சனி, 19 ஏப்ரல், 2014

மன உளைச்சலில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்

  மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.

              

Follow Us

மன உளைச்சலில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்

First Published : 12 May 2010 03:15 AM ISTதின மணி நாளிதழுக்கு நன்றி.

திருச்சி, மே 11: ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ. ஓட்டியாக வேண்டும் என்ற அதிகாரிகளின் கெடுபிடியால், என்ன செய்வதென்று தெரியாமல் மன உளைச்சலுடன் பணியாற்றி வருகின்றனர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் திருச்சி மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ், திருச்சியில் மலைக்கோட்டை, தீரன் நகர், புறநகர் 1,2, லால்குடி, துறையூர், முசிறி, கரூர் புறநகர், நகரம், பெரம்பலூர், அரியலூர், ஜயங்கொண்டம், துவரங்குறிச்சி, மணப்பாறை ஆகிய இடங்களில் போக்குவரத்துக் கிளைகளோடு சேர்த்து பணிமனைகள் உள்ளன.
இந்தப் பணிமனைகளிலிருந்து 1200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 3,000 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் பகுதிகளில் தனியாருக்கு இணையாக பேருந்துகளை ஓட்டி அரசுக்கு வருவாயை ஈட்டித் தருகின்றனர் அரசுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநர்கள்.
ஆனால், கடந்த பல மாதங்களாக மேலதிகாரிகளின் சில கெடுபிடிகளின் காரணமாக தாங்கள் மன உளைச்சலில் இருப்பதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர் ஓட்டுநர்கள்.
இதற்கு அவர்கள் கூறும் காரணங்களில் முதலிடத்தில் இருப்பது ஒரு லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ. ஓட்டியாக வேண்டும் என்ற கெடுபிடிதான்.
எவ்வளவு கட்டுப்பாடாக ஓட்டினாலும் லிட்டருக்கு 4.5 முதல் 5 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்ட முடியாது. ஆனால், லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டியாக வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருக்கின்றனர்.
அவர்கள் கூறுவதை மறுத்துப் பேசினால் உடனடியாக "மெமோ' கொடுத்து விடுகின்றனராம்.
இந்த நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பேருந்துகளை வடிவமைத்து வழங்கிய ஒரு தனியார் நிறுவனம் லிட்டருக்கு 4.5 கி.மீ. ஓட்டினாலே, அது தங்கள் நிறுவனத்தின் தயாரிப்புக்கு கிடைத்த வெற்றி எனவும், மற்றொரு நிறுவனம் 4 கி.மீ. ஓட்டினாலே அது தங்கள் தயாரிப்புக்கு கிடைத்த மரியாதை என்றும் கூறி வருகின்றன.
ஆனால், உயர் அதிகாரிகளிடம் பாராட்டைப் பெற வேண்டும் என்பதற்காக, எங்களைக் கசக்கிப் பிழிகின்றனர் பணிமனைகளில் உள்ள அதிகாரிகள் என்று குமுறுகின்றனர் ஓட்டுநர்கள்.
இவ்வாறு லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்ட முடியாத ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் சிலர் கடுமையான தண்டனையும் அளித்துள்ளார்களாம்.
உதாரணமாக, லிட்டர் டீசலுக்கு 6 கி.மீ. ஓட்டமுடியவில்லை என்ற காரணத்துக்காகவே அண்மையில் பணியில் சேர்ந்த சில ஓட்டுநர்களை "முட்டிப் போட' வைத்த கொடுமையும் ஒரு பணிமனையில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கின்றனர் ஓட்டுநர்கள்.
புறநகரில் நிலைமை இப்படி என்றால் மாநகரில் நிலைமை மேலும் மோசமாகவே உள்ளது.
லிட்டருக்கு 6 கி.மீ. ஓட்டவில்லை என்ற காரணத்தைக் கூறி, விரைவில் பணி ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் பயிற்சி ஓட்டுநர் பேருந்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்களாம்.
பயிற்சி ஓட்டுநர் பேருந்தையும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு செல்லாமல், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் ஓட்டுமாறு கூறுகிறார்களாம்.
இந்த இடங்களில் பேருந்தை எப்படி ஓட்டினாலும் 6 கி.மீ.க்கு ஓட்ட முடியாது. ஆனால், அதிகாரிகள் பேருந்தை ஓட்டுவதற்கு தகுதி இல்லை என்று கூறுவதால், என்ன செய்வதென்று தெரியாமல் புலம்பி வருகின்றனர் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்.
உதிரிப் பாகங்கள் இல்லை:
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள பேருந்துகளுக்கு தேவையான உதிரிப் பாகங்கள் இல்லை. உதாரணமாக, 120 பேருந்துகள் உள்ள பணிமனை ஒன்றில் 10 பேருந்துகளுக்கு உரிய உதிரிப் பாகங்கள் மட்டும் இருக்கின்றதாம்.
ஒரு பேருந்தில் கோளாறு ஏற்பட்டால் மற்றொரு பேருந்திலிருந்து கழற்றி எடுத்து மாற்றிப் போடுகிறார்களாம். இப்படி செய்வதை வழக்கமாகக் கொண்டால், பேருந்துகளை எப்படி நாங்கள் திறமையாக ஓட்டமுடியும் என்கின்றனர் பேருந்து ஓட்டுநர்கள்.
வருவாய் இழப்பு: திருச்சி மாநகரில் தற்போது இயக்கப்பட்டு வரும் நகரப் பேருந்துகளில் 50 சதவீதப் பேருந்துகள் "எல்.எஸ்.எஸ்' என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகின்றன.
வழக்கமான கட்டணத்தைக் காட்டிலும் இந்தப் பேருந்துகளில் கூடுதலாக 50 பைசா வசூலிக்கப்படுகிறது. 50 பைசா கட்டணம் கூடுதல் என்பதைக் கூறி, அந்தக் காசை வாங்குவதற்குவே பெரும்பாடுபட வேண்டியிருக்கிறது.
மன உளைச்சலில் பணியாற்றி வரும் தங்களின் குறைகளைத் தீர்க்க, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விரும்புகின்றனர் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக