சனி, 19 ஏப்ரல், 2014

பஸ் டே என்றால் என்ன?

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

              சென்னைக் கல்லூரி மாணவர்களின் “பஸ் டே” பிரச்சனை பெரிய சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. கொண்டாட்டத்திற்க்காக செய்து கொண்டு இருந்த விஷயம் தற்போது மக்களிடையே கடும் எதிர்ப்பையும் எரிச்சலையும் பெற்று இருக்கிறது.

   பஸ் டே என்றால் என்ன?
               பதிவிட்ட ”கிரிபிளாக் -கோபி செட்டிபாளையம்“ அவர்களுக்கு நன்றி...
grey பஸ் டே என்ற .....
                        பஸ்ஸில் தினமும் பயணிக்கும் தாங்கள்  செல்லும் பேருந்து அதில் உள்ள ஓட்டுனர் நடத்துனர் ஆகியோருக்கு மரியாதை செய்யும் பொருட்டு பேருந்தை அலங்காரம் செய்து அதில் தினம் பயணிக்கும் மற்ற பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி அனைவருடனும் சேர்ந்து இதை ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சியாக அனைவரின் மனதிலும் நிற்கும் ஒரு சந்தோசமான நிகழ்வாக நிறுத்துவதே பஸ் டே என்பதன் நோக்கம். இதன் மூலம் அந்த பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பயணிகள் இடையே ஒரு சுமூகமான நிலை தொடர உதவுகிறது.
ஆனால் தற்போது நடப்பது என்ன? மாணவர்கள் தங்கள் பலத்தை! மற்றவர்களுக்கு காட்டுவதாக நினைத்து இந்த அருமையான பஸ் டே என்ற ஒரு விசயத்தையே அனைவரும் வெறுக்கும் ஒரு நிகழ்வாக்கி விட்டார்கள். போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்வதை தாங்கள் செய்யும் ஒரு பெரிய சாதனையாகவும் மச்சான்! எல்லோரையும் மிரட்டிட்டோம்ல .. ங்கொய்யாலே! அவனவன் அரண்டு போய்ட்டான் என்று கூறிக்கொண்டு தாங்கள் என்ன தவறு செய்துகொண்டு இருக்கிறோம் என்பதை தெரிந்தும் இளமை தரும் வேகத்தால் இதை பெருமையான நிகழ்வாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
நான் சென்னையில் பணி புரிந்த போது தினமும் என்னுடைய அலுவலகத்திற்கு காலையில் 45B பேருந்தில் தான் செல்வேன். எனக்கு தெரிந்து சென்னையில் அதிகக் கல்லூரிகளை கடந்து வரும் பேருந்து இதுவாகத்தான் இருக்கும். பேருந்தில் அலுவலகம் செல்வதற்குள் ஒரு சில மாணவர்கள் செய்வதைப்பார்க்கும் போது நமக்கு பொறுமை இழந்து விடும். கானாப்பாடல் என்ற பெயரில் பேருந்தை உடைக்காத குறையாக தட்டிக்கொண்டு இருப்பார்கள். ஜன்னல் பக்கம் அமர்ந்து இருக்கும் பெண்களை ஏதாவது கிண்டல் செய்து கொண்டே இருப்பார்கள். இதைவிடக்கொடுமை அதில் தினமும் வரும் ஒரு பெண்ணிற்கு பட்டப்பெயர் வைத்து விடுவார்கள்.
அதை வைத்து தினமும் ஏதாவது கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். அதைப்பார்க்கும் நமக்கு கொலைவெறி ஆகி விடும். நாம் என்ன திரைப்படத்தில் வரும் கதாநாயகனா! உடனே குரல் கொடுக்க… ஏதாவது பேசினால் நம்முடைய மூஞ்சி முகரை எல்லாம் பேத்து விடுவார்கள் இல்லை கிண்டல் செய்து கொண்டு இருப்பார்கள். காரணம் கூட்டமாக இருக்கிறோம் என்ற தைரியம் தான். இதே தனியாக இருப்பவர் என்றால் எந்த வித சேட்டையும் செய்யாமல் அமைதியாக இருப்பார்கள்.

 அப்ப கலாட்டா எதுவுமே இல்லாமல் மாணவர்கள் அமைதியாகவே இருக்க வேண்டுமா?

              சரியான கேள்வி தான். கல்லூரி மாணவர்கள் என்றால் கொஞ்சம் கலாட்டா குறும்பு காதல் இவை எல்லாம் இருந்தால் தான் அது இயல்பாக இருக்கும். இவை எல்லாம் இல்லாமல் மாணவர்கள் என்றால் படிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நபராக நான் இல்லை. படிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்றால் நடைமுறையில் சாத்தியம் இல்லாத ஒன்று அதுவும் இந்தக்காலத்தில் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று கற்பனையில் வேண்டும் என்றால் நினைக்கலாம். அதுவே முடியுமா என்று சந்தேகமாக உள்ளது.
மாணவர்கள் தங்கள் கொண்டாட்டங்களை அளவோடு நிறுத்திக்கொண்டால் எவருக்கும் பிரச்சனை இல்லை பொதுமக்களும் ஒரு ஜாலியான நிகழ்வாக எடுத்துக்கொண்டு சென்று விடுவார்கள். அளவு மீறும் போது அநாகரீகமாக நடந்து கொள்ளும் போது தான் தங்கள் பொறுமையை இழக்கிறார்கள். சில பெண்கள் இவர்கள் செய்வதை ரசிப்பதால், அனுமதிப்பதால் அவர்களுக்கு இன்னும் அதிகமாகச் செய்யத் தூண்டுகிறது. இதை நான் நேரிலேயே பார்த்து இருக்கிறேன். சில விசயங்களை நாகரீகம் கருதி கூறாமல் விடுகிறேன். சில பெண்கள் இதைப்போல செய்வதால் பாதிக்கப்படுவது இதில் சம்பந்தப்படாத அப்பாவிப் பெண்கள் தான்.

பஸ் டே அன்று போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து விடுகிறார்கள். வழியில் செல்லுபவர்களை ஆபாசமான சைகைகளால் கிண்டலடிக்கிறார்கள், வழியில் உள்ளவற்றை சேதப்படுத்துகிறார்கள். இதன் பெயரா கொண்டாட்டம்? கொண்டாட்டம் என்பது தானும் மகிழ்ந்து தன்னை சார்ந்து உள்ளவர்களையும் மகிழ்விப்பது. இவர்கள் செய்வது என்ன?
அரசுக்கு மாணவர்களை பகைத்துக்கொள்வதில் பயம் அதனாலே அரசு மற்றும் அரசியல்வாதிகள் மாணவர்களின் இந்த பஸ் டே என்ற பொறுக்கித் தனத்திற்கு ஆதரவு தருகிறார்கள். இதை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வாயை மூடிக்கொண்டு இருக்கிறார்கள். நீதிமன்றம் வந்து கேள்வி கேட்கும் அளவிற்கு தங்கள் நிலையை வைத்து இருக்கிறார்கள். இது அனைத்தும் அரசியல்வாதிகள் அவர்கள் நன்மைக்காக செய்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் படிப்பில் கோட்டை விட்டு வேலை எதுவும் கிடைக்காமல் இந்த போட்டி மிகுந்த உலகத்தில் விழி பிதுங்கி கொண்டு இருக்கும் போது நினைப்பீர்கள் அடடா! நாம் தவறு செய்து விட்டோமோ! என்று. ஆனால் அது காலம் கடந்த செயலாக இருக்கும்.
             இதைப்போல அனைத்து மாணவர்களும் நடப்பதில்லை தங்களின் குடும்ப நிலை தன் எதிர்காலம் கருதி இதைப்போல விசயங்களில் கலந்து கொள்ளாமல் படிப்பில் கவனமாக இருப்பவர்கள் பலர் உண்டு. போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து கூட்டமாக சேர்ந்து அப்பாவியை மிரட்டி ஹீரோவாக காட்டிக்கொள்வது நீங்கள் என்ன! இதைக் கூட்டமாக செய்தால் எவரும் செய்ய முடியும். தலைநகரம் படத்தில் வடிவேல்… தான் ரவுடி என்பதைக் காட்ட அப்பாவியைப் போட்டு அடிப்பாரே! அது மாதிரி இருக்கிறது நீங்கள் செய்வது. ஹே! பார்த்துக்குங்க கூட்டத்துல கோவிந்தா போடுற நானும் ரவுடிதான்னு சொல்ற மாதிரி இருக்கு.
இதனால் பாதிக்கப்படுபவர்கள் எத்தனை பேர்? அவசரமாக மருத்துவமனை செல்பவர்கள், விமானத்தை ரயிலை பிடிக்கச் செல்பவர்கள், நேர்முகத்தேர்வு செல்பவர்கள், முக்கியமான அலுவலக வேலையாக செல்பவர்கள் எத்தனை பேரின் வாழ்க்கையில் இதைப்போல போக்குவரத்து இடையூறு செய்து விளையாடுகிறார்கள். இவர்களுக்கு இதன் பின் உள்ள வலி என்ன புரியப்போகிறது? இதில் பாதிக்கப்படுபவர்கள் இவர்களுடைய அம்மாவோ, அப்பாவோ, அண்ணனோ அல்லது தங்கையாகவோ கூட இருக்கலாம். சாலையில் செல்பவர்களின் மண்டையை வேறு உடைத்து இருக்கிறார்கள்.
               இதை எல்லாம் தெரியாமல் செய்கிறார்கள் என்று மட்டும் யாரும் வக்காலத்து வாங்கி விடாதீர்கள். அனைத்தும் நன்கு தெரிந்தும் இதைப்போல செய்கிறார்கள். சரக்கடித்து இருக்கும் போது தன் அக்கா தங்கையிடம் தவறாக நடக்க முயற்சி செய்கிறார்களா என்ன? சரக்கடிச்சு இருந்தாலும் தான் இதை செய்யக்கூடாது என்ற அறிவு வேலை செய்கிறது அல்லவா! அப்புறம் என்ன மற்றவர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வது?
              உங்களுக்கு இப்போது இதன் வலி புரியாது.. நீங்களும் பின்னாளில் குடும்பத்துடன் அக்கா, தங்கை அல்லது மனைவியுடனோ செல்லும் போது எவனாவது ஒரு பொறுக்கி கம்முனாட்டி நீங்கள் செய்ததைபோல கீழ்த்தரமாக நடத்து கொள்ளும் போது உங்களுக்கு வலிக்கும் பாருங்கள்…. அப்போது புரியும் உங்களின் கொண்டாட்டத்தின் அளவு எந்த அளவில் இருந்தது என்று. உங்களின் குடும்பத்தினருக்கு இதைப்போல ஒரு நிலை வராமல் இருக்க இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
                என்னுடைய facebook fan page ல் பல கல்லூரி மாணவர்கள் இணைந்து உள்ளார்கள் அவர்களுக்கும் என் அன்பான வேண்டுகோள்! கொண்டாட்டங்களில் ஈடுபடுங்கள் நிச்சயம் தவறில்லை இந்த வயதில் ஜாலியாக இருக்காமல் வயதான பிறகு கொண்டாட முடியும் இளமைக்கால சந்தோசங்களை என்றும் திரும்பப் பெற முடியாது. உங்கள் கொண்டாட்டம் மற்றவர்களை பொதுமக்களை பாதிக்காமல் இருப்பதில் கவனமாக இருங்கள். இப்படி எல்லாம் கூறுவதால் எந்தப்பயனுமில்லை என்று நன்றாகத்தெரியும் இருப்பினும் சொல்லத்தோன்றியது அவ்வளவே! மற்றவர்கள் கூறி யாரும் தன்னை மாற்றிக்கொள்ளப்போவதில்லை தானாக மாறினால் தான் உண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக