திங்கள், 21 ஏப்ரல், 2014

ஓட்டுனர்களுக்கு தேவையான ஓய்வு வேண்டும்.

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                  புள்ளிவிவரங்களில் மறையும் சோகங்கள்-
                                தின மணி நாளிதழ் பதிவு (14-04-2014)
First Published : 14 April 2014 02:59 AM IST

                         கடந்த 10 வருடங்களாக தமிழ்நாட்டில்தான் இந்தியாவிலேயே அதிகமான வாகன விபத்துகள் ஏற்பட்டுள்ளன என்றும் கடந்த வருடம் மட்டிலும் 16,175 பேர் விபத்தில் இறந்துள்ளார்கள், அதாவது, ஒரு நாளில் 44 பேர் விபத்தில் இறக்கிறார்கள் என்றும் செய்தி படித்தேன். 
          
                     இந்தப் புள்ளிவிவரம் வயிற்றைக் கலக்குகிறது.
அது வெறும் எண்ணிக்கை அல்ல. ஒவ்வொரு விபத்தும் ஒரு குடும்பத்தை நிலை குலைய வைத்திருக்கும். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சிவராஜ் பாட்டீல், "ஒவ்வொரு வழக்குக்கட்டிலும் ஒரு வாழ்க்கை கட்டப்பட்டுள்ளது என்று நினைவு வைத்துக்கொண்டால் தவறு நடக்காது' என்று கூறுவார். இது விபத்துகளுக்கும் பொருந்தும்.

                        வாகன விபத்து, ரயில் விபத்து, சாதிக்கலவரங்கள், குறிப்பிட்ட சமூகத்தினர் மேல் வன்முறை, தீவிரவாதத்தினால் நடக்கும் வன்முறை. அரசியல் தலைவருக்கு தன் விசுவாசத்தைகாட்ட வாகனங்களை எரித்தல், ஒரு கிராமம் முழுவதையும் வேரோடு பிய்த்து போடுதல் - இவ்வாறு எவ்வளவோ காரணங்கள். 

                  ஒரு மரணத்தின் காரணம் எதுவாயின் என்ன? போனது ஒரு மனித உயிர்; கலைந்தது ஒரு குடும்பக்கூடு. இது போன்ற சம்பவங்கள் நடைபெற்ற பின் உயிர் இழந்தவருடைய குடும்பங்களுக்கு காசோலைகள் வழங்கப்படும். இதுவும் ஒரு அர்த்தமில்லா சடங்காக நீர்த்துப்
போனது.

                  யாருடைய செய்கையால் அல்லது யாருடைய அலட்சியத்தால் மரணங்கள் சம்பவித்ததோ, அவர் இறந்து போனவர்களின் குடும்பத்தினரை சந்திக்கவேண்டும்; மன்னிப்புக் கோர வேண்டும். இறப்பவரும் நம் கூடப்பிறந்தவரே. அவர் வீட்டின் அழுகை ஓலம் நம் காதில் அறைய வேண்டும். அப்பொழுதுதான் இன்னொரு முறை உயிர்சேதமும் ஊழியாட்டமும் நடக்காது.

                     லட்சக்கணக்கில் விலை கொடுத்து ஒரு கார் வாங்கி அதை அலட்சியமாக ஓட்டியதால், நம் சுதந்திரத் திருநாட்டில் ஒரு கூரைகூட இல்லாமல் உறங்கும் இந்நாட்டு மன்னர்கள் மரிக்கிறார்கள். அவர்கள் வெறும் புள்ளிவிவரமா? 

    புள்ளிவிவரங்கள் வேண்டுமென்றால் அதிகப்படியான விபத்துகள் அரசு போக்குவரத்து பேருந்துகளில் தான் ஏற்படுகின்றன என்பதும் ஒரு விவரம்தான்.

            பாதசாரிகளுக்கு பாதையோரங்கள் மீட்கப்படவேண்டும் என்று பாடுபட்ட ஒரு இளம் பெண் சில வாரங்களுக்குமுன் பேருந்து மோதி பெங்களூரில் உயிர் நீத்தார். 40 வயதுகூட ஆகவில்லை. அவருடன் அவர் கனவுகளும் போயிற்று. அவரும் புள்ளிவிவரங்களில் ஒன்றானார். நமக்கு இது ஒரு செய்தி அவ்வளவே. அவருடைய குடும்பத்திற்கு ஆறாத துயரம்.

           நம் நாட்டில் உள்ளதற்குள் மலிவு மனித உயிர்தான். 
                            ஆகையால்தான் நமக்கு ஒரே வேகம், ஒரே அலட்சியம். சாலை விதி மீறல் நம் பிறப்புரிமையோ என்று தோன்றுகிறது.

                     வெளிநாட்டிற்கு சென்றால் நள்ளிரவில் கூட சிவப்பு விளக்கிற்கு மதிப்புத் தருகிறார்கள். பச்சை வந்தால்தான் வண்டி கிளம்பும். இங்கு நம் மூக்கு நுழைந்தால் போதும் வண்டியை நுழைக்கலாம். சிவப்பு மாறி பச்சை வரும் முன்னே பின்னாலிருக்கும் ஓட்டுனர்கள் ஒலியை கர்ணகடூரமாக எழுப்புவார்கள். 
            என்ன செய்யப் போகிறோம் ஐந்துநொடி முன்னே சென்று?

                     நியூயார்க் நகரவாசிகளுக்கு வேலை வெட்டி இல்லையா? ஆகையால்தான் அவர்கள் சாலை விதி காக்கிறார்களா? நியூயார்க் நகரம், லண்டன், சிங்கப்பூர், இன்னும் பூலோகத்தில் இருக்கும் எல்லா நாட்டிலும் ஓரளவுக்கு சாலை விதி ஒழுங்கு இருக்கிறது. நாம் மட்டும்தான் கடமையில் கண்ணாக இருக்கிறோம், ஆகவே பறக்கிறோம், இல்லை பறந்து விபத்தில் வீழ்கிறோம் அல்லது மற்றவரை வீழ்த்துகிறோம்.

                   பல வருடங்களுக்கு முன் வழக்காகிப் போன ஒரு விபத்து. 
                             ஒரு குடும்பம். அதை சேர்ந்த 10-15 பேர், அவர்கள் வீட்டு பிள்ளைக்கு பெண் பார்க்க ஒரு வேனில் செல்கிறார்கள். பேருந்து மோதி பலர் இறக்கிறார்கள். எட்டு வயதுப் பையன் மண்டையில் அடிபட்டு மூளை பாதிக்கப்பட்டு, என்றும் எட்டு வயது சிறுவனாக இருக்கிறான்.
யாருக்காக பெண் பார்க்க சென்றார்களோ அவர் இன்று வரை திருமணம் செய்துக்கொள்ளவில்லை. தன் அக்காவையும் அண்ணிகளையும நிராதரவாக ஆக்கக்கூடாது என்று. ஏனென்றால், விபத்தில் அக்கா புருஷனும் சகோதரர்களும் மாண்டார்கள். 
                  எந்தக் காப்பீட்டுக் கழகம் இந்தக் கொடுமைக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கும்? எந்த நீதிமன்றத்தால் இந்த இழப்பை எடை போடமுடியும்? இந்த விபத்தும் எண்ணிக்கையில் ஒன்றுதான்.


                        இன்னொரு விபத்து. 
                        நல்ல வேலையில் கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தவர் இன்று சக்கரவண்டியில் நடைப்பிணமாக தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று புரிந்துகொள்ள இயலாதவராகிவிட்டார். அந்த விபத்திற்கு எவ்வளவு நஷ்ட ஈடு வழங்கலாம்? எந்த ஓட்டுனரின் செயலால் இந்த கோரம் நிகழ்ந்ததோ அவர் அந்த குடும்பத்திற்கு காலம் முழுதும் உழைக்க வேண்டும் என்று சொல்லலாமா? அப்படி ஒரு திரைப்படம்கூட வந்தது என்று நினைக்கிறேன்.

                 ஒரு நொடியில் ஏற்படும் கவனக்குறைவினால், கட்டுப்பாடில்லாத வேகத்தினால், குடிபோதையில் ஓட்டுவதனால் விபத்துகள் நிகழ்கின்றன. இது அனைத்தும் தவிர்க்க கூடிய தவறுகள். இந்த தவறுகள் நேர்ந்ததால் எவ்வளவு பேருடைய வாழ்க்கை தடம் புரண்டு போகின்றது?

              ஒரு முறை ஒரு சாலை விபத்து பற்றிய கருத்தரங்கத்தில் ஒரு கருத்து முன்னே வைக்கப்பட்டது. 
                 போக்குவரத்து பேருந்துகளில் ஓட்டுனரின் முன்னே அவர் மனைவி குழந்தைகளின் புகைப்படத்தை வைக்கவேண்டும் என்று. அப்பொழுதாவது அவர் கவனத்துடன் ஓட்டுவார் என்ற நம்பிக்கை. 

       ஆனால் ஒன்று சொல்லவேண்டும். 
          
                 ஓட்டுனர்களுக்கு தேவையான ஓய்வு வேண்டும்.
ஒரு ஷிப்டுக்கும் இன்னொன்றுக்கும் இடையே போதிய இடைவெளி இருக்கவேண்டும். 
                 அவர்களுக்கு மன அழுத்தம் போன்ற நோய் உள்ளதா என்று கவனிக்கவேண்டும். 
             ஓட்டுனர்களும் மனிதர்கள்தான்; இயந்திரங்கள் அல்ல. அவர்களுடைய கைகளில் பல உயிர்கள் ஒப்படைக்கப்படுகின்றன. 
       இதை     அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

                    அதேபோல, நம் மாணவ மணிகள் பேருந்தின் கூரையின் மேல் கொண்டாட்டம் போடாமல் இருக்க வேண்டும். அவர்கள் பேருந்தின் பிடிகம்பியில் கொத்து திராட்சை மாதிரி தொங்காமல் இருக்க வேண்டும். அதற்கு அரசு பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும். 

        இருசக்கர வண்டிகளில் இருவர் போகலாம் அல்லது அதிகபட்சம் மூவர், அவ்வளவே. 
             அந்த வண்டியில் ஒரு குடும்பமே ஏறி பயணம் செய்யாமல் இருக்க
வேண்டும்.

               ஓட்டுனர் உரிமத்தை நன்கு பரீட்சித்தபின்தான் வழங்குதல் வேண்டும். முதலில் நாம் -
நம் உயிர் விலைமதிக்க முடியாத ஒன்று 
                     என்பதை புரிந்து நடக்க வேண்டும்.
நம் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. இப்படி தரக்குறைவான பொருள்களைக் கொண்டு மோசமான தளத்தை உருவாக்குபவர்களை என்ன செய்யலாம்?
சாலை விதிகளை இளமையில் கற்பித்தல் வேண்டும். சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிச்சயமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்; விரைவாகவும் வழங்கப்படவேண்டும்.
காவல் துறையின் கண்காணிப்பு சீராகவும் நேராகவும் இருக்க வேண்டும். விபத்து நடந்ததும் பொன்னான நேரத்தை இழக்காமல் மருத்துவ உதவி தர வேண்டும். விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவரின் குடும்பத்தினருக்கும் உளவியல் ரீதியாக அறிவுரை வழங்க ஒவ்வொரு மருத்துவ மனையிலும் ஒரு பிரத்யேக பிரிவு இருக்க வேண்டும்.

                      காப்பீட்டு கழகங்களும் அரசு போக்குவரத்துக் கழகங்களும் நட்ட ஈடு வழக்குகளை மனித நேயத்துடன் அணுகவேண்டும். வழக்குரைஞர்களும் இந்த ஒவ்வொரு வழக்கும் எரிகிற வீடு என்று நினைவில் வைக்க வேண்டும். இதில் ஆதாயம் தேடக்கூடாது. நீதிமன்றங்கள் இந்த வழக்குகளை விரைவாக ஆனால் கவனமாக ஆராய்ந்து தீர்ப்பை அளிக்கவேண்டும்.

                     விபத்தில் தந்தை இறந்தபோது இரண்டே வயதாக இருந்த சிறுமி கல்லூரி மாணவி ஆகும் வரை வழக்கு நிலுவையில் இருந்தால்? அந்த தேக்க நிலை மாற
வேண்டும்.
                         சாலையோரங்கள் அகலமாக ஆக்கிரமிப்பு இல்லாமல் பாதசாரிகள் நடக்க வசதியாக இருக்க வேண்டும்.
                                ஒவ்வொருவரும் வண்டியை ஓட்டும் பொழுது சாலைக்கு தானே ஏகாதிபத்திய அரசன் என்று எண்ணாமல் கவனமாக ஓட்டவேண்டும். 
            வள்ளலார் போல என் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது. என் கனவு மெய்ப்படுமா?

                             கால் போய், கண் போய், உயிர் போய், மகள் போய், தாய் போய், கணவன் போய் என்று எவ்வளவு இழப்புகள் இந்த விபத்து நட்ட ஈடு வழக்குகளில்? இழந்த அன்புக்கும் பாசத்துக்கும் அரவணைப்புக்கும் என்ன தொகை என்று கூட கணக்கு போடவேண்டும். இதை எப்படி அளவிடுவது?
இப்படித்தான் ஆழமான சோகங்கள் எண்களிலும் புள்ளிவிவரங்களிலும் காணாமல் போகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக