சனி, 19 ஏப்ரல், 2014

பஸ் பயணங்கள்!

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
 

பயணங்கள்! பஸ் பயணங்கள்!

மிழ்நாட்டில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு கலை .தமிழ் நாட்டில் வாகனம் ஓட்டி பழகியவர்கள் உலகில் எங்கும் வாகனம் ஓட்டலாம் என்று அடித்து சொல்லலாம்.

        அடேயப்பா! மக்கள் கூட்டம்,மக்குகள் கூட்டம் ,வாகன நெருக்கடி இப்படி இவை எல்லாவற்றையும் விலக்கி வண்டி ஓட்டும் லாவகம் இருக்கிறதே.அதுவும் பளபளக்கும் தனியார் பேருந்துகள், சினிமாப்பாடல்கள் பேரிரைச்சலோடு ஒலிக்க ஓடும் ஓட்டம் இருக்கிறதே அதை சொல்லில் எழுதமுடியாது.அதில் ஏறி தப்பித்தவறி முன் சீட்டில் இருந்துவிட்டீர்கள் ஆனால் கண்டிப்பாக கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு கூட கடவுள் நம்பிக்கை வந்துவிடும்.அந்தளவு வேகம்,வேகம், வேகம். அதுதான் அவர்களின் மந்திரம்.
            நான் சென்னைக்கு போவது என்றால் வழக்கமாக ஏர் பஸ்களில் தான் போவேன்.நான்இப்படி நீண்ட தூர பஸ்களில் போவது என்றால் ஓட்டுனருக்கு இடதுபுறமாக உள்ள சீட்களில் தான் இருப்பேன்.ஏனெனில் அந்த பக்கம் அபாயம் குறைவு என்று. அன்று ஒருநாள் திடீரென்று சென்னை போகும் நிலை டிக்கெட்  பதிவு செய்ய சென்றால் ஒரு இடமும் பதிவு செய்யமுடியவில்லை.வரும் நாட்களில் ஏதோ விசேஷம் என்றபடியால் அப்படி ஒரு நிலை .ஒரு இடத்தில் ஒரு இடம் கிடைத்தது .சரி அவசரத்துக்கு பரவாயில்லைஎன்று பதிவு செய்தேன் .இரவு பஸ் ஏறி எனது இருக்கையிலும் அமர்ந்துவிட்டேன்.
                .எதிரே வரும் வாகன வெளிச்சம்.அவற்றின் ஹாரன் ஒலி,ஒன்றை ஒன்று விலக்கும் போது ஏற்படும் சத்தம் இதனால் தூக்கமே வராது.அது ஏனோ தெரியவில்லை.எதிரே இன்னுமொரு வாகனத்தினை முந்திக் கொண்டு வந்து குறுகிய இடைவெளியில் பஸ்சினையும் முந்துகின்றனர்.சில வேளை பார்க்க பயங்கரமாக இருக்கும்.


         அடுத்து  வாகன ஹெட் லைட் வெளிச்சம்.
                 பெரும்பாலான வாகனங்கள் எதிரேவரும் வாகனங்களுக்காக தமது ஹெட் லைட்டினை "டிம்" பண்ணியே கொடுக்க மாட்டார்கள்.இப்படி ஒரு வாகனம் கடந்து போனால் அந்த வாகனம் கடந்து போன கொஞ்ச நேரத்துக்கு ஓட்டுநருக்கு ஒரே இருட்டாகதான் தெரியும்.எதிரே பாதசாரி யாராவது நடந்து வந்தால் நிலை என்ன? யோசிக்கவே பயங்கரமாக இருக்கும்.


                இதை விட சென்னை போகும் வழியில் சில கிராமங்களை கடக்கும் போது பார்த்தால் மெயின்ரோட்டின் மேலேயே நெற்கதிர்களை மற்றும் சில தோட்டத்தில், வயலில் விளையும் கதிர்களை போட்டிருப்பார்கள்.கைகளினால் பிரிக்கும் வேலையினை குறைப்பதற்காக.அதாவது சாலையில் போகும் வாகனங்கள் அதன் மேலாக போகும்போது நெல் மணிகள் ,வைக்கோல் ஒரு புறமாக பிரியும் என்பதற்காக.
            நாலு சக்கர வாகனங்கள் பரவாயில்லை.இரு சக்கரவாகனங்களில் நிலையினை யோசித்துப் பாருங்கள்.மிதமான வேகத்தில் வந்தால் கூட வண்டி சறுக்கும் அபாயம் உண்டு. சரி அதை விடுங்கள்.
             தனியார் சொகுசு வண்டிகளில் போனால் சொகுசும் கிடைக்கும் ஓரளவு பாதுகாப்பும் கிடைக்கும். எப்படி என்றால் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.விழுப்புரம் வரை ஒரு ஓட்டுனர் பஸ்சினை ஓட்டுவார்.அதன் பின்னர் மற்ற ஓட்டுனர் பஸ்சினை ஓட்ட முன்னையவர் உறங்குவார்.இது பஸ் முதலாளிகள் ஓட்டுனர்கள் மீது பாசத்தினால் செய்த ஏற்பாடு இல்லை. தமது பஸ்சின் மீது கொண்ட பற்றுதலினால் செய்த ஏற்பாடு. ஏனெனில் ஒரு சொகுசுவண்டியின் விலை 25 இலட்சம்(இந்திய) அளவில் வரும் என்று கேள்வி.

         இது இப்படி என்றால் அரசு பேருந்துகளின்  நிலை? பரிதாபத்திற்குரியது. அங்கு ஒரு ஓட்டுனரே ஏழு அல்லது எட்டு மணித்தியாலங்கள் தொடர்ந்து ஓட்டுவார்.அப்படியா?அவருக்கு ஓய்வு எப்போது? என்று  அப்பாவி மாதிரி கேட்க கூடாது.பயணிகள் சாப்பிடுவதற்கும் டீ குடிப்பதற்கும் பஸ் நிறுத்தப்படும் நேரங்களில் பஸ் ஓட்டுனர் அப்படியே "ஸ்டேரிங்கில்"படுத்து ஒரு குட்டித் தூக்கம் போடுவார்.சிலவேளைகளில் விபத்துக்கள் காரணமாகவும் போக்குவரத்து நெருக்கடி காரணமாகவும் பஸ் நிறுத்தப்படும் குறுகிய நேரத்தில் கூட ஓட்டுனர் சிறு தூக்கம் போட்டு எழுந்திருப்பதை காணும் போது ஓட்டுனர்கள் மீது பரிதாபப்படுவதுடன் அடி வயிற்றில் கிலியும் வந்திருக்கிறது.அப்படியான ஓட்டுனர்கள் ஓடும் பஸ்சில் நானும் பயணிக்கும் சந்தர்ப்பத்தில்.

          இருந்தாலும் தமிழ்நாட்டு பஸ்களின் மேல எனக்கு அலாதி பிரியம் உண்டு ஏனெனில் பஸ்சின் பெயர் முதல் கொண்டுபஸ்சின் நிறம், பஸ்சினுள் மற்றும் பின் கண்ணாடியில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் இப்படி பல.

"பறக்கும் மோகினி","மின்னல் பாவை","பறக்கும் மின்னல்"இவை எல்லாம் என்ன என்கிறீர்களா?சில பஸ்சின் பெயர்கள்தான்.பல வித நிறங்களில் பல்வேறு வடிவங்களில் பார்க்க அழகாக இருப்பதுடன் டி.வி.டி. மற்றும் சி.டி வசதிகளுடன் சில பஸ்களில் கேமரா கூட படிக்கட்டுகளில் இறங்குபவரை பார்க்க பொருத்தப்பட்டிருப்பதையும் கண்டிருக்கிறேன்.இவை எல்லாம் தனியார் பேருந்துகள் தான்.

            அரசு பேருந்துகள் பற்றி நான் சொல்ல போவதில்லை.நெடுந்தூர விரைவு பேருந்துகளை தவிர மற்றவை எப்படி இருக்கும் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை.இருந்தாலும் அண்மையகாலங்களில் அரசு பேருந்துகளும் சிறப்பாக வடிவமைத்து சேவையில் ஈடுபடுத்தி இருக்கின்றனர்.
             நீங்கள் வாகனம் ஒன்றை ஓட்டிக் கொண்டு செல்கிறீர்கள் எண்டு வச்சுக் கொள்ளுங்கோ.முன்னே ஒரு வாகனம்போய்க்கொண்டிருக்கிறது..முன்னே செல்லும் அந்த வாகனத்தினை முந்த ஹாரன் அடிக்கின்றீர்கள் அல்லது விளக்குகளால் சைகை செய்கின்றீர்கள். உடனே முன்னே செல்லும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரியவிடுகின்றது.நீங்கள் அந்த வாகனத்தினை முந்திக் கொண்டு போகின்றீர்கள். அதாவது முன்னே போகும் வாகனம் தனது வலது பக்க சிக்னலை எரிய விடுவது நீங்கள் அவரை முந்திக் கொண்டு போக அவர் அனுமதி தருகிறார் என்று கருதப்படுகிறது. இந்த வழக்கம் தமிழ்நாட்டில் இருந்து வருகிறது பலரால் பின்பற்றப்படுகிறது.


நான் தமிழ்நாட்டுக்கு போன புதிதில் ஒரு நீண்ட தூரப்பயணத்தின் போதே இதை அவதானித்தேன். நாங்கள்சென்று கொண்டிருந்த சுமோ வண்டியின் ஓட்டுனர் முன்னே சென்று கொண்டிருந்த ஒரு வாகனத்தினை முந்த ஹாரன் கொடுத்து சிறிது நேரத்தின் பின்னர் அந்த வாகனத்தின் வலது பக்க சிக்னல் விட்டுவிட்டு எரிந்தது.
உடனேஎமது வண்டி ஓட்டுனர் அந்த வாகனத்தினை முந்த முயற்சித்த போது அவரின் அருகினில் இருந்த நான்அவரை தடுத்தேன்.அவர் வலது பக்க சிக்னல் போட்டிருக்கிறார்.நீங்கள் அவரை முந்த முயற்சிக்காதீர்கள் என்று சொன்னபோது எமது சுமோ ஓட்டுனர் சொன்னார். நாம் அவரை முந்த அனுமதி தருமுகமாகத்தான் அவர் வலது பக்க சிக்கனல் விளக்கினை ஒளிரவிட்டுள்ளார் என்று சொல்லிய படியே அந்த வாகனத்தினை முந்திச்சென்றார். ஓட்டுனரிடம் இது என்னப்பா புது முறையாக இருக்கே என்று கேட்டதுக்கு அவர் புன்சிரிப்பையே எனக்குபதிலாக தந்தார்.மேலும் துருவி கேட்டதுக்கு சொன்னார்.சரியோ பிழையோ இங்கு இதுதான் நடைமுறை என்று.


இது ஒரு பிழையான நடைமுறை என்று நான் நினைக்கிறேன். உண்மையான நடைமுறை இடது பக்க சிக்னல் விளக்கை எரிய விடுவதுதான்அதாவது நான் இடது பக்கம் ஒதுங்கி வழிவிடுகிறேன் அல்லது இடது பக்கம் திரும்புகிறேன்.நீ வலது பக்கத்தால்முந்தி செல்லலாம். இதுதான்உண்மையான நடைமுறையாக இருக்கமுடியும்.

எப்படி ஒரு பிழையான நடைமுறை பழக்கத்தில் அல்லது புழக்கத்தில் வந்தது?
தமிழ்நாட்டில் மட்டும் இப்படியா?அல்லது இந்தியாமுழுவதும் இப்படியா என்பது எனக்கு தெரியவில்லை?தமிழ்நாட்டில் தான் இப்படி என்றால் மற்ற மாநிலவாசிகள் தமிழ்நாட்டில் எப்படி வண்டி ஓட்டுவர்? யார் இதை ஆரம்பித்து வைத்த புண்ணியவான்?எப்படி அல்லது எவ்வாறு இது பழக்கத்துக்கு வந்தது?

சில வருடங்களுக்குமுன்னர் தமிழ்நாட்டில் நேரில் பார்த்தை இங்கு நான் சொன்னேன்.இப்போதும் அப்படிதான் இருக்கும் என நினைக்கிறேன்.இதில் வேறு ஏதும் காரணங்கள் உண்டா? தெரிந்தவர்கள் தெரிவிக்கலாமே.

என்னஇருந்தாலும் நீண்டதூர பஸ் பயணம் என்பதுஒரு இனிமையான அனுபவம். குழந்தைகளுக்கு ஏன் பெரியவர்களுக்கும் கூட .அதில்ஜன்னல் ஓர இருக்கை கிடைத்து விட்டால் சொல்லவேண்டியதில்லை.பெரியவர்கள் கூட குழந்தைகள் ஆகிவிடுகின்றனர்.பிடித்த பாடலை முணுமுணுத்தபடி முகத்தில் எதிர் காற்று அடிக்கசெல்லும் சுகம் இருக்கிறதே அப்பப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக