மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.இது சதீஷ் சென்னை அவர்களது பதிவுங்க.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.
அந்த கவனம் வர்ற வரைக்கும், எல்லா கஷ்டத்துடனேயும் எல்லா இம்சைகளுடனேயும் எல்லோரும் ஹெல்மெட் போட்டுக்கோங்க.... பத்திரமா!
வணக்கம்.இது சதீஷ் சென்னை அவர்களது பதிவுங்க.சதீஷ் சென்னை அவர்களுக்கு நன்றிங்க.
நேற்று
சென்னையில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு மோட்டர் சைக்கிளில் அலுவல் பயணம்.
நாலுவழி பாதை என்னவோ வண்டி ஓட்டிட்டு போறதுக்கு நல்லா தான் இருக்கு.
எதிர்த்தாப்பலே வண்டி எதுவும் வரலை. அகலமான ரோடு. சும்மா சல்லுன்னு போகுது
வண்டி.
தண்டலம்
தாண்டி போயிட்டு இருக்கும்போது எதிர் சைடில் ஒரு சூப்பர் காரு பாஸ் ஆச்சு.
அது என்ன வண்டின்னு லைட்டா திரும்பினேன். அவ்வளவு தான். எதிர்காத்தில்
என் ஹெல்மெட்டோட வைசர் சட்டுன்னு மேலே தூக்கி, அதே வேகத்தில் ஹெல்மெட்
எழும்ப ஆரம்பிச்சிருச்சு. தாடையோடு சேர்த்து பெல்ட் போட்டிருந்ததால்
கழுத்தோடு மேலே தூக்கி, கண்ணை மறைச்சு, ரெண்டு செக்கண்டில் பேஜார்
ஆயிருச்சு. முகத்தை நேரா திருப்பி லெப்ட் ஹான்டால் ஹெல்மெட்டை
பிடிச்சிகிட்டதால் கழுத்து தப்பிச்சுச்சு.
தப்பு
என்னோடது தான்... ஸ்பீடை குறைக்காமலேயே தலையை திருப்பினது தப்பு தானே??
ஹெல்மெட்டு போட்டா தலையை அப்படி இப்படி திருப்பாம வண்டி ஓட்டனும்னு
எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குது.
அது
பரவாயில்லை... சென்னையில் இருக்கிற குண்டும் குழியும் மேடும் பள்ளமுமான
ரோட்டில் ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டும்போது வண்டி ஜெர்க்
அடிக்கும்போதெல்லாம் தலையை யாரோ தட்டிகிட்டே வர்ற மாதிரி ஒரு பீலிங்
வருமே... தலைவலி!! மனுஷங்களோட முக அமைப்பு பல விதமா இருந்தாலும், ஹெல்மெட்
என்னமோ நாலே நாலு சைசில் தான் கிடைக்குது. (S,M,L,XL). அதை போட்டுக்கிட்டு
டைட்டோ லூசோ அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டே ஒட்டி தொலைக்க வேண்டியது தான்.
இன்னொரு
அட்ஜஸ்ட்மேன்ட்டும் இருக்கு. பைபர் கிளாஸ்சில் வைசர் பண்ணி
வெச்சிருக்காங்களா... சீக்கிரமே டல் அடிச்சிருது.. அதனால் கண்ணையும்
அட்ஜஸ்ட் பண்ணிகிட்டே உத்து பாத்துகிட்டு தான் வண்டி ஓட்டனும் நாம.
சாயந்தரம் அஞ்சு மணி ஆயிடிச்சுன்னா ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டறதே கஷ்டம்.
எதிரில் வர்ற வண்டிகளோட ஹெட் லைட் வெளிச்சம் பைபர் கிளாசில் வித்தை
காட்டும்போது ரோடும் தெரியாது குண்டு குழியும் தெரியாது குறுக்கே பாயுற
நம்ம ஜனங்களும் தெரியாது. ரெம்ம்ம்மம்ப கஷ்ட்டம்ம்ம்ம்..
மழை
காலம் வந்தால் இன்னும் சூப்பர்.... மழை துளி எல்லாம் வைசரில் தேங்கி
நின்னு.. ஒண்ணுமே தெரியாது.... நம்ம கவனம் எல்லாம் வண்டி ஓட்டரத்தை
விட்டுட்டு விசரை தூக்கி பிடிச்சுக்கரதிலேயோ... அதை துடைச்சு விட்டுட்டே
இருக்கரதிலேயோ தான் இருக்கணும்.
இது
தவிர இலவச இணைப்பா.... வெயிட்டான ஹெல்மெட்டை தலையில் வெச்சு ஒழுங்கில்லாத
ரோட்டில் வண்டி ஒட்டுறதால் வர்ற கழுத்து வலி, முதுகு தண்டு வலி இன்ன பிற
வலிகள் இனாம். என்ஜாய்!
சரி... இப்படி இந்த ஹெல்மெட்டை போடணும்னு என்ன கட்டாயம்? ஆமாம் கட்டாயம் தான்.
சாலை
விபத்தில் நிறைய பேரு இறந்து போறாங்கன்னு ஒரு வருத்தமான ரிப்போர்ட்டு
ஒவ்வொரு வருஷமும் வளர்ந்துகிட்டே போகுது. அதை தடுக்கணும்னா என்ன
செய்யணும்??
என்ன
சொன்னீங்க.... ரோட்டை ஒழுங்கா போடறது, டிராபிக் ரூல்ஸை கட்டாயமா
அமல்ப்படுத்தறது... எல்லா ரோட்டிலும் முறையான சைன் போர்டுகள் வெக்கறது..
வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்பா கடைபிடிக்க வெக்கறது..... இப்படி எதையெல்லாம்
செஞ்சு விபத்தை குறைக்கணுமோ அதை எல்லாம் செய்யனும்னா சொல்றீங்க???
இல்லீங்க...நீங்க
எதையோ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க... ரோடு அப்படி தான் இருக்கும்..
அதில் ஆக்கிரமிப்பு இருக்கும், ரோட்டிலே எல்லோரும் குறுக்க நெடுக்க தான்
போவாங்க, ஸ்பீடு, ரேஷ் டிரைவிங் எல்லாம் இருக்கும், எந்த வண்டியும்
ரோட்டில் ஒழுங்கா போகாது..... போலீசோ, அரசாங்கமோ இதை எல்லாம் எதுவும்
செய்யாது...நீங்க தான் ஹெல்மெட் போட்டு உங்களை காப்பாத்திக்கணும்! இது
தான் சட்டம்.
ஆக்சுவல்லா..
இந்த விஷயம் கோர்ட்டு படி ஏறினபோது, கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு
ஸ்ட்ரைட்டா கோர்ட்டு உத்தரவு போட்டுச்சு. அதாவது விபத்துக்களை குறைக்கறது
பத்தி எதுவுமே யோசிக்காம, அதுக்கான ஏற்பாடுகளை செய்யாம, விபத்துக்களால்
ஏற்படுகிற மரணத்தை குறைக்கறதுக்காக ஹெல்மெட்டை போட்டே ஆகணும்னு உத்தரவு
போட்டுச்சு நீதிமன்றம். இப்படி கட்டாயப்படுத்த தேவையில்லைன்னு எவ்வளவோ
வாதாடி பாத்தும் கோர்ட்டு அதை கேக்கலை. தீர்ப்பு வேற நீதி வேறன்னு நமக்கு
தெரியாதா?? நீதிமன்றங்கள் வெறும் தீர்ப்பை தான் தருகின்றன.. நீதியை அல்லவே?
சரி, அப்போ நாமளும் 'சட்டப்படியே' பேசுவோம்!
16-09-2005
அன்னைக்கு மத்திய அரசு, மத்திய மோட்டர் வாக சட்டம், 1989 இல் விதி 138 இல்
ஒரு திருத்தம் கொண்டு வந்தது. அதன் படி, டூ வீலர் விக்கிற நிறுவனங்கள்
ஒவ்வொரு டூ வீலரோடும் ஒரு ஹெல்மெட்டை (ISI தர சான்று பெற்று, BIS
வகுத்திருக்கும் ஸ்பெசிபிகேஷன் படியான ஹெல்மெட்) இலவசமாக கொடுக்கணும். டூ
வீலரை பதிவு செய்யும் பொது, ஹெல்மெட்டை கொடுத்ததுக்கான ரசீது இருந்தால்
தான் வண்டியையே ரெஜிஸ்டர் செய்யணும்நு அந்த திருத்தம் சொல்லுது. ஹெல்மெட்
என்பது கட்டாய அக்ஸசரியாக கருதனும்னு அந்த சட்டம் சொல்லுது.
ஆனா
எந்த டூ வீலர் கம்பெனியும் அதை கொடுக்கலை. அப்படி எந்த நிறுவனமும்
கொடுக்கலைங்கரதுக்காக யாரும் கோர்ட்டு படி ஏறலை. நீதிமன்றமும் அரசும் அதை
பத்தி கவலையே படலை. பாதிக்கப்பட்ட வண்டி ஓட்டிகளுக்கு எந்த நியாயமும்
கிடைக்கலை. அதுக்காக வாதாட யாருமே இல்லை.
இது நடந்து ரெண்டு வருஷம் கழிச்சு தமிழ் நாடு அரசும் ஒரு உத்தரவை போட்டுது.
கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு. அது பல பல உத்தரவுகளை போல மற்றும் ஒரு
உத்தரவா கெசட்டில் தூங்கிட்டு தான் இருந்துச்சு. யாரும் ஹெல்மெட்டை போடலை.
இப்படியான
சூழலில் தான் கோர்ட்டுக்கு நம்ம டிராபிக் ராமசாமி போயி கட்டாய
ஹெல்மெட்டுகான உத்தரவை சந்தோஷமா வங்கி வந்தாரு. அவரை மக்கள் நல
விரும்பின்னு கொண்டாடிச்சு சென்னை! அதே நேரத்தில் மக்களை பாதிக்கிற, வாகன
ஓட்டிகளை பாதிக்கிற முறையற்ற போக்குவரத்தையும், மத்திய அரசு சட்டத்தை நாலு
வருஷமா மீறீட்டு இருக்கிற டூ வீலர் நிறுவனங்களையும், போக்குவரத்துக்கே
லாயக்கிலாத சாலைகளையும், அவர் கவனத்தில் எடுத்துக்கலை.. அதை மக்களும்
பெரிசா எடுத்துக்கலை!
இன்னைக்கு
எந்த ரோட்டிலே வேணும்னாலும் டூ வீலர் காரங்களை விரட்டி விரட்டி பிடிக்கிற
ஆக்டிவ்வான போலீஸ் நண்பர்களை நாம பார்க்கலாம்... அவங்க என்ன செய்வாங்க??
சட்டம் என்ன சொல்லுதோ அதை தானே அவங்க செய்யணும்? (எல்லா சட்டத்தையும்
அவங்க மதிக்கிராங்களான்னு எல்லாம் குதர்க்கமா கேள்வி கேட்க கூடாது)
சரி...
இப்படி கட்டாயமா ஹெல்மெட் போடணும்னு சட்டம் போட்டாச்சு... விபத்துக்கள்
குறைஞ்சுதா?? இல்லவே இல்லை! விபத்துக்களில் ஏற்படுற மரணங்கள் வேணும்னா
குறைஞ்சிருக்கு!
அரசோட
கவனம் விபத்தை குறைப்பதில் தான் இருந்திருக்கனுமே தவிர, விபத்து நடந்தால்
ஏற்படுற மரணத்தை குறைப்பதில் இல்லை. ஆனா அந்த கவனம் இன்னமும் வரவே இல்லை.
சாலைகளை அகலப்படுத்தறது, புதிய மேம்பாலங்களை கட்டுறது, சீரான
போக்குவரத்துக்கு வசதி பண்ணி கொடுக்கறது, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது,
போக்குவரத்து விதிகளை முறையா அமல்படுத்தறது, விதிமீறல்களுக்கு கண்டிப்பான
நடவடிக்கைகள் எடுக்கறது... எல்லாத்துக்கும் மேலே சீரான தரமான முறையான
ரோடுகளை போடறதுன்னு.. நிறைய விஷயங்களுக்கு அரசின் கவனம் வந்தாகணும்.
சென்னை ஒரு பேரு நகரம்னே சொல்லிக்க முடியாத அளவுக்கு இங்கத்த சாலைகள்
இருக்குன்றதை அரசு உணர்ந்து அதை போக்க கவனம் செலுத்தணும்.