மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
வைப்பர் கண்டுபிடித்த பெண்மணி | |||
|
கார் என்ற வாகனத்தில் செல்லாதவர்களை
விரல்விட்டு எண்ணக்கூடிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காரில்
செல்லும்போது திடீரென மழை வந்துவிட்டால் முன் உள்ள கண்ணாடியில் பட்ட
மழைத்துளிகளை அங்கும் இங்கும் அசைந்து துடைக்கும் வின்ட்ஷீல்டு வைப்பரைப்
(Windshield Wiper) பார்த்திருப்போம்.
வின்ட்ஷீல்டு வைப்பரைக் கண்டுபிடித்தவர்
மேரி ஆண்டர்சன் (Mary Anderson)என்ற பெண் ஆவார். 1866ஆம் ஆண்டு
அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த மேரி சிறு வயதிலேயே தாய் மற்றும்
சகோதரிகளுடன் பிர்மிங்ஹாம் என்ற நகரத்திற்குச் சென்றுள்ளார். கட்டுமானத்
துறையின்மீது இருந்த ஆர்வத்தால் கட்டுமானப் பொறியாளர் ஆனார்.
தனது நண்பரைச் சந்திக்க நியூயார்க்
சென்றபோது அங்கிருந்த டிராலி வண்டியில் பயணம் செய்தார். அப்போது
பனிப்பொழிவு அதிகம் இருக்கவே முன்பக்கக் கண்ணாடியைத் திறந்து வைத்தபடியே
கார் ஓட்டி வந்துள்ளார் ஓட்டுநர். இது குறித்து ஓட்டுநரிடம் கேட்டபோது,
கண்ணாடியில் பனி பொழியும்போது அதனைச் சுத்தம் செய்வது கடினம் என்று
ஓட்டுநர் கூறியுள்ளார்.
அலபாமா நகரத்திற்கு வந்தபிறகும், பனியைத்
துடைக்கும் கருவி வடிவமைக்க வேண்டும் என்ற எண்ணமே அவரது மனதில் மேலோங்கி
நின்றது. நீளமான கட்டையை எடுத்து, அதன் அடிப்பகுதியில் கடினமான ரப்பர்
ஒன்றை இணைத்து, அந்தக் கட்டையினைக் கையினால் இயங்கும் முறையில் அமைத்தார்.
கார் அல்லது டிராலி ஓட்டுநர்கள் தங்களின்
கையினால் அசைக்கக்கூடிய வகையில் வாகனத்திற்குள் பொருத்தினார். பின்னர்,
தமது நண்பர்களின் கார்களில் பொருத்திப் பார்த்து அது நன்கு வேலை செய்வதைப்
பார்த்து மகிழ்ந்தார். கண்ணாடித் துடைப்பானுக்குக் காப்புரிமை கோரினார். 17
ஆண்டுகளுக்குக் காப்புரிமை கிடைத்தது.
கனடா நாட்டைச் சேர்ந்த தனியார்
நிறுவனத்திடம் தனது கண்டுபிடிப்பைக் காட்டியபோது நிராகரிக்கப்பட்டது.
காரணம் கேட்டபோது, கண்ணாடித் துடைப்பானுக்கு வியாபாரரீதியாக எந்தப் பலனும்
இல்லை என்று நிறுவனம் பதில் கொடுத்தது.
1920ஆம் ஆண்டு காப்புரிமை முடிவடைந்த
நிலையில் கார்களின் விற்பனை அதிகமாகத் தொடங்கியது. 1922ஆம் ஆண்டு காடிலாக்
கார் உற்பத்தி நிறுவனம் கண்ணாடித் துடைப்பானை காரின் முக்கியமான அங்கமாக
நினைத்தது. பின்னர், அனைத்து உற்பத்தியாளர்களாலும் வடிவமைக்கப்பட்டது.
இன்று எத்தனையோ விதவிதமான துடைப்பான்கள் வந்துள்ளபோதிலும் இதற்கெல்லாம் மேரி ஆண்டெர்சன் முயற்சியும் வெற்றியுமே அடிப்படையாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக