வியாழன், 10 ஜூலை, 2014

சத்தியமங்கலத்தில் விமானம் வாங்க!?!?!?!?!.

மரியாதைக்குரியவர்களே,
              வணக்கம்.விமானம் வாங்க அரசு பஸ்ஸை ஓட்டிச்சென்ற புத்திசாலி....

கடத்தப்பட்ட அரசு பஸ்: சினிமா பாணியில் விரட்டிப்பிடிப்பு

மே 19,2014  IST தினமலர்
election 2011 கடத்தப்பட்ட அரசு பஸ்: சினிமா பாணியில் விரட்டிப்பிடிப்பு
A+  A-
அன்னூர்: மனநலம் பாதிக்கப்பட்டவர், அரசு பஸ்சை கடத்தி, 60 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். சினிமா பாணியில் விரட்டிச் சென்ற போலீசார், கோவை அருகில் மடக்கிப் பிடித்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கிளையைச் சேர்ந்த, 'பாயின்ட் டூ பாயின்ட்' அரசு பஸ் (டி.என்.33.என்.2256) கோவையிலிருந்து, நேற்று சத்தி சென்றது. கோபி, பூதிமலைபுதூரைச் சேர்ந்த டிரைவர் ராசு, பஸ்சை ஓட்டினார். சத்தியைச் சேர்ந்த சாமி என்பவர், கன்டக்டராக பணிபுரிந்தார்.

மதியம், 12:00 மணிக்கு, சத்தி பஸ் ஸ்டாண்டில் பயணிகளை இறக்கி விட்டு, இருவரும், ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றனர். திரும்பி வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பஸ்சை காணவில்லை. விசாரித்த போது, வேட்டி சட்டை அணிந்த ஒரு நபர், பஸ்சை ஒட்டிச் சென்றதாக, அருகிலிருந்த மக்கள் தெரிவித்தனர். போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மற்றும் கோவை போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சத்தி - கோவை வழித்தடத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களும் உஷார் படுத்தப்பட்டன. மதியம், 1:30 மணிக்கு, அன்னூர் - கோவை ரோட்டில், கரியாம்பாளையத்தை, இந்த பஸ் கடந்து சென்றது. வழியில் போலீசார், தங்களது ஸ்டேஷன் முன் நின்று, பஸ்சை நிறுத்த முயன்றனர்; பஸ் நிற்கவில்லை.
போலீசார் காரில், பஸ்சை துரத்தினர். கோவை ரோட்டில், குரும்பபாளையம் சென்ற பஸ், அங்கிருந்து, இடதுபக்கம் ஏர்போர்ட் ரோட்டில் சென்றது. அந்த ரோட்டில், 500 மீட்டர் தூரம் துரத்திச் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் முன் பஸ்சை ஓவர்டேக் செய்து மடக்கி நிறுத்தினர்.
போலீசார், பஸ்சுக்குள் ஏறியதும், எந்த எதிர்ப்பும் காட்டாமல், பஸ்சை கடத்தியவர், போலீசாருடன் ஸ்டேஷனுக்கு வந்தார். போலீஸ் ஸ்டேஷனுக்கு பஸ் கொண்டு வரப்பட்டது. விசாரணையில், பஸ்சை கடத்தியவர், ஈரோடு மாவட்டம், பண்ணாரி, சிக்கரசம்பாளையம், ராஜ் நகரைச் சேர்ந்த, ராஜேந்திரன், 45, என, தெரிய வந்தது. இவர், இதற்கு முன், மேட்டுப்பாளையம் வழித்தடத்தில், தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றிதும், இரண்டு ஆண்டுகளாக, வேலைக்கு செல்லாமல் இருப்பதும் தெரிய வந்தது. மேலும், அவர், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரித்ததில், 'பிளைட்டில் (விமானத்தில்) செல்ல வேண்டும் என்பதற்காக, ஏர்போர்ட் செல்ல பஸ்சை எடுத்து சென்றேன்' என, தெரிவித்துள்ளார்; எதற்காக, பிளைட்டில் செல்ல வேண்டும் என, கேட்ட போது, 'புதிய பிளைட் வாங்குவதற்காக, பிளைட்டில் செல்ல வேண்டும்' என்றும் கூறியுள்ளார். பஸ்சை கடத்தியவரின் பதிலால் அதிர்ச்சி அடைந்த போலீசார், சத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், ராஜேந்திரனையும், கடத்தப்பட்ட பஸ்சையும் மீட்டுச் சென்றனர்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: மனநலம் பாதிக்கப்பட்ட நபர், அரசு பஸ்சை, 60 கி.மீ., தூரம் ஓட்டிச் சென்றுள்ளார். வழியில் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால், நிலைமை மோசமாகியிருக்கும். பஸ் ஊழியர்கள், சாப்பிடச் செல்லும்போது, எதற்காக, பஸ்சிலேயே, சாவியை விட்டுச் செல்ல வேண்டும் என்ற சந்தேகம் எழுந்தது. விசாரித்த போது, அதிர்ச்சி அடைந்தோம்; அந்த பஸ்சை, ஸ்டார்ட் செய்ய சாவி கிடையாது என்றனர். இனிமேலாவது, அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம், உஷார் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக