சனி, 19 ஏப்ரல், 2014



       போக்குவரத்துக் கழக அதிகாரிகளே!!! இஃது உங்கள் கவனத்திற்கு.

சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்துக்குள் திடீரென எஞ்சின் அருகிலிருந்து புகைக் கிளம்பியது; ஓட்டுநர் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கிவிடுமாறு எச்சரிக்கிறார். 36 பயணிகள் தங்கள் உயிர்களைக் கையில் பிடித்தபடி அலறியடித்து ஓடி தப்பிக்கின்றனர். சேலத்தில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தில் திடீரென புகைக் கிளம்புகிறது; ஓட்டுநர் வண்டியை சாலையோரம் நிறுத்திவிட்டு பயணிகளை இறங்கிவிடுமாறு எச்சரிக்கிறார். 38 பயணிகள் வண்டியைவிட்டு இறங்கியோடி தங்கள் உயிர்களைக் காத்துக்கொள்கின்றனர். இவ்விரு அரசுப்பேருந்துகளும் பயணிகள் இறங்கிய அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் தீயணைப்பு வீரர்கள் வரும் முன்பே முற்றிலுமாக தீ ஜுவாலைக்கு இரையாகி எரிந்துபோகின்றன. ஒரே வாரத்திற்குள் இரு பேருந்துகள் தீப்பிடிப்புச் செய்திகள்….. நாளிதழ்களைப் புரட்டினாலும் வானொலியைத் திறந்தாலும், தொலைக்காட்சியினைப் பார்வையிட்டாலும் இணைய தளத்தைத் திறந்தாலும் அரசுப் பேருந்துகள் எரிந்தன,முற்றிலும் எரிந்து நாசமாகின என்ற செய்திகள் சற்றே நம்மைச் சிந்திக்கச் செய்கின்றன.அரசுப் பேருந்துகள் பாதுகாப்பானவை என்ற நிலை தடம் தெரியாமல் சென்றுகொண்டிருக்கின்றனவோ என்ற அச்சம் ஏற்படாமலில்லை. ஏதோ ஆண்டுக்கொன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தேறிக்கொண்டிருந்த பேருந்து தீப்பற்றி எரிந்த நிகழ்வு இன்று அசாதாரணமாக வாரத்திற்கு இரண்டு என்ற நிலையை அடைந்துள்ளது அரசுப்பேருந்தை நம்பி பயணிக்கும் ஏழை மற்றும் நடுத்தர பயணிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

அஃது ஏன்? இரண்டு பேருந்துகளிலும் உயிரிழப்பு ஏதுமில்லை என்பது ஓர் ஆறுதல்; இறைவனின் சித்தம்.இவ்விரு நிகழ்வுகளிலும் விலைமதிப்புமிக்க உயிர் பலி நேர்ந்திருந்தால் என்ன நிலையாயிருக்கும்? சற்றே சிந்தித்து சீர்தூக்கிப் பாருங்கள்.அவ்வாறு ஓர் அசம்பாவிதம் நடந்திருந்தால் அதிலும் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலையிட்டு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து அரசிடம் அறிக்கைக் கேட்டு கெடுவிதித்து….இத்யாதி….இத்யாதி….. அரசுத் தலைமை வழக்கறிஞர் அரசிடம் அவசரம் அவசரமாக அறிக்கையைப் பெற்று வழிமொழிந்து அதனை நீதியரசர்கள் ஏற்று புதியதாக கட்டுப்பாடுகள் விதிக்கும் ஒரு இக்கட்டான சூழ்நிலை அரசுக்கு ஏற்படத்தான் வேண்டுமா? அதுவரையிலும் அரசுப் பேருந்துகளின் நிலை இவ்வாறுதான் தொடர வேண்டுமா?

எங்கு போய்கொண்டிருக்கிறது தமிழக போக்குவரத்துத்துறை? எதற்கு இருக்கின்றன வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள். எதற்கு இருக்கின்றனர் வாகன ஆய்வாளர்கள்? இவர்கள் தமது கடமைகளைச் சரிவர செய்கின்றனரா? ஏனிந்த இழி நிலை.? விடைதான் நமக்கே தெரியுமே? தனியார் நிறுவனங்களிடம் பேருந்துகளுக்கு கூண்டு கட்டவதைத் தாரை வார்த்தன இன்றைய நேற்றைய அரசுகள்.விளைவு அரசுப்பேருந்துகள் நிமிடங்களில் அக்னியின் கோரக்கரங்களுக்கு இரையாகின்றன.

அரை சதத்தைத் தாண்டிய என் நினைவுக்கு வருகிறது நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்தில் டி.வி.எஸ். நிறுவனத்தின் உறுதியான கூண்டுகளைப்பற்றி. அந்நிறுவனத்தின் பேருந்துகள் விரும்பத்தகாத வகையில் தீப்பிடிக்க நேர்ந்தால் அப்பேருந்து முழுவதுமாக எரிந்து தீரவேண்டுமானால் 24 மணி நேரமாகுமாம்.என்னைவிட இன்னும் வயது போன மூத்தவர்களுக்கு இது பற்றி இன்னும் அதிகமான அனுபவமிருக்கும். இது யதார்த்தம்.

இது போன்ற நிகழ்வுகளுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பற்றி மட்டும் அலசுவோம். போக்குவரத்துக் கழகங்களில் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது பிரதான விவாதப் பொருளாகிறது.அதிகாரிகளின் (எல்லா அதிகாரிகளையும் கூற முடியாது., அவர்களிலும் நல்லவர்கள் பலர் இருக்கத்தான் செய்கின்றனர்) பொறுப்பற்ற , மெத்தனப்போக்கு, சுரண்டல், கீழ்நிலைப் பணியாளர்களை அளவுக்கும் அதிகமாக வேலை வாங்கிக் கசக்கிப்பிழியும் செயற்பாடுகள், போதிய நேரம் கொடுக்காமல் அவசரம் அவசரமாக வேலைகளை முடிக்க கட்டாயப் படுத்துதல், நேரம் தவறாமை கடைபிடிக்காதிருத்தல், அறைகுறையாக பழுது நீக்கப்பட்ட பேருந்துகளை வழித்தடங்களில் இயக்கிச்செல்ல ஓட்டுநர்களை வலியுறுத்துதல் இன்னும் பல காரணங்கள் விபத்துக்களை ஏற்படுத்த வழிவகுக்கின்றன. எங்கும் எதிலும் அவசரம். உதாரணத்திற்கு ஒரு டயர் பஞ்சரானால் அதனை பஞ்சர் ஒட்டி 4 மணி நேரம் உலரவைக்கவேண்டும், அதன் பின்னர் அதனை வண்டியில் பொருத்தி ஓடச்செய்யவேண்டும். இங்கு என்ன நிகழ்கிறது? காய்வதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாமல் உடனடியாக வண்டியில் மாட்டச்செய்கின்றனர். அது போகின்ற வழியில் மீண்டும் பஞ்சராகி நடுவழியில் நிற்கின்ற அவலம்.இது பஞ்சரோடு நின்றுவிடுவதில்லை. அரசுக்கு அன்றைய தினம் கிடைக்கின்ற வருவாயிலும் மண்ணை அள்ளிப்போடுகின்றது என்பதை அதிகாரிகள் உணர்ந்து கொள்ள மறுக்கின்றனர்.

பல போக்குவரத்துக் கழகங்களில் பேருந்துகளில் ஏற்படும் குறைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் கேட்கும் டிரிப் ஷீட்டுகளை அனுமதிப்பதேயில்லை. இக்கழகங்களிலுள்ள வாகன ஆய்வாளர்கள் வண்டிகளை ஓட்டிப்பார்த்து ஆய்வுகள் செய்வதில்லை.. வட்டார போக்குவரத்து அலுவலர்களும் எஃப்.சி-க்குச் செல்லும் பேருந்துகளை ஓட்டிப்பார்த்து ஆய்வுகள் செய்வதில்லை. தகுதிச்சான்றிதழ் பெறுவதற்காக அரசுப்பேருந்துகளில் இவர்கள் செய்யும் ஒரே வேலை பெயிண்ட் தடவுதல் மட்டுமே.விளைவு பேருந்துகளின் மேற்கூரைப் பெயர்ந்து காற்றில் பறக்கின்றது. மழைக்காலங்களில் பேருந்துக்குள் தண்ணீர். பக்கவாட்டுத் தகரங்கள் கிழிந்து சாலைகளில் செல்லும் பாதசாரிகளை சாகடிக்கின்றது.அருகில் செல்லும் வாகனங்களைப் பதம் பார்க்கின்றது. வாசற்படியில் இறங்கும் பயணிகளின் கை, கால்களை கிழிந்த தகடுகள் கிழித்து இரத்தக்காயம் ஏற்படச்செய்கின்றது.இருக்கைகளில் இருந்தால் பயணிகளின் பின்புறத்தை ஆணிகள் குத்திக்கிழிக்கின்றன. இன்னும் இன்னும் எத்தனையோ!

மோட்டார் வாகன விதிமுறைகளுக்கு மாறாக ஓட்டுநர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படாமல் தொடர்ந்து பணிபுரியச்செய்வது. நூறு பேருந்துகளுக்கு 250 ஓட்டுநர், 250 நடத்துனர், 250 தொழில்நுட்பப் பணியாளர்கள் அவசியம் இருத்தல் வேண்டும் என்ற விதியை ஆதாயங்களுக்காக பின் பற்றாது பயணிகளின் உயிருடன் விளையாடுவது. ஓய்வு பெறுபவர்களுக்குப் பதிலாக பணியாளர்களைத் தேர்வு செய்யாமல் இருக்கின்ற ஒரு சில பணியாளர்களையும் அத்துமீறி வேலைக்கு நிர்ப்பந்திப்பது.குறிப்பாக ஏற்கெனவே குறிப்பிட்டது போல் அவசரம் அவசரமாக பணிகளை மேற்கொள்ளச் செய்வது அசுர வேகத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நடந்துகொண்டிருக்கிறது.

பொறுப்பற்ற ஒரு சில அதிகாரிகளின் கவனக்குறைவே எத்தனையோ விபத்துக்களுக்கும் திப்பற்றி எரிவதற்கும் பிரதான காரணமாக திகழ்கின்றது என்பதை அறுதியிட்டுக் கூறலாம். எப்படி? எதனால்? இன்னும் சிலவற்றையும் கோட்டிட்டுக் காட்டலாம்.அவை பின்வருமாறு:-

அரசுப்பேருந்துகள் முழுக்க முழுக்க இப்போது நவீனம் என்ற பெயரால் அளவுக்கதிகமான கண்ணாடிகள், ஃபைபர், மைக்கா, நெகிழிகளின் (பிளாஸ்டிக்) ஆக்கிரமிப்புக்கு விடப்பட்டுவிட்டன. இரும்புத் தாதுக்களின் பயன்பாடு படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு வருகிறது. இருக்கைகள் முற்றிலுமாக ஃபைபர்களினால் செய்யப்பட்டு பொருத்தப்படுகிறது. இருக்கைகள் ரெக்ஸின் மேலுறைக்குள் ஸ்பாஞ்ச் வைத்து தைத்த காலங்கள் மலையேறிப்போய் தையல் வேலைகள் புறக்கணிக்கப்பட்டு தற்போது பசை கொண்டு ஃபைபர்களின் மேல் ஒட்டப்படுகிறது. மேற்கூரையின் உட்பகுதி, ஜன்னல் பகுதி, அதன் கீழ் பகுதி என எங்கு பார்த்தாலும் மைக்காவின் ஆதிக்கம் அரங்கேற்றப்பட்டு வருடங்கள் பலவாகிவிட்டன. விளைவு மேற்கூரையின் தார் சீட்டுகள் சரியானபடி ஒட்டப்படவில்லையானால் ஒரே நாள் மழையில் தண்ணீர் உட்புகுந்து உள் பகுதிலுள்ள மைக்காக்கள் மனித உடலில் ஏற்படும் கொப்புளங்களை போல் ஊதிப் பெருத்துவிடுகின்றன.ஜன்னல்களில் பொருத்தப்படும் கண்ணாடிகளின் சட்டங்கள் பேருந்துகள் இறங்கிய சில தினங்களுக்குள்ளாகவே ஸ்க்ரூக்கள் உருவி, அவை கவனிக்கப்படாமல் அதன் ஓட்டை வழியே ஜன்னலின் பக்கவாட்டுக்களில் தண்ணீர் இறங்கி அந்த மைக்காக்களும் ஊதிவிடுகின்றன. மேலிருந்து கீழிறங்கும் கண்ணாடிகளில் உள்ள கிளிப்புகள் கூட நெகிழிகளால் தயாரிக்கப்படுவதால் நான்கு நாட்களில் அக்கிளிப்புகள் உடைந்து போய்விடுவது அதைப் பராமரிக்காமல் விடுவதால் அக்கண்ணாடிகளை ஏற்றவும் இறக்கவும் முடியாது பயணிகள் காற்றின்றி புழுங்கி அவதியுறுவதும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்டன.

எனவே விலை மதிப்புமிக்க மனித உயிர்களைக் கவனத்தில் கொண்டு விதிமுறைகளைக் கடைபிடித்து பேருந்துகளை நன்கு பராமரிக்கப் போதிய பணியாளர்களை நியமித்து பொறுப்பின்றியும் ஊழல்களில் ஈடுபட்டும் அரசுக்கு இழப்புகளை ஏற்படுத்தும் அதிகாரிகளக் கண்டறிந்து அவர்களைத் தண்டிக்க வேண்டியது அரசின் தலையாயக் கடமை. ஒரு மனிதனுக்கு அன்றாடம் எட்டு மணி நேரம் ஓய்வு அவசியம் என்பதைப் போல தொடர்ந்து நீண்டதூரம் செல்லும் பேருந்துகளுக்கும் போதிய ஓய்வு நேரம் கொடுக்கவேண்டும். ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்களில் கூண்டுகட்ட கொடுப்பதைக் கண்டிப்பாக கைவிடவேண்டும். நெகிழிகள், ஃபைபர்கள், மிதமிஞ்சிய கண்ணாடிகளின் பயன்பாட்டை முற்றிலுமாக களையப்படவேண்டும்.ஜன்னல்கள் முன்பு போல் நமது நாட்டின் கால நிலையைக் கருத்திற்கொண்டு ஷட்டர்களாக அமைத்தல் வேண்டும்.

ஓட்டை உடைசல் என அரசுப்பேருந்துகளுக்கு ஏன் அவப்பெயர் வந்தது? தனியார் பேருந்துகளுக்கு ஏனிந்த அவப்பெயர் ஏற்படவில்லை. ஒரு கணம் சிந்திப்போம். ஓட்டை உடைசல்களாக அரசுப் பேருந்துகளை மாற்றுவதில் அதன் ஓட்டுநர்களுக்கும் பெரும் பங்கு உண்டு என்றால் அது மிகையில்லை. அரசுப்பேருந்து தானே என்ற அலட்சியம். ஒரு புதிய பேருந்து இறங்கி மூன்று நாட்களுக்குள் அதனை ஆங்காங்கே இடித்து உராயச்செய்து நாசம் செய்துவிடுகின்றனர் பல ஓட்டுநர்கள். அடுத்து பராமரிப்பு. தனியார் பேருந்துகளில் ஏற்படும் சிற்சிறு குறைகள் அவ்வப்போது களையப்படுகிறது.ஆனால் அரசுப்பேருந்துகளில் அவ்வாறில்லை. தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைக்கு உத்தரவாதம் இல்லாததாலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டுவிடுவோம் என்ற பயத்துடனும் பொறுப்புடன் பணியாற்றுகின்றனர். தனியார் பேருந்துகளில் பக்கவாட்டுக்களில் உரசல் இல்லை, தகரங்கள் கிழிந்து தொங்குவதில்லை. டயர் பஞ்சராகி நடுவழியில் நிற்பதில்லை.

ஒரு தனியார் பேருந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேல் உழைக்கின்றது. ஓர் அரசுப் பேருந்து ஆறு அல்லது ஏழே ஆண்டுகள் உழைப்போடு அற்ப ஆயுளில் மறைகிறது. ஏன்? உறுதியான பல நல்ல பேருந்துகள் ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன என்ற ஒரே காரணத்திற்காக உடைப்பதற்கு வழங்கப்படுவது ஏன்? சரியான பராமரிப்பு செய்து அவற்றை நீண்ட காலம் ஓட்டச்செய்ய ஏன் முடியவில்லை.இதற்கும் அரசின் அக்கறையின்மை என்ற இழிநிலையே காரணம். முன்பு கழிக்கப்படும் பேருந்துகள் ஆ.சி. புத்தகத்துடன் ஓட்டப்படும் நிலையில் ஏலமிடப்பட்டன. அவற்றை ஏலமெடுப்போர் 20-25 ஆண்டுகள் ஆன நிலையிலும் இன்றும் அற்புதமாக ஓட்டுகின்றனர்.அஃது எவ்வாறு? பராமரிப்புத்தான்.நீதிமன்றம் கூட எல்லா நிலையிலும் பழைய பேருந்துகளைத் தடை செய்யவில்லை.அவற்றை சிறப்பாக பராமரித்து செயற்படுத்தவே அறிவுறுத்துகின்றது. இலட்சக்கணக்கில் கொடுத்து அடிச்சட்டம் வாங்கி அதனை இன்னும் பல மடங்கு கொடுத்து கூண்டுகட்டி செலவு செய்த தொகையை மீட்டி எடுக்கும் முன்னரே ஓட்டை உடைசல் என பெயர் சூட்டி அதனை ஒதுக்குவது ஏன். அதனை ஆர் சி புத்தகத்துடன் மீண்டும் உபயோகிக்க நல்ல விலைக்கு கொடுக்காது உடைத்து நொறுக்குவதற்கு இந்த அரசு ஏன் அனுமதிக்கின்றது?

இறுதியாக அரசையும் போக்குவரத்துக் கழகங்களையும் கேட்டுக் கொள்வது….. பேருந்துகளைப் பராமரியுங்கள்.தரமான உதிரிப்பாகங்களைக் கொள்முதல் செய்யுங்கள்.வேலைக்குப் போதிய ஆட்களைப் பணியமர்த்துங்கள்.தனியாருடன் இரகசியமாக கைகோர்த்துக்கொண்டு ஊழல்களிலும் கையாடல்களிலும் ஈடுபட்டு அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகளைக் களையெடுங்கள். அவர்களை வேலையிலிருந்தே தூக்குங்கள்.அசிரத்தையாக செயற்படும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குத் தக்க அறிவுரை வழங்குங்கள்.பயணிகளின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து அரசுப் பேருந்துகளின் மீதான நம்பகத்தன்மையை அதிகரியுங்கள். இதுவே எமது வேண்டுகோள். இன்றைய நமது அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் அவல நிலைய மிக தெளிவாக பதிவு செய்து இருக்கிறிர்கள் மிக்க நன்றி,

கூண்டு கட்டுதல்.
என்று முந்திய ஆட்சியாளர்கள் 2007ல் தனியாருக்கு தாரைவார்தார்களோ அன்றே பேருந்துகளின் உறுதி தன்மை கேள்விக்குறி ஆகிவிட்டது, நாம் பயணம் சேயும் பேருந்து அழகாக இருப்பதைவிட பாதுக்காப்பனதாகவும் நமது தட்ப வெட்ப சீதோசன நிலைக்கு தகுந்தார்போல் கூண்டு கட்டப்படவேண்டும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள் ஐந்து முக்கியமான இடங்களில் (மத்திய தொழிற்கூடம் திருவனந்தபுரம், கோழிகோடு, அலுவா, மாவெளிகரா, எடப்பல்) இந்த இடங்களில் ஒரே மாதிரியான உறுதியான வடிவம் கொடுக்கப்படுகிறது ஆனால் இங்கோ ஓவ்வொருவரு மண்டலமும் இன்று வரையில் தனி தனி வடிவில் வெளிவந்தன அதனால் ஓரு மண்டலத்தில் இருந்து வேறு மண்டலத்துக்கு புதிதாக வரும் பேருந்தில் வெளிப்புறம் மற்றும் ஜன்னல் கண்ணாடி உடைந்தாலோ அதை மாற்றுவதற்கு இவர்களிடம் அது போன்ற உதிரிப்பாகங்கள் இல்லை அதற்கு பதிலாக அரைகுறை கண்ணாடிகள் ஜன்னலில் தகரங்கள் அல்லது மைகா கொண்டு அந்த இடத்தை மறைகிறார்கள் அந்த இடத்தில் அமரும் பயணியின் நிலைமைதான் பரிதாபத்துக்குரியது. இன்று தனியார்வசம் ஒப்படைத்தபிறகு சென்ற ஆண்டு ஒரே வடிவில் பேருந்துகள் வெளிவந்தன இதை என் அனைத்து மண்டலங்களும் பின்பற்றி ஒரே மாதிரியான வடிவில் பேருந்துகளை வடிவமைகலாமே... தனியாரிடம் செல்வதற்கு பதிலாக அனைத்து மண்டலங்களின் கூண்டு கட்டும் பிரிவையும் நவினபடுத்தி ஒரே மாதிரியான கூண்டுகள் கட்டலாம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் அனைத்து பேருந்துகளும் ஒரே மாதிரியான வடிவில் இருக்கும். முதலில் கண்ணாடி ஜன்னல்கள் வைத்து வடிவம் கொடுத்துவிட்டு பின் 4 ஆண்டுகள் கழித்து ஷட்டர் மாடல்களாக மாற்றி இருவேளை செய்யவும் வேண்டாம்.

இருவேளை முதலில் கண்ணாடி ஜன்னல்கள் வைத்துவிட்டு பிறகு ஷட்டர் மாடல்


நன்றி தண்டபாணி அவர்கள்

டிரிப் ஷீட்டுகள் / பராமரிப்பு
டிரிப் ஷீட்டுகளில் ஓட்டுநர் தங்கள் குறைகளை எழுதி வைத்தாலும் அதை சரிபார்பதற்கு போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் பணிமனையில் இல்லை, அதுமட்டுமல்ல இன்றைய தொழில்நுட்பம் தெரிந்த பணியாளர்களும் இல்லை இன்று புதிய பேருந்துகள் Inline Mechanisam அதை பணிமனையில் உள்ளவர்கள் ஏதேனும் கோளாறுகள் ஏற்பாட்டால் சரிசெய்வார்கள் ஆனால் இதற்கு முன்பு வாங்கப்பட்ட EDC வகை பேருந்துகளை சரிசெய்வதற்கு நாம் அசோக்லேயலாண்டின் சேவை மையத்தையே அணுகவேண்டும். தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இன்றைய தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் அளிப்பதற்கு அரசு எந்த அக்கறையும் காட்டவில்லை, பின்பு ஏன் இவர்கள் சொகுசு பேருந்துகளை இயக்க ஆசைப்படுகிறார்கள், பின்பு அந்த பேருந்துகளையும் வெகு விரைவில் காயலான்கடைக்கு அனுப்பிவிடுவார்கள் பாராமரிப்பு பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாமல் புதிய தொழிநுட்பம் கொண்ட பேருந்துகள் வாங்குவது முட்டாள்தனமான முடிவு. நான் சென்னையில் பயணம் செய்த பேருந்தின் முகப்புவிளக்குகள் ஒன்று எரியவில்லை அதற்கு அந்த பணிமனையின் உயரதிகாரி ஓட்டுனரிடம் சொல்லிருகிறார் அவன் அவன் ரெண்டு லைட்டும் இல்லாம ஒட்டுறான் நீ என்னபா போ ஒன்னும் ஆகாது.

கழிக்கப்பட்ட பேருந்துகள்
முதல்வர் உத்தரவு காற்றில்தான் பறக்கிறது. பேருந்துகள் கழிப்பதில் சரியான அணுகுமுறையை அதிகாரிகள் கடைபிடிக்கவில்லை நீங்கள் கூறுவதுபோல் ஆர்.சி புத்தகங்களுடன் விற்று இருக்கலாம் அனால் இங்கு எல்லாம் தலைகீழ் ஓரு பணிமனைக்கு பத்து புதிய பேருந்துகள் வந்தால் உடனே ஐந்து பழைய பேருந்துகளை கழித்துள்ளனர், பேருந்தின் பதிவு எண் வரிசையில் கழிக்கவில்லை 7094 கழிக்கபட்டுள்ளது ஆனால் 7055, 6904 போன்ற பழைய பேருந்துகள் இன்னும் வழித்தடத்தில் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது கழிப்பதிலும் நிறைய குளறுப்படிகள் நல்ல உதிரிப்பாகங்களை எடுத்து வைத்துள்ளோம் என்கிறார்கள் இதில் உதிரிபாகங்களில் முன்புறத்தில் உள்ள கண்ணாடி மற்றும் பயன்படுத்திக் கொள்ளலாம் மற்ற பழைய பாகங்களை இந்த புதிய 12m பேருந்துகளுக்கு பயன்படுத்த முடியாது பின்பு இக்கழிவுகளை அப்புறபடுதுதல் என்ற பெயரில் ஓரு கணிசமான தொகையை பார்க்கலாம் என்று அதிகாரிகள் முடிவு செய்து இருப்பார்கள் போலும்.

TN-01N-214 இன்னும் நல்ல நிலையில் ஒடிக்கொண்டுஇருக்கிறது

Link

டி.வி.எஸ். நிறுவனம்
நான் இந்த நிறுவனத்தை பற்றி கேள்விபட்ட ஒன்று ஓட்டுனர் பேருந்தை இயக்க ஆரம்பிக்கும்போது பேருந்து இயங்கவில்லை என்றால் அந்த பேருந்தை ஆட்கள் கொண்டு பின்னாலிருந்து தள்ளி இயக்ககூடாது அதற்கு பதில் மாற்றுபேருந்து தான் இயக்கப்படவேண்டும், இன்னொரு எல்லோரும் அறிந்த செய்தி அந்நாளில் மதுரை நகரில் குதிரை வண்டிகள் அதிகம் குதிரையின் லாடங்கள் பட்டு டயர் பஞ்சுரகிவிடகூடாது என்பதற்காக மின்காந்தங்கள் பொறுத்தப்பட்ட ஓர் வண்டி நகர பேருந்துகள் இயக்கத்துக்கு முந்தாகவே சென்று பாதையில் உள்ள இரும்பு பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து வந்துவிடுமாம்.

--அருண் __________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக