வியாழன், 10 ஜூலை, 2014

பயணிகள் கவனத்திற்கு! -

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.இது சதீஷ்சென்னை அவர்களது பதிவுங்க.தகவலுக்காக பதிவு செய்கிறேன்.சதீஷ் அவர்களுக்கு நன்றிங்க.

Friday, June 22, 2012

பயணிகள் கவனத்திற்கு! - பாகம் 1




இன்று காலை எனக்கு ஒரு செய்தி கிடைத்தது. அதாவது தமிழக அரசு சமீபத்தில் கொடுத்திருக்கும் ஒரு அறிவுரைப்படி, தமிழகத்திலுள்ள அரசு போக்குவரத்துக்கழகங்கள் தாங்கள் இயக்கும் அதிநவீன சொகுசு பேருந்துகள், குளிர்சாதன பேருந்துகள், மற்றும் 300 கிமீக்கு மேல் இயக்கப்படும் வழித்தடங்களை விரைவு போக்குவரத்துக்கழகத்திடம் ஒப்படைக்கவேண்டும், என்பது தான் அந்த செய்தி. இது ஒரு வகையில் நல்ல விஷயம்.
இந்த செய்தியை படிச்சதுமே மனசு பல பல பயண நினைவுகளுக்கு போக தொடங்கிருச்சு.
முன்னெல்லாம், பஸ் போக்குவரத்து ஃபுல்லா தனியார் கிட்டே தான் இருந்தது. அவங்க அதிக வருமானம் உள்ள ரூட்டுகளில் மட்டும் தான் ட்ரிப் அடிச்சிட்டு இருந்தாங்க. ரிமோட் ஏரியா, கிராமங்கள், மலைபிரதேசங்களுக்கெல்லாம் பஸ் சர்வீஸ் இல்லை. எல்லா ஊர்களிலும் பஸ் வசதி வேணும்னு நினைச்ச அப்போதைய தமிழக அரசு, பஸ் மொதலாளிங்க கிட்டே பேசினாங்க. ஆனா அது சரிவரலை. யாருமே லாபமில்லாத ரூட்டுகளில் பஸ் இயக்க முன்வரலை. மக்களுக்கு எந்த உபயோகமும் இல்லாம இருக்கிறதை நினைச்ச அப்பொதைய முதல்வர் கலைஞர் அதிரடியா, பேருந்துகளை தேசியமயமாக்கும் சட்டத்தை கொண்டு வந்து அத்தனை பஸ்களையும் அரசுடமையாக்கினார். இதன் மூலம், அரசே எல்லா ஊர்களுக்கும் பஸ் இயக்க ஆரம்பிச்சது. அதுக்கு அப்புறம் பஸ் முதலாளிகளின் பல கோரிக்கைகளை கவனிச்சு, தனியார்களுக்கும் சில சில ரூட்களில் பஸ் இயக்க அனுமதி கொடுத்தாங்க. சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் னு 4 போக்குவரத்து கழகங்கள் திசைக்கொண்ணா ஆரம்பிச்சு, எல்லா கிராமங்களையும் இணைக்க ஆரம்பிச்சது. ஆள் இருக்காங்களோ இல்லையோ, டைமுக்கு அந்த ரூட்டில் வண்டி இயக்கியே ஆகணும்னு கலைஞர் போட்ட உத்தரவு இன்னை வரைக்கும் நடைமுறையில் இருந்துட்டு இருக்கு. ஆந்திராவில் பல ஊர்களுக்கு, போதிய ஆள் இல்லைனா டிரிப்பை கேன்சல் பண்ணிருவாங்க. அந்த மாதிரியான பிரச்சனை இந்த தமிழ்நாட்டில் இல்லை.

இந்த 4 போக்குவரத்து கழகங்களும் அதுக்கு அப்புறம் வளர்ந்து 21 போக்குவரத்து கழகங்கள் ஆச்சு. பல்லவனில் இருந்து பிரிச்சு வெளியூர் பேருந்துகள் மட்டும் இயக்கப்படும் திருவள்ளுவர் ஆரம்பிச்சாங்க. திருவள்ளுவரில் இருந்து வெளி மாநில பஸ்களை மட்டும் பிரிச்சு ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சாங்க! இப்படி பல் பல போக்குவரத்து கழகங்கள், பல்லவன், டாக்டர்.அம்பேத்கார், திருவள்ளுவர், ராஜீவ்காந்தி (முன்பு ஜெ.ஜெயலலிதா) டாக்டர்.புரட்சிதலைவர் எம்.ஜி.ஆர், பட்டுக்கோட்டை அழகிரி, அன்னை சத்தியா (இந்த பேர் மட்டும் தான் தேவையில்லாத பேர்), அண்ணா, ஜீவா, சேரன், பாரதியார், தந்தை பெரியார், தீரன் சின்னமலை, வீரன் சுந்தரலிங்கம், வீரன் அழகுமுத்துக்கோன், ராணி மங்கம்மாள், சோழன், மருது பாண்டியர், பாண்டியன், கட்டபொம்மன், நேசமணி ன்னு ஒவ்வொரு கோட்டமா பஸ்கள் இயக்கப்பட்டது.

அந்தந்த போக்குவரத்து கழகங்களுக்குன்னு தனித்தனியா பஸ் வடிவமைக்கும் கட்டும் தொழிற்கூடங்களும் அமைச்சாங்க. இதில் சேரன் போக்குவரத்து கழக கட்டுமான நிறுவனம் ரொம்ப புகழ் பெற்று, சிறந்த வடிவமைப்புக்காக பல பல விருதுகளை பெற்றது. சேரன் போக்குவரத்து கழக பஸ்கள் மட்டும் இல்லாம, போலீஸ், தீயணைப்பு துறை, மற்றும் டெல்லி, மும்பை போன்ற வெளிமாநில பேருந்துகள் கட்டுமான ஆர்டர்களும் சேரனுக்கு வந்து குவியத்தொடங்கினதால, அதை தனி நிறுவனமா, சேரன் பொறியியற் கழகம்னு பொள்ளாச்சியில் ஆரம்பிச்சாங்க.
ஜாதி பிரச்சனை உக்கிரமா இருந்த காலகட்டமான 90களின் இறுதியில், சுந்தரலிங்கம், அழகுமுத்துக்கோன் ஆகிய பேரில் எல்லாம் போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சதை எதிர்த்து ஒவ்வொரு குரூப்பும் ஒவ்வொரு பேரில் போக்குவரத்து கழகம் வேணும்னு போராடினாங்க. வேறே வழியில்லாம அப்போதைய முதல்வர் கலைஞர், எல்லா போக்குவரத்து கழக பேரையும் நீக்கி, தமிழக அரசு போக்குவரத்து கழகம், அரசு விரைவு போக்குவரத்து கழகம்னு பேரு மாத்தினாரு. அதே மாதிரி 21 கழகங்களா இருந்ததை நிர்வாக வசதிக்காக 7 கழகங்களா இணைச்சு அறிவிச்சாரு.. இதெல்லாம் தான் தமிழகத்தின் போக்குவரத்து கழக வரலாறு!

நான் அதிகமாக தமிழகத்தில் பயணிக்கிற ஆளு. எப்பவுமே விரைவு போக்குவரத்து கழகம் தான். அவங்க நாகர்கோவிலில் கட்டுற பஸ் பாடி, ரொம்ப ஹெவி டூட்டி, பாதுகாப்பானது. ஆனா 1991-96ல் வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, புதுசா ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம் ஆரம்பிச்சபோது, பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் கொடுத்து வடிவமைக்க ஆரம்பிச்சாங்க. அழகா இருந்தது. நவீன வசதிகள் இருந்தது. ஆனா பஸ் வீக்! ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு விபத்தில் சட்டுன்னு தீ பிடிச்சு அரை மணிநேரத்துக்குள்ளே முழுசா எரிஞ்சு முடிஞ்சிருச்சு.

நான் நாகர்கோவில் போகும்போதெல்லாம் மெனக்கெட்டு காத்திருந்து திருவள்ளுவர் போக்குவரத்து கழகம் இயக்கிய நாஞ்சில் எக்ஸ்பிரஸ் பஸ்ஸுக்கு தான் போவேன். செம ஸ்பீடு. 14 மணிநேரத்தில் சென்னை-நாகர்கோவில்ங்கறது அப்ப எல்லாம் நம்ப முடியாத வேகம். அந்த பஸ்ஸில் வயர்லெஸ் இருக்கும். சென்னை-நாகர்கோவில் தே.நெ45 முழுக்க பயணிக்கிறதால அந்த வழியா வர்ற போற பஸ்களில் ஏதாவது பிரச்சனை இருந்தா இவங்க அந்தந்த ஏரியா ஆபீசுக்கு தகவல் கொடுத்துட்டே போவாங்க.

திருவள்ளுவர் பஸ்சில் ஒவ்வொரு ஊருக்கு போற பஸ்சுக்கும் அழகழககன பேருகள் இருந்தது. கோவைக்கு அபபோ 3 பஸ் தான் (காட்டன் சிட்டி, வெண்ணிலா, வண்ணத்துப்பூச்சி). நான் வெண்ணிலா தான் வேணும்னு அடம்பிடிச்சு பயணிச்ச காலங்கள் இருக்கு. அவ்வளவு சூப்பர் பஸ்.
அதே மாதிரி கோவை ஈரோடு மார்க்கத்தில் வித்தியாசமான 2 பஸ்கள் இருந்தது. ஜீவா ஜெட், ஜீவா புல்லட். அதோட வடிவமைப்பு தான் விஷயமே. ஏரோபிளேன் மாதிரியே வடிவமைச்சிருப்பாங்க. முன்னாடி நீண்ட மூக்கு, சைடு கண்ணாடிகள் ரவுண்டு ஷேப், பஸ் பாடியே லேசா உருளையா வடிவமைச்சிருப்பாங்க. வெள்ளை நிறம். விமானத்தில் இருக்கிற மாதிரி சீட்டுகள், சைடு ஸ்கிரீன்னு உள்ளே ஒரு அற்புதமான எக்ஸ்பீரியன்ஸ். அதில் பயணிக்கணும்னே காரணமே இல்லாம கோவை டூ ஈரோடு பயணிச்சேன். 2 ஜெட், 2 புல்லட். ஆக இந்தியாவிலேயே 4 பஸ் தான் இந்த மாதிரி இருந்தது.

அதே மாதிரி இப்போ நம்ம சென்னையில் அதிகமா தென்படுற இரட்டை பஸ்கள் நகர பேருந்தா இயங்கிட்டு இருக்கு. அப்படி பட்ட இரட்டை பஸ்களை முதல் முதலா நீண்ட தூர பயணத்துக்கு பயன்படுத்தினதும் ஜீவா போக்குவரத்து கழகம் தான். கோவை மதுரை ரூட்டில் ஓடிட்டு இருந்தது.
காலங்கள் மாற மாற பஸ்களில் ஏகப்பட்ட மாற்றங்கள். ஆடியோ/வீடியோ வசதி, டீ/காபி குளிர்பான வசதி (ராஜீவ் காந்தி போக்குவரத்து க்ழக பேருந்துகளில் மட்டும்), சாய்வு இருக்கை வசதி. ஏர் சஷ்பென்ஷன் எனப்படும் மிதவை பேருந்து, குளிர்சாதன பேருந்துகள்னு சொகுசு வசதிகள் வந்திச்சு.

தமிழக அரசு பேருந்துகளில் வோல்வோ சொகுசு பேருந்துகளையும், ஸ்லீப்பர் பேருந்துகளையும் அனுமதிக்கிறதில்லை. வோல்வோவில் இருந்து நகர பேருந்துகள் மட்டும் தான். வோல்வோ பேருந்துகளை தனியார் இயக்குறாங்க, ஆனால் அது எதையும் தமிழகத்தில் பதிவு செய்ய முடியாது. நாம் வோல்வோ பேருந்துகளை இன்னும் அங்கீகரிக்கலை. அதனால் அவங்க பக்கத்து மாநிலத்தில் தான் பதிவு செஞ்சு இங்கே இயக்குறாங்க.

தமிழகத்தில் ஆல்மோஸ்ட் எல்லா ரூட்டிலும் பஸ் பயணம் பண்ணி இருந்தாலும் மறக்கமுடியாத ரூட்டு, சென்னை நாகர்கோவில் தான். கிட்டத்தட்ட தமிழகத்தையே குறுக்குவெட்டா பயணிக்கலாம். விதம் விதமான மக்கள், கலாச்சாரம், பேச்சு வழக்கு.. ரொம்ப அருமையா இருக்கும் ஒவ்வொரு ட்ரிப்பும்.

இப்போ வேகக்கட்டுப்பாடு கருவி அமைச்சு 60 கி.மீக்கு மேல் ஸ்பீடு போகக்கூடாதுன்னு கண்டிரோல் பண்ணி இருக்காங்க. முன்னெல்லாம் அப்படி இல்லை. சென்னை திருச்சி நான் அரசு பஸ்சில் 5 மணி நேரத்தில் (4 வழி பாதை எல்லாம் இல்லாத சாதாரண ரோட்டில்) போயிருக்கேன். அதில் விக்கிரவாண்டியில் 30 நிமிஷ உணவு இடைவேளை வேறே. நினைச்சு பாருங்க, எப்படி பறந்திருக்கும்னு!

தமிழ் நாட்டை பொறுத்தவரைக்கும், எல்லா ஊரில் இருந்தும் எல்லா ஊருக்கும் பஸ் வசதி இருக்கு. இந்தியாவில் நான் பல மாநிலங்கள் போயிருக்கேன். இந்த அளவுக்கு பஸ் கனெக்டிவிட்டி எங்கேயும் கிடையாது.
ஒரு முறை நான் விஜயவாடாவில் இருந்து அவசரமா ஹைதிராபாத் போக வேண்டி இருந்தது. சாயந்தரம் 6 மணிக்கு ஒரு பஸ் இருக்கு அதை விட்டா காலையில் தான். வேறே மாறி மாறி போகவும் வசதி இல்லை. காரணம் நீங்க நடு ராத்திரி வராங்கல் போனீங்கன்னா, அங்கே இருந்தும் காலையில் தான் பஸ்ஸுன்னுட்டாங்க.

ஆனா தமிழ்நாடு அப்படி இல்லை, ஒரு உறவினர் இறந்த செய்தி வந்தப்போ, நான் சென்னையில் இருந்து அவசரமா கோவைக்கு போக வேண்டி இருந்தது. செய்தி வந்தப்போ இரவு 10.30 மணி. கோவைக்கான நேரடி பஸ் எல்லாம் 9 மணியோட முடிஞ்சுது. டிரயினும் கிடையாது. காலையில் கிளம்புறது ரொம்ப லேட். ஆனா சென்னையில் இருந்து எந்நேரமும் சேலம் / திருச்சி பஸ் இருக்கு. அங்கே இருந்து கோவைக்கு 24 மணிநேரமும் பஸ் இருக்கு. இதே கதத தான் எந்த ஊருக்கு போகணும்னாலும். கனெக்டிவிட்டியில் தமிழகத்தை அடிச்சுக்கற அளவுக்கு வேறே எந்த மாநிலத்திலும் பஸ் சர்வீச் கிடையாது.
இன்னும் நிறைய நினைவுகள் இருக்கு.. அதை எல்லாம் இன்னொரு முறை பார்க்கலாம்.

இப்போதைய கதைக்கு வருவோம்.

அரசு இப்போ அறிவிச்சிருக்கிறபடி பார்த்தா.300 கி.மீக்கு மேல எந்த ரூட்டிலும் TNSTC வண்டியகளை இயக்கக்கூடாது. அது மாதிரி ரூட்டுகளை எல்லாம் SETC க்கு கொடுத்திரணும். அதே மாதிரி ஏசி பஸ், சொகுசி பஸ்களையும் விரைவு போக்குவரத்து கழகம் தான் இனிமேல் இயக்கும்.

இதுவரைக்கும், நீண்ட தூர பேருந்துகளை (250 கி.மீக்கு மேல்) விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் தான் இயக்கும்னு இருந்தாலும், அந்தந்த வட்டார போக்குவரத்து கழகம் சார்பா சென்னை மற்றும் முக்கிய ஊர்களுக்கு (பெங்களூர், திருச்சி, மதுரை) பேருந்துகளை இயக்கிக்கலாம்னு ஒரு விதிவிலக்கு இருந்தது. இந்த வசதிக்கு 250 கிமீ கட்டுப்பாடு பொருந்தாது. ஆனாலும், விழுப்புரம் கோட்டம் மட்டும் இதில் விளையாடிட்டே இருந்தது. சென்னை-மதுரை; சென்னை-கோவை ரூட்டுகளில் எல்லாம் அவங்க பஸ் ஓடிட்டு இருந்தது. விழுப்புரம் புவியியல் அடிப்படையில் சென்னை-பெரம்பலூர் அனுமதி, விழுப்புரம்-மதுரை அனுமதி ரெண்டையும் ஜாயிண்ட் பண்ணி அவங்க அப்படி சென்னை-மதுரை பஸ் இயக்கிட்டு இருந்தாங்க. மத்த போக்குவரத்து கழகம் எடுத்தீங்கன்னா, சேலம்-சிதம்பரம்; கோவை-நெல்லை; மதுரை-பெங்களூர்; நாகர்கோவில்-சேலம் மாதிரி விதிகளை மீறி இயக்கிட்டு தான் இருந்தாங்க.இனிமேல் அதெல்லாம் முடியாது.

இது ஒரு வகையில் ரொம்ப வசதியானதும் கூட. நீண்ட தூர பேருந்துகளை ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர்றதால ரிசர்வேஷன், ஏறும் இடம் போன்றவற்றில் இப்போ இருக்கிர குழப்பம் நீங்கும். இன்னும் சொல்லப்போனா, விரைவு போக்குவரத்து கழகத்துக்கு மட்டும் தான் இனி மேல் ரிசர்வேஷன். இது ஒரு பெரிய மாற்றம்.வரவேற்க வேண்டிய விஷயம் தான்.

ஒரு கோர்வையா சொல்லாம, மனசுக்கு தோணினதை எல்லாம் சொல்லிட்டே வர்றேன் இந்த தொடர்ல..இன்னும் இருக்கு நிறைய பகிர்ந்துகொள்ள. விரைவில் அடுத்த பாகம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக