திங்கள், 21 ஏப்ரல், 2014

கையிருப்பு அவசியம்

மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
                                கையிருப்பு அவசியம்-தின மணி நாளிதழ் பதிப்பு......
First Published : 14 April 2014 02:59 AM IST
                         ஓரு பத்து நாள் முன்பு என் சினேகிதரைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிருந்தேன். மூச்சுத் திணறலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்; தொடர்ந்து இரண்டு நாளாகச் சிகிச்சை பெறுகிறார். துணைக்கு மனைவி இருந்தார்.
நான் போனபோது, அவர் அசாத்திய டென்ஷனில் இருந்தார். மருத்துவக் காப்பீட்டுக்கான விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு, தொகை வரவில்லை; அதே சமயம் நிராகரிக்கப்படவுமில்லை. பிற்பகலில் வீட்டுக்குப் போய் விடலாமென்று நிபுணர் தெரிவித்தாகிவிட்டது. பையன் தாயாரின் காசோலையை எடுத்துக் கொண்டு (அதன் அட்டை சேதமாகி, மாற்று அட்டைக்காகக் காத்திருக்கிறார்) காலை ஒன்பது மணிக்கு வங்கிக்குச் சென்றிருக்கிறான். பத்து மணி ஆகியும் வரக் காணோம்!
கைபேசியில் பேசப் பேச, சினேகிதர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளானார். வங்கியில் கணினியைத் திறக்க முடியவில்லையாம்; செர்வர் பிராப்ளமாம்!
எப்படியோ பையன் மன்றாடிக் கேட்டு, தொகையுடன் (ரூ.10,000) திரும்புகையில் தாமதமாயிற்று. நண்பர் "டிஸ்சார்ஜ்' ஆகும் நேரத்துக்கு அரை மணி முன்னர்தான், காப்பீட்டு நிறுவனமும் ஒப்புதல் அளித்தது வேறு விஷயம்.
இதேபோன்ற அனுபவம் ஒன்று, என் நெருங்கிய உறவினருக்கு ஏற்பட்டது. அது சற்று பெரிய ஆஸ்பத்திரி. ஏற்கெனவே பல ஆண்டுகளாகப் பழக்கமிருந்தும், முன்பணமாகத் தொகை கேட்டார்கள். கடன் அட்டையை ஏற்கவும் செய்தார்கள். ஆனால் அதற்கான "பற்று' சில நாளிலேயே வந்து விடக்கூடிய சூழ்நிலை. இங்கும் நோயாளி ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறும் சமயத்தில்தான் காப்பீட்டுத் தொகை கிடைத்தது (முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியில், முன் பணம் ஏதும் கேட்கவில்லை; ஆனால் எந்த அட்டையையும் அவர்கள் பெற்றுக் கொள்வது கிடையாது).
மேற்படி, இரண்டு நிகழ்வுகளும் ஓர் உண்மையை வெளிப்படுத்தின. வீட்டில் யாருக்கு, எப்போது, என்ன வியாதி வரும் என்பதை யாரும் கணிக்க இயலாது. முதியோர்களும், குழந்தைகளும் இருக்கும் பட்சத்தில் இதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டால், கிட்டத்தட்ட "பிணைக் கைதி' போலத்தான். "ஸி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்ப்போம்'. "எதற்கும் எக்ஸ்ரே எடுக்கலாம்' - போன்ற நிலைமைக்குத் தயாராக இருக்க வேண்டும்.
சில ஆஸ்பத்திரிகளில், இவற்றுக்கு வேறு இடம் போகச் சொல்லுவார்கள். அங்கு பணத்தைத் தனியாகச் செலுத்த வேண்டி வரும். உடனடித் தேவையை எப்படிச் சமாளிப்பது?
நடைமுறையில், ஓர் அவசரம் என்று வரும்போதுதான், விபரீதமாக வங்கிகளும் "ஒத்துழையாமை இயக்கத்தில்' பங்கேற்பது போலச் செயல்படுகின்றன. நோயாளியைத் தனியே விட்டுவிட்டு, துணை இருப்பவர் எப்படிப் போவது? என்னதான் டாக்டர் நர்ஸ் எல்லாரும் இருந்தாலும், ஓர் அச்ச உணர்வு நோயாளியைச் சூழ்ந்து கொண்டேயிருக்குமே?
என் சொந்த அனுபவம் வேறு "கதை', போன வாரம் தபால் ஆபீசில் முதிர்வடைந்த என்.எஸ்.ஸி. செர்டிபிகேட்டின் தொகையை பெற்று வரப் போயிருந்தேன். இத்தனைக்கும் ஒரு வார முன்பே, என்னென்ன கொண்டு வர வேண்டும் என்று தெரிந்து வைத்திருந்தேன் (டஅச அட்டை; முகவரிச் சான்றிதழ்). ஆட்டோவில் ஏறி அங்கு சென்றால், "மன்னிக்கவும், கவுன்ட்டர்கள் வேலை செய்யவில்லை. செர்வர் கோளாறு' என்ற பலகை வரவேற்றது. மனம் நொந்து போனேன். நல்ல காலம்; போஸ்ட் மாஸ்டர், என் நிலைமையைப் புரிந்து கொண்டு செர்டிபிகேட்டில் கையெழுத்து பெற்றுக் கொண்டார் - தேதி போடாது.
"பழுது பார்க்கிறார்கள். இரண்டு மணிக்குள் சரியானால், வீட்டுக்கே பணம் கொடுத்தனுப்புகிறேன் என்று ஆறுதல் சொன்னார். உள்ளபடிக்கே பிற்பகல் எனக்கு தொலைபேசியில் தெரிவித்து, ஓர் ஊழியரிடம் தொகையை இல்லத்துக்கே கொடுத்தனுப்பினார்.
பழைய காலம் மாதிரி இல்லை. வசதிகள் பெருகி விட்டன என்பதெல்லாம் உண்மையே, ஆனால் எல்லாவற்றுக்கும் "விலை' உள்ளது. ஆஸ்பத்திரியில் பரிசோதனைகள் செய்யப்படும் போதுதான், அதன் "விலை' புரிகிறது. அந்த நேரம் பார்த்து, வங்கியில் பணம் எடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது. ஏற்கெனவே உடற்கோளாறு; "டேக் இட் ஈஸி' என்று பாடவா முடியும்?
40 வருடத்துக்கு முன், எல்லா வங்கிகளும் தொடர் வேலைநிறுத்தம் செய்தபோது கிராமவாசி ஒருவர் மனைவியிடம், அலமாரியிலிருந்து பணம் எடுப்பது போல் கார்ட்டூன், ஒரு வாரப் பத்திரிகையில் போடப்பட்டிருந்தது, "இதுதான் செளகரியம்' என்று சொல்வார் அவர் (அப்போது மருத்துவச் செலவுகள் இந்த அளவு இல்லை). அதே போன்ற சூழ்நிலைதான் இப்போதும் இருக்கிறதோ எனத் தோன்றுகிறது. ஓர் அவசரத் தேவைக்கு குறைந்தது ரூ.30,000மாவது வீட்டில் வைத்துக் கொள்வது முக்கியம் என்று சொல்லத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக