொள்கை வாதி. ஒவ்வொரு விஷயத்திலும் அவருக்குன்னு ஒரு கருத்து இருக்கு. எங்கே போகணும்னாலும் அரசு பேருந்து தான். நமக்காக நம்ம அரசாங்கம் இயக்குற பஸ்சை நாமே உதாசீனப்படுத்தி நம்ம பணத்தை எதுக்காக தனியாருக்கு கொடுக்கணும்-ங்கற மாதிரியான கேள்விகள் அவர் கேட்கக்கூடியவர். அதனால் பெரும்பாலும் அரசு பஸ்ல தான் பயனம். ஆனாலும், நான் தனியா போகும் சந்தர்ப்பங்கலில் ஆம்னி பஸ்களில் 

சில சமயங்கள் போறதுண்டு.

நான் இது வரைக்கும் பயணிச்சதிலேயே செம ஸ்பீடு பஸ், (என்னை பொறுத்தவரைக்கும்) சென்னை-கரூர் போயிட்டிருந்த ராஜாளி ங்கற பஸ் தான் (1997). ராத்திரி 10.30 க்கு தி.நகர்ல எடுத்து விடிகாலை 5 மணிக்கு கரூர் வந்துருச்சு. 3 மணி சுமாருக்கு திருச்சி. இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னன்னா தாம்பரம் வரும்போது மணி இரவு 11.50. அவ்வளவு டிராஃபிக். தாம்பரம்- திருச்சி 3.30 மணிநேரம்.

கோவைக்கு தான் அதிகமா பயணிச்சிருக்கேன். அப்ப முதல் முதலில் SMP டிராவல்ஸ்ங்கற பஸ் தான் ஏர் சஸ்பென்ஷன் கோச் அறிமுகம் பண்ணினாங்க. சென்னை, பாடியில் உள்ள சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தில் தான் Pneuair என்று சொல்லப்படும் சஸ்பென்ஷன் சிஸ்டம் உற்பத்தி ஆயிட்டு இருந்தது. அதனால் அங்கே தான் மாசாமாசம் வந்து பராமரிக்கப்படும். அந்த சமயத்தில் ஏர் சஸ்பென்ஷனுக்கு கிடைச்ச அமோக வரவேற்பை பார்த்து பலரும் பின்பக்க கண்ணாடியில் ஏர் பஸ்ன்னு ஸ்டிக்கர் ஒட்டிட்டு ஓட்ட ஆரம்பிச்சாங்க.


ஏர் சஸ்பென்ஷன்ங்கறது, வண்டியில் சேசிசுக்கும் வீல் ஆக்சிலுக்கும் இடையில் Rubber Bladder மூலம் சஸ்பென்ஷன் கொடுக்கிற டெக்னிக். பொதுவா அந்த இடத்தில் வீல் பட்டி / ஸ்பிரிங் பட்டின்னு சொல்ற டைப் சஸ்பென்ஷன் தான் இருக்கும். அது இரும்புங்கறதால, தூக்கி தூக்கி போடும். அதிர்வு ஜாஸ்தியா இருக்கும். ஆனா ஏர் சஸ்பென்ஷன் முழுக்க காத்து தான். ரப்பர் குடுவைக்குள்ள காத்து ஃபில் பண்ணி இருக்கும். எல்லா பள்ளம் மேடுகளிலும் ரப்பர் குடுவை மட்டும் தான் அமுங்கி ரிலீஸ் ஆகும். அதனால் வீல் மட்டும் தான் மேலே கீழே போகுமே தவிர, சேசிசில் அதிர்வு இருக்காது. மொத்த அதிர்வும் ரப்பர் குடுவைக்குள்ளே தங்கி ஏர் மூலம் ரிலீஸ் ஆயிரும்.
இந்த முறை வந்தப்புறம். நிறைய மாற்றங்கள். எவ்வளவு ஸ்பீடா போனாலும், பஸ்சுக்குள்ள அதிர்வு இல்லை. தூக்கி தூக்கி போடுறதில்லை. சும்மா, மெத்தையில் படுத்து கிடக்கிற மாதிரி நிம்மதியா தூங்கிட்டு போகலாம்.
அப்போ கோவைக்கு ஏர் பஸ்கள் ரொம்ப கம்மி. SMP, SSS, Oasis, RR, KPN, Conti மட்டும் தான். நான் SMP அல்லது Conti தான் போறது. இப்போ நிறைய பஸ்கள் வந்தாச்சு. அதுவும் வோல்வோ தான் ரொம்ப டாப். கர்நாடகா-கேரளா ரூட்டை பொறுத்தவரைக்கும் வோல்வோ காலங்கள் கழிஞ்சு, கரோனா, மெர்சிடிஸ் பென்ஸ் எல்லாம் வர ஆரம்பிச்சிருச்சு. தமிழ் நாட்டில் இப்போ தான் வோல்வோ மல்டி ஆக்சில் வண்டியே பிரபலமாக துவங்கி இருக்கு. நமக்கு எல்லாம் எப்போ பென்ஸ் வருமோ?

இந்த தொடரின் முதல் பாகத்திலேயே சொன்னதை போல, தமிழ் நாட்டில் வோல்வோ சொகுசு பஸ்களை பதிவு செய்ய அனுமதி இல்லை. அதனால் தமிழகத்தில் ஓடிட்டு இருக்கிற அத்தனை வோல்வோ சொகுசு பஸ்களும் புதுவை, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தான் பதிவு செஞ்சு கொண்டுவர்றாங்க.


தமிழக அரசு இப்போ இந்த வருஷம் தான் போக்குவரத்து விதிகளில் மாற்றம் கொண்டு வந்து, தமிழக அரசு பேருந்துகளுக்கும் வோல்வோ வாங்கலாமான்னு யோசிக்கவே ஆரம்பிச்சிருக்காங்க. புதுவை, கேரளா, கர்நாடக, ஆந்திர மாநில அரசு பேருந்துகள் எப்பவோ நவீன பச்களை அறிமுகப்படுத்தி சக்கை போடு போட்டுட்டு இருக்காங்க. கர்நாடக அரசு பேருந்தின் வோல்வோ வண்டியை அடிச்சிக்க வேற எந்த ஸ்டேட்டாலும் முடியாது. அவ்வளவு சூப்பர் வண்டிங்க.

நம்ம தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழ்கம் இன்னும் பழைய மாடலில் தான் இருக்கு. எல்லாமே அசோக் லேலண்டு வண்டிங்க. பொதுவா சொந்தமா நாகர்கோவில் யூனிட்டில் அவங்களே கட்டிட்டு இருந்த வண்டிங்க. இப்போ சமீப காலமா, பெங்களூரில் Prakash, Harsha மாதிரி இடத்திலும், Veera, Irizar TVS மாதிரி கம்பெனிகளிலும் கொடுத்து சொகுசு பேருந்துகள் கட்டுறாங்க. அசோக்லேலண்டு பஸ்கள் தான் கம்பீரமான வண்டி, பாதுகாப்பும் கூட அப்படிங்கறது தமிழகத்தின் பொதுவான பார்வை. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஃபோர்டு பஸ்களையும் கொஞ்சகாலம் (1980 களில்) இயக்கினாங்க. டாட்டா வண்டிகள் இப்பவும் பல போக்குவரத்து கழகத்தால் இயக்கப்பட்டுட்டு இருக்கு.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து ரொம்ப முக்கியமான விஷயமா இருக்கு. சொகுசு, நிம்மதி, விரைவு உள்ள பயணங்களுக்கு எந்த செலவு கணக்கையும் யாரும் பார்க்கிறது இல்லை. அதனால் தமிழக அரசு, சீக்கிரமாகவே வோல்வோ மாதிரியான சொகுசு பேருந்துகளை இயக்கணும்ங்கறது பலருடைய ஆசை.

அரசு விரைவு போக்குவரத்து கழக ரூட் நம்பர்களுக்கான லாஜிக், அண்டை மாநிலங்களுடன் பேருந்து போக்குவரத்து பரிவர்த்தனையில் உள்ள முரண்பாடுகள், விபத்துக்கள், பயண  அனுபவங்கள், பயணிகளுக்கான வசதிகள் எல்லாம்.. அடுத்த பகுதியில்

பயணிகள் கவனத்திற்கு! -

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இது சதீஷ்சென்னை அவர்களது பதிவுங்க.தகவலுக்காக பதிவு செய்கிறேன்.சதீஷ் அவர்களுக்கு நன்றிங்க.

Friday, June 22, 2012

பயணிகள் கவனத்திற்கு! - பாகம் 1




இன்று காலை எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதாவது தமிழக அரசு சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு அறிவுரைப்படி, தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழகங்கள் தாங்கள் இயக்கும் அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள், மற்றும் 300 கிமீக்கு மேல் இயக்கப்படும் வழித்தடங்களை விரைவு போக்குவரத்துக்கழகத்திடம் ஒப்படைக்கவேண்டும், என்பது தான் அந்த செய்தி. இது ஒரு வகையில் நல்ல விஷயம்.
இந்த செய்தியை படிச்சதுமே மனசு பல பல பயண நினைவுகளுக்கு போக தொடங்கிருச்சு.
முன்னெல்லாம், பஸ் போக்குவரத்து ஃபுல்லா தனியார் கிட்டே தான் இருந்தது. அவங்க அதிக வருமானம் உள்ள ரூட்டுகளில் மட்டும் தான் ட்ரிப் அடிச்சிட்டு இருந்தாங்க. ரிமோட் ஏரியா, கிராமங்கள், மலைபிரதேசங்களுக்கெல்லாம் பஸ் சர்வீஸ் இல்லை. எல்லா ஊர்களிலும் பஸ் வசதி வேணும்னு நினைச்ச அப்போதைய தமிழக அரசு, பஸ் மொதலாளிங்க கிட்டே பேசினாங்க. ஆனா அது சரிவரலை. யாருமே லாபமில்லாத ரூட்டுகளில் பஸ் இயக்க முன்வரலை. மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லாம இருக்கிறதை நினைச்ச அப்பொதைய முதல்வர் கலைஞர் அதிரடியா, பேருந்துகளை தேசியமயமாக்கும் சட்டத்தை கொண்டு வந்து அத்தனை பஸ்களையும் அரசுடமையாக்கினார். இதன் மூலம், அரசே எல்லா ஊர்களுக்கும் பஸ் இயக்க ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் பஸ் முதலாளிகளின் பல கோரிக்கைகளை கவனிச்சு, தனியார்களுக்கும் சில சில ரூட்களில் பஸ் இயக்க அனுமதி கொடுத்தாங்க. சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் னு 4 போக்குவரத்து கழகங்கள் திசைக்கொண்ணா ஆரம்பிச்சு, எல்லா கிராமங்களையும் இணைக்க ஆரம்பிச்சது. ஆள் இருக்காங்களோ இல்லையோ, டைமுக்கு அந்த ரூட்டில் வண்டி இயக்கியே ஆகணும்னு கலைஞர் போட்ட உத்தரவு இன்னை வரைக்கும் நடைமுறையில் இருந்துட்டு இருக்கு. ஆந்திராவில் பல ஊர்களுக்கு, போதிய ஆள் இல்லைனா டிரிப்பை கேன்சல் பண்ணிருவாங்க. அந்த மாதிரியான பிரச்சனை இந்த தமிழ்நாட்டில் இல்லை.

இந்த 4 போக்குவரத்து கழகங்களும் அதுக்கு அப்புறம் வளர்ந்து 21 போக்குவரத்து கழகங்கள் ஆச்சு. பல்லவனில் இருந்து பிரிச்சு வெளியூர் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் திருவள்ளுவர் ஆரம்பிச்சாங்க. திருவள்ளுவரில் இருந்து வெளி மாநில பஸ்களை மட்டும் பிரிச்சு ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க! இப்படி பல் பல போக்குவரத்து கழகங்கள், பல்லவன், டாக்டர்.அம்பேத்கார், திருவள்ளுவர், ராஜீவ்காந்தி (முன்பு ஜெ.ஜெயலலிதா) டாக்டர்.புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை சத்தியா (இந்த பேர் மட்டும் தான் தேவையில்லாத பேர்), அண்ணா, ஜீவா, சேரன், பாரதியார், தந்தை பெரியார், தீரன் சின்னமலை, வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், ராணி மங்கம்மாள், சோழன், மருது பாண்டியர், பாண்டியன், கட்டபொம்மன், நேசமணி ன்னு ஒவ்வொரு கோட்டமா பஸ்கள் இயக்கப்பட்டது.

அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்குன்னு தனித்தனியா பஸ் வடிவமைக்கும் கட்டும் தொழிற்கூடங்களும் அமைச்சாங்க. இதில் சேரன் போக்குவரத்து கழக கட்டுமான நிறுவனம் ரொம்ப புகழ் பெற்று, சிறந்த வடிவமைப்புக்காக பல பல விருதுகளை பெற்றது. சேரன் போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் இல்லாம, போலீஸ், தீயணைப்பு துறை, மற்றும் டெல்லி, மும்பை போன்ற வெளிமாநில பேருந்துகள் கட்டுமான ஆர்டர்களும் சேரனுக்கு வந்து குவியத்தொடங்கினதால, அதை தனி நிறுவனமா, சேரன் பொறியியற் கழகம்னு பொள்ளாச்சியில் ஆரம்பிச்சாங்க.
ஜாதி பிரச்சனை உக்கிரமா இருந்த காலகட்டமான 90களின் இறுதியில், சுந்தரலிங்கம், அழகுமுத்துக்கோன் ஆகிய பேரில் எல்லாம் போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சதை எதிர்த்து ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு பேரில் போக்குவரத்து கழகம் வேணும்னு போராடினாங்க. வேறே வழியில்லாம அப்போதைய முதல்வர் கலைஞர், எல்லா போக்குவரத்து கழக பேரையும் நீக்கி, தமிழக அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு மாத்தினாரு. அதே மாதிரி 21 கழகங்களா இருந்ததை நிர்வாக வசதிக்காக 7 கழகங்களா இணைச்சு அறிவிச்சாரு.. இதெல்லாம் தான் தமிழகத்தின் போக்குவரத்து கழக வரலாறு!

நான் அதிகமாக தமிழகத்தில் பயணிக்கிற ஆளு. எப்பவுமே விரைவு போக்குவரத்து கழகம் தான். அவங்க நாகர்கோவிலில் கட்டுற பஸ் பாடி, ரொம்ப ஹெவி டூட்டி, பாதுகாப்பானது. ஆனா 1991-96ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, புதுசா ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சபோது, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் கொடுத்து வடிவமைக்க ஆரம்பிச்சாங்க. அழகா இருந்தது. நவீன வசதிகள் இருந்தது. ஆனா பஸ் வீக்! ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு விபத்தில் சட்டுன்னு தீ பிடிச்சு அரை மணிநேரத்துக்குள்ளே முழுசா எரிஞ்சு முடிஞ்சிருச்சு.

நான் நாகர்கோவில் போகும்போதெல்லாம் மெனக்கெட்டு காத்திருந்து திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் இயக்கிய நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு தான் போவேன். செம ஸ்பீடு. 14 மணிநேரத்தில் சென்னை-நாகர்கோவில்ங்கறது அப்ப எல்லாம் நம்ப முடியாத வேகம். அந்த பஸ்ஸில் வயர்லெஸ் இருக்கும். சென்னை-நாகர்கோவில் தே.நெ45 முழுக்க பயணிக்கிறதால அந்த வழியா வர்ற போற பஸ்களில் ஏதாவது பிரச்சனை இருந்தா இவங்க அந்தந்த ஏரியா ஆபீசுக்கு தகவல் கொடுத்துட்டே போவாங்க.

திருவள்ளுவர் பஸ்சில் ஒவ்வொரு ஊருக்கு போற பஸ்சுக்கும் அழகழககன பேருகள் இருந்தது. கோவைக்கு அபபோ 3 பஸ் தான் (காட்டன் சிட்டி, வெண்ணிலா, வண்ணத்துப்பூச்சி). நான் வெண்ணிலா தான் வேணும்னு அடம்பிடிச்சு பயணிச்ச காலங்கள் இருக்கு. அவ்வளவு சூப்பர் பஸ்.
அதே மாதிரி கோவை ஈரோடு மார்க்கத்தில் வித்தியாசமான 2 பஸ்கள் இருந்தது. ஜீவா ஜெட், ஜீவா புல்லட். அதோட வடிவமைப்பு தான் விஷயமே. ஏரோபிளேன் மாதிரியே வடிவமைச்சிருப்பாங்க. முன்னாடி நீண்ட மூக்கு, சைடு கண்ணாடிகள் ரவுண்டு ஷேப், பஸ் பாடியே லேசா உருளையா வடிவமைச்சிருப்பாங்க. வெள்ளை நிறம். விமானத்தில் இருக்கிற மாதிரி சீட்டுகள், சைடு ஸ்கிரீன்னு உள்ளே ஒரு அற்புதமான எக்ஸ்பீரியன்ஸ். அதில் பயணிக்கணும்னே காரணமே இல்லாம கோவை டூ ஈரோடு பயணிச்சேன். 2 ஜெட், 2 புல்லட். ஆக இந்தியாவிலேயே 4 பஸ் தான் இந்த மாதிரி இருந்தது.

அதே மாதிரி இப்போ நம்ம சென்னையில் அதிகமா தென்படுற இரட்டை பஸ்கள் நகர பேருந்தா இயங்கிட்டு இருக்கு. அப்படி பட்ட இரட்டை பஸ்களை முதல் முதலா நீண்ட தூர பயணத்துக்கு பயன்படுத்தினதும் ஜீவா போக்குவரத்து கழகம் தான். கோவை மதுரை ரூட்டில் ஓடிட்டு இருந்தது.
காலங்கள் மாற மாற பஸ்களில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆடியோ/வீடியோ வசதி, டீ/காபி குளிர்பான வசதி (ராஜீவ் காந்தி போக்குவரத்து க்ழக பேருந்துகளில் மட்டும்), சாய்வு இருக்கை வசதி. ஏர் சஷ்பென்ஷன் எனப்படும் மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்துகள்னு சொகுசு வசதிகள் வந்திச்சு.

தமிழக அரசு பேருந்துகளில் வோல்வோ சொகுசு பேருந்துகளையும், ஸ்லீப்பர் பேருந்துகளையும் அனுமதிக்கிறதில்லை. வோல்வோவில் இருந்து நகர பேருந்துகள் மட்டும் தான். வோல்வோ பேருந்துகளை தனியார் இயக்குறாங்க, ஆனால் அது எதையும் தமிழகத்தில் பதிவு செய்ய முடியாது. நாம் வோல்வோ பேருந்துகளை இன்னும் அங்கீகரிக்கலை. அதனால் அவங்க பக்கத்து மாநிலத்தில் தான் பதிவு செஞ்சு இங்கே இயக்குறாங்க.

தமிழகத்தில் ஆல்மோஸ்ட் எல்லா ரூட்டிலும் பஸ் பயணம் பண்ணி இருந்தாலும் மறக்கமுடியாத ரூட்டு, சென்னை நாகர்கோவில் தான். கிட்டத்தட்ட தமிழகத்தையே குறுக்குவெட்டா பயணிக்கலாம். விதம் விதமான மக்கள், கலாச்சாரம், பேச்சு வழக்கு.. ரொம்ப அருமையா இருக்கும் ஒவ்வொரு ட்ரிப்பும்.

இப்போ வேகக்கட்டுப்பாடு கருவி அமைச்சு 60 கி.மீக்கு மேல் ஸ்பீடு போகக்கூடாதுன்னு கண்டிரோல் பண்ணி இருக்காங்க. முன்னெல்லாம் அப்படி இல்லை. சென்னை திருச்சி நான் அரசு பஸ்சில் 5 மணி நேரத்தில் (4 வழி பாதை எல்லாம் இல்லாத சாதாரண ரோட்டில்) போயிருக்கேன். அதில் விக்கிரவாண்டியில் 30 நிமிஷ உணவு இடைவேளை வேறே. நினைச்சு பாருங்க, எப்படி பறந்திருக்கும்னு!

தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும், எல்லா ஊரில் இருந்தும் எல்லா ஊருக்கும் பஸ் வசதி இருக்கு. இந்தியாவில் நான் பல மாநிலங்கள் போயிருக்கேன். இந்த அளவுக்கு பஸ் கனெக்டிவிட்டி எங்கேயும் கிடையாது.
ஒரு முறை நான் விஜயவாடாவில் இருந்து அவசரமா ஹைதிராபாத் போக வேண்டி இருந்தது. சாயந்தரம் 6 மணிக்கு ஒரு பஸ் இருக்கு அதை விட்டா காலையில் தான். வேறே மாறி மாறி போகவும் வசதி இல்லை. காரணம் நீங்க நடு ராத்திரி வராங்கல் போனீங்கன்னா, அங்கே இருந்தும் காலையில் தான் பஸ்ஸுன்னுட்டாங்க.

ஆனா தமிழ்நாடு அப்படி இல்லை, ஒரு உறவினர் இறந்த செய்தி வந்தப்போ, நான் சென்னையில் இருந்து அவசரமா கோவைக்கு போக வேண்டி இருந்தது. செய்தி வந்தப்போ இரவு 10.30 மணி. கோவைக்கான நேரடி பஸ் எல்லாம் 9 மணியோட முடிஞ்சுது. டிரயினும் கிடையாது. காலையில் கிளம்புறது ரொம்ப லேட். ஆனா சென்னையில் இருந்து எந்நேரமும் சேலம் / திருச்சி பஸ் இருக்கு. அங்கே இருந்து கோவைக்கு 24 மணிநேரமும் பஸ் இருக்கு. இதே கதத தான் எந்த ஊருக்கு போகணும்னாலும். கனெக்டிவிட்டியில் தமிழகத்தை அடிச்சுக்கற அளவுக்கு வேறே எந்த மாநிலத்திலும் பஸ் சர்வீச் கிடையாது.
இன்னும் நிறைய நினைவுகள் இருக்கு.. அதை எல்லாம் இன்னொரு முறை பார்க்கலாம்.

இப்போதைய கதைக்கு வருவோம்.

அரசு இப்போ அறிவிச்சிருக்கிறபடி பார்த்தா.300 கி.மீக்கு மேல எந்த ரூட்டிலும் TNSTC வண்டியகளை இயக்கக்கூடாது. அது மாதிரி ரூட்டுகளை எல்லாம் SETC க்கு கொடுத்திரணும். அதே மாதிரி ஏசி பஸ், சொகுசி பஸ்களையும் விரைவு போக்குவரத்து கழகம் தான் இனிமேல் இயக்கும்.

இதுவரைக்கும், நீண்ட தூர பேருந்துகளை (250 கி.மீக்கு மேல்) விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தான் இயக்கும்னு இருந்தாலும், அந்தந்த வட்டார போக்குவரத்து கழகம் சார்பா சென்னை மற்றும் முக்கிய ஊர்களுக்கு (பெங்களூர், திருச்சி, மதுரை) பேருந்துகளை இயக்கிக்கலாம்னு ஒரு விதிவிலக்கு இருந்தது. இந்த வசதிக்கு 250 கிமீ கட்டுப்பாடு பொருந்தாது. ஆனாலும், விழுப்புரம் கோட்டம் மட்டும் இதில் விளையாடிட்டே இருந்தது. சென்னை-மதுரை; சென்னை-கோவை ரூட்டுகளில் எல்லாம் அவங்க பஸ் ஓடிட்டு இருந்தது. விழுப்புரம் புவியியல் அடிப்படையில் சென்னை-பெரம்பலூர் அனுமதி, விழுப்புரம்-மதுரை அனுமதி ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி அவங்க அப்படி சென்னை-மதுரை பஸ் இயக்கிட்டு இருந்தாங்க. மத்த போக்குவரத்து கழகம் எடுத்தீங்கன்னா, சேலம்-சிதம்பரம்; கோவை-நெல்லை; மதுரை-பெங்களூர்; நாகர்கோவில்-சேலம் மாதிரி விதிகளை மீறி இயக்கிட்டு தான் இருந்தாங்க.இனிமேல் அதெல்லாம் முடியாது.

இது ஒரு வகையில் ரொம்ப வசதியானதும் கூட. நீண்ட தூர பேருந்துகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர்றதால ரிசர்வேஷன், ஏறும் இடம் போன்றவற்றில் இப்போ இருக்கிர குழப்பம் நீங்கும். இன்னும் சொல்லப்போனா, விரைவு போக்குவரத்து கழகத்துக்கு மட்டும் தான் இனி மேல் ரிசர்வேஷன். இது ஒரு பெரிய மாற்றம்.வரவேற்க வேண்டிய விஷயம் தான்.

ஒரு கோர்வையா சொல்லாம, மனசுக்கு தோணினதை எல்லாம் சொல்லிட்டே வர்றேன் இந்த தொடர்ல..இன்னும் இருக்கு நிறைய பகிர்ந்துகொள்ள. விரைவில் அடுத்த பாகம்!

சத்தியமங்கலத்தில் விமானம் வாங்க!?!?!?!?!.

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.விமானம் வாங்க அரசு பஸ்ஸை ஓட்டிச்சென்ற புத்திசாலி....

கடத்தப்பட்ட அரசு பஸ்: சினிமா பாணியில் விரட்டிப்பிடிப்பு

மே 19,2014  IST தினமலர்
election 2011 கடத்தப்பட்ட அரசு பஸ்: சினிமா பாணியில் விரட்டிப்பிடிப்பு
A+  A-
அன்னூர்: மனநலம் பாதிக்கப்பட்டவர், அரசு பஸ்சை கடத்தி, 60 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். சினிமா பாணியில் விரட்டிச் சென்ற போலீசார், கோவை அருகில் மடக்கிப் பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கிளையைச் சேர்ந்த, 'பாயின்ட் டூ பாயின்ட்' அரசு பஸ் (டி.என்.33.என்.2256) கோவையிலிருந்து, நேற்று சத்தி சென்றது. கோபி, பூதிமலைபுதூரைச் சேர்ந்த டிரைவர் ராசு, பஸ்சை ஓட்டினார். சத்தியைச் சேர்ந்த சாமி என்பவர், கன்டக்டராக பணிபுரிந்தார்.

மதியம், 12:00 மணிக்கு, சத்தி பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு, இருவரும், ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். திரும்பி வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பஸ்சை காணவில்லை. விசாரித்த போது, வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர், பஸ்சை ஒட்டிச் சென்றதாக, அருகிலிருந்த மக்கள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மற்றும் கோவை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தி - கோவை வழித்தடத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார் படுத்தப்பட்டன. மதியம், 1:30 மணிக்கு, அன்னூர் - கோவை ரோட்டில், கரியாம்பாளையத்தை, இந்த பஸ் கடந்து சென்றது. வழியில் போலீசார், தங்களது ஸ்டேஷன் முன் நின்று, பஸ்சை நிறுத்த முயன்றனர்; பஸ் நிற்கவில்லை.
போலீசார் காரில், பஸ்சை துரத்தினர். கோவை ரோட்டில், குரும்பபாளையம் சென்ற பஸ், அங்கிருந்து, இடதுபக்கம் ஏர்போர்ட் ரோட்டில் சென்றது. அந்த ரோட்டில், 500 மீட்டர் தூரம் துரத்திச் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் முன் பஸ்சை ஓவர்டேக் செய்து மடக்கி நிறுத்தினர்.
போலீசார், பஸ்சுக்குள் ஏறியதும், எந்த எதிர்ப்பும் காட்டாமல், பஸ்சை கடத்தியவர், போலீசாருடன் ஸ்டேஷனுக்கு வந்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ் கொண்டு வரப்பட்டது. விசாரணையில், பஸ்சை கடத்தியவர், ஈரோடு மாவட்டம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம், ராஜ் நகரைச் சேர்ந்த, ராஜேந்திரன், 45, என, தெரிய வந்தது. இவர், இதற்கு முன், மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றிதும், இரண்டு ஆண்டுகளாக, வேலைக்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்ததில், 'பிளைட்டில் (விமானத்தில்) செல்ல வேண்டும் என்பதற்காக, ஏர்போர்ட் செல்ல பஸ்சை எடுத்து சென்றேன்' என, தெரிவித்துள்ளார்; எதற்காக, பிளைட்டில் செல்ல வேண்டும் என, கேட்ட போது, 'புதிய பிளைட் வாங்குவதற்காக, பிளைட்டில் செல்ல வேண்டும்' என்றும் கூறியுள்ளார். பஸ்சை கடத்தியவரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ராஜேந்திரனையும், கடத்தப்பட்ட பஸ்சையும் மீட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அரசு பஸ்சை, 60 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். வழியில் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், நிலைமை மோசமாகியிருக்கும். பஸ் ஊழியர்கள், சாப்பிடச் செல்லும்போது, எதற்காக, பஸ்சிலேயே, சாவியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. விசாரித்த போது, அதிர்ச்சி அடைந்தோம்; அந்த பஸ்சை, ஸ்டார்ட் செய்ய சாவி கிடையாது என்றனர். இனிமேலாவது, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், உஷார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
.

விமானம் வாங்க பேருந்தை ஓட்டிச் சென்ற?????


மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.மாலை மலர் செய்தி! பாருங்க,
அரசு பஸ்சை 60 கி.மீ தூரம் ஓட்டிய மனநோயாளி
அரசு பஸ்சை 60 கி.மீ தூரம் ஓட்டிய மனநோயாளி
கோவை, மே. 20–
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – கோவை வழித்தடத்தில் நேற்று வழக்கமாக செல்லும் பஸ்சுக்கு பதிலாக மாற்றுபஸ் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் டிரைவராக அய்யரசும், கண்டக்டராக சாமிக் கவுண்டரும் இருந்தனர்.
சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு 2 பேரும் ஓட்டலுக்கு சாப்பிட சென்றனர். சிறிது நேரம் கழிந்து திரும்பி வந்து பார்த்தபோது அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்சை காணவில்லை.
அதிர்ச்சியடைந்த டிரைவரும், கண்டக்டரும் திகைத்து நின்றனர். சில நிமிடங்களுக்கு முன் சாதாரண உடையில் இருந்த ஒருவர் பஸ்சை ஓட்டிச் சென்றார் என்று தகவல் கிடைத்தது. இதனையடுத்து சத்தியமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
உடனடியாக சத்தியமங்கலம் போலீசார் இது குறித்து கோவை, மேட்டுப்பாளையம், கோபி நெடுஞ்சாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உஷாரான போலீசார் குறுக்குசாலை உள்பட நெடுஞ்சாலைகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். குறிப்பிட்ட பஸ் எண்ணை கூறி அதனை மடக்கிப்பிடியுங்கள் ஓவர்... ஓவர்... என்று உத்தரவுகள் பறந்தன.
சத்தியமங்கலத்தில் இருந்து கோவை வரையில் சுமார் 60 கி.மீட்டர் வரை போலீசாரிடம் சிக்காமல் பஸ்சை ஓட்டி வந்த கடத்தல்காரன் பஸ்சுடன் கோவில்பாளையம் போலீசாரிடம் சிக்கினான். பின்னர் அவன் சத்தியமங்கலம் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டான்.
போலீஸ் விசாரணையில் அவன் சிக்கதாசம் பாளையத்தை சேர்ந்த தனியார் பஸ் ஓட்டுனர் ராஜேந்திரன் (வயது45) என்பது தெரியவந்தது. எதற்காக பஸ்சை கடத்தினீர்கள்? என்று கேட்டபோதுதான் போலீசாரை கிறுகிறுக்க வைத்தது. புதிதாக விமானம் வாங்க வேண்டும். வெளிநாடு செல்ல நேரமாகி விட்டதால் விமானத்தை பிடிக்க பஸ்சை கடத்தினேன் என்றார்.
அதிர்ச்சியடைந்த போலீசார் அவரது உறவினர்களை அழைத்து விசாரித்தபோது ராஜேந்திரன் கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறினார்கள்.
அதிர்ஷ்டவசமாக அசம்பா விதம் நடக்கவில்லை. பஸ் கடத்தல் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

செவ்வாய், 1 ஜூலை, 2014

ஐ.ஏ.எஸ்.தேர்வில் பஸ் டிரைவர் வெற்றி......

மரியாதைக்குரியவர்களே,
           வணக்கம்.ஓட்டுநர்களும் சமூகத்தில் ஒருவரே!.இதோ ஒரு ஓட்டுநர் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கதை.வெளியிட்ட தினமணி நாளிதழுக்கு நன்றிங்க.